Total Pageviews

Blog Archive

Wednesday, 11 April 2012

அணு ஆயுத பலத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாகவும், இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகளவு அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமைதி மற்றும் விடுதலைக்கான சர்வதேச பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள "என்றென்றும் அழிவைத் தேடி: உலகைச் சுற்றி அணு ஆயுத நவீனமயமாக்கல்” எனும் அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ரூ. 12,500 கோடி அளவுக்கு அந்நாடு செலவிடுகிறது.
குறிப்பாக புளுட்டோனியம் உற்பத்தியை அதிகரிப்பது, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணைகளைத் தயாரிப்பது, அவற்றை சோதனை செய்வது ஆகியவற்றில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் இலகுரக மற்றும் புளுட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு ஆயுதத் தயாரிப்பில் அந்நாடு கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக புளுட்டோனியம் உற்பத்தித் திறனை பாகிஸ்தான் விரிவுபடுத்தியுள்ளது.
விமானத்திலிருந்து போடப்படும் அணு குண்டுகளுக்குப் பதிலாக அணு ஆயுதத்தை கொண்டுசெல்லும் நடுத்தர ஏவுகணைத் தயாரிப்புக்கு அந்நாடு முக்கியத்துவம் தருகிறது. அணு ஆயுத ஆய்வில் வளர்ந்துவரும் நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
உத்தேசமாக 90 முதல் 110 அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வைத்திருக்க வாய்ப்புள்ளது. பாகிஸ்தானிடம் சிறிய ரக, நடுத்தர, தொலைவு ரக சாலை வழியே எடுத்துச் செல்லத்தக்க நிலத்திலிருந்து நிலப் பகுதிகளைத் தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக 2வது தலைமுறை ஏவுகணைகளை அந்த நாடு தயாரித்து வருகிறது. இதுவரை 140 கிலோ புளுட்டோனியத்தை பாகிஸ்தான் தயாரித்துள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு நிதி வழங்குவது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.