Total Pageviews

Monday, 28 March 2011

சவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை

ஆளும் வர்க்கத்திற்கெதிரான மக்கள் கிளர்ச்சி அரபுநாடுகளில் ஆங்காங்கே தொடர்ந்துவரும்  நிலையில், அடுத்துள்ள ஏமனிலும், பஹ்ரைனிலும் நடப்பதன் பக்க விளைவுகள் பெரிய அரபு நாடான சவூதியிலும் ஒருசில பகுதிகளில் மிகக் குறைவான அளவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உணரப்பட்டன.

இந்நிலையில், சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மண்ணின் மைந்தர்களிடம்  தொலைகாட்சி வழியே  பிரத்யேக உரையொன்றை நிகழ்த்தினார். இறைவனுக்கு அடுத்தபடியாக, அரபு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தன் குடிமக்களுக்கு மனமுவந்து நன்றி தெரிவித்த சவூதி மன்னர், தான் மனம்திறந்து உரையாடுவதாக அப்போது கூறினார். மக்களே தன் கவுரவம் என்றும் அவர்  குறிப்பிட்டார்.


அதில், குடிமக்களுக்கான அநேக சலுகைகளை அள்ளி இரைத்துள்ளார்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மழைப்  பொழிந்ததைப் போன்ற அந்த சலுகைகள் விவரம்:

  • சவூதி அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் மாதம் மூவாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
  • சவூதி அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் உடனடி போனஸ்
  • வேலையில்லாதவர்களுக்கான உதவித் தொகை மாதம் இரண்டாயிரம் சவூதி ரியாலாக உயர்த்தப்படுகிறது.
  • இராணுவம், பாதுகாப்புத் துறைகள் 60 ,000   புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் .
  • 500 ,000 புதிய குடியிருப்புகள் கட்ட 250 பில்லியன் சவூதி ரியால்கள் ஒதுக்கீடு.
  • வீட்டுக்கடன் சவூதி ரியால்கள்  300 ,000 லிருந்து 500 , 000 ஆக உயர்வு.
  • சொந்த குடிமக்கள் வேலைவாய்ப்புறுதியை (சவூதிசேஷன்) விரைந்து நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும்.
  • பல்வேறு பெரு நகரங்களிலும் சிறப்பு மருத்துவ நகரங்கள் அமைக்கப்படும்.
  • மன்னருடைய நேரடி கண்காணிப்பில் ஊழல் தடுப்புப் பிரிவு அமைக்கப்படும்.
மன்னரின் இந்த அறிவிப்பை அடுத்து சவூதி நகரங்களில் மண்ணின் மைந்தர்களின் கொண்டாட்டம் பெரிதும் காணப்பட்டது.

ஆயினும், கடந்த 11m தேதி கூடிய சிறு அளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மார்ச் 20 அன்றும் தங்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததையொட்டி தலைநகரில் காவல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னோக்கிச் செல்லும் உலகம் !

மத்தியகிழக்கு நாடுகளில் ஆரம்பித்துள்ள அமைதியின்மை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் நாம் உலகளவில் ஓர் பின்னடைவை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம் என நிபுணர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
ஐநாவின் ஆதரவுடன் லிபியா மீது ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள், பஹிரையினுக்குள் பிரவேசித்திருக்கும் சவுதி அரேபியாவின் இராணுவ வாகனங்கள், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், செயற்பாடிழந்து போன அணுஉலைகள் என்பன எண்ணையின் விலையை அதிகரிக்க செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
உலகில் எண்ணை ஏற்றுமதியில் 12 வது இடத்தை லிபியா வகிக்கிறது.லிபிய மக்களை காப்பாற்றுவது என்ற பெயரில் நடாத்தப்படும் யுத்தத்தின் முதல் கட்டமான விமானம் பறக்காத வான் பரப்பை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு விட்டோம் என அமெரிக்க தலைப்பீடம் கூறுவது போல இலகுவாக முடிந்து விடும் பிரச்சனையல்ல என்பதும், இது நீண்ட காலம் நீடிக்கலாம் என்பதற்கான அறிகுறிகளை இப்போதே தோன்ற ஆரம்பித்து விட்டன.
மேலைத்தேயக் கூட்டுடன் இணைந்த அரபிக் லீக், ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், பொதுமக்களின் உயிரிழப்பும் தாம் எடுத்த முடிவு சரிதான என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. அமைப்பாக்கப்படாத எதிரணி, அரசியல் திட்டங்கள் எதுவுமின்றி அயல்நாட்டு இராணுவ நடவடிக்கைகள் மட்டும் மக்களுக்கு நிரந்தர தீர்வுகள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் பல நாடுகளின் போராட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான யுத்ததில் ஈடுபட்டிருக்கும் ஐநா அந்த நாட்டிற்கு அரசியல் தீர்வு எதையும் முன்வைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதல்ல. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் அந்த நாட்டில் காணப்படும் உட்கட்டமைப்புக்களையும், கட்டிடங்களையும் இடித்து தகர்த்துக் கொண்டிருக்கின்றன நவீன இரக போர் இயந்திரங்கள்.
இது இவ்வாறிருக்க பஹிரைனில் நடைபெறும் நிகழ்வுகள் பெரிதும் வெளியே தெரியாமல் இருக்கின்றன. அமெரிக்காவின் நட்புக்கு பாத்திரமான சவுதி அரேபியா தனது பாரிய எண்ணை படுக்கைகளுக்கு அருகில் இருக்கும் பஹிரைனுக்குள் இராணுவாகனங்களை அனுப்பி வைத்துள்ளது. இங்குள்ள சுணி பிரிவினரின் ஆட்சி அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செயற்பாடு அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி நடாத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் பஹிரைனிலுள்ள சிறுபான்மையின ஷியா மதப்பிரிவினருக்கு ஈரான் தனது ஆதரவைத் தெரிவிக்க முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்பிராந்தியத்தில் இவ்விரு மதப்பிரிவினரிடையேயும் முரண்பாடுகள் வலுவடையும் பட்சத்தில் அது நீண்ட காலம் நீடிக்கும் பிரகாரம், எரிபொருளின் விலையேற்றம் தவிர்க்க இயலாததாகிறது.
சுணி மற்றும் ஷியா மதப்பிரிவினரிடையே முரண்பாடுகள் நீடிக்கும் பட்சத்தில் இந்த இருபிரிவினையும் ஆதரிக்கும் நாடுகளான சவுதி அரேபியாவும் ஈரானும் பலப்பரீட்சையில் இறங்கினால் இவற்றுக்கு மத்தியில் அகப்படும் பஹிரைனின் ஏற்படும் விளைவுகள் மிக மோசமாக அமையலாம். மத்திய கிழக்கு நாடுகளை வளங்கொழிக்கும் நாடாக்குவதில் முக்கிய பங்கினை வகித்த எண்ணை வளம் அந்த நாடுகளின் பின்னடைவுக்கு மட்டுமல்லாது உலகளவிலான பின்னடைவுக்கும் காரணமாக அமையலாம்.
தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அலை சவுதி அரேபியாவைத் தாக்கினால், லிபியாவிலிருந்து கிடைக்கப்பெறும் எண்ணையின் அளவை விட அதிகளவு எண்ணையை இழக்க நேரிடலாம். ஜப்பானில் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுத்தப்பட்ட வரலாறு காணாத அழிவு, மின் அணு உலைகளின் பயனற்ற நிலைமை என்பனவும் பங்குச்சந்தையில் எண்ணை விலையில் தாக்கத்தை ஏற்பட்டுத்தும் என நாம் நம்பலாம்.
மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது கருக் கொண்டிருக்கும் யுத்தமேகங்களும் அமைதியற்ற நிலையும் உணவுப் பொருட்களின் விலை உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். பல வருடகாலமாக La Niña காலநிலையினால்(La Niña என்பது பசுபிக் சமுத்திரத்தினை குளிரச்செய்யும் காலநிலைமாற்றத்தைக் குறிக்கும் பதம், இது வரட்சியை வேறு பிரதேசங்களில் ஏற்படுத்தும், சூறவளிகள், மற்றும் உயர் தாழ் அமுக்கங்களுக்கும் காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது).
வெள்ளம், வறட்சி ஆகியவற்றினால் பயிர்ச்செய்கை மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதேவேளை ஜப்பானில் அணு உலைக்கசிவினால் அங்குள்ள உணவுப்பொருட்கள் மற்றும் கடலுணவு போன்றவற்றை மக்கள் உட்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் ஜப்பான் தனது உணவுத் தேவையில் தன்னிறைவு பெறுவதற்கு கணிசமானளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.


( நன்றி )  4தமிழ்மீடியா:
                    மாதுமையாள்



லிபிய விவகாரம்: சர்வதேச முரண்பாடுகள்



 
லிபியாவில் வான் தாக்குதல்கள் சர்வதேசத்தில் கருத்துமுரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது
லிபிய வான் தாக்குதலால் சர்வதேச முரண்பாடுகள்
லிபியாவில் மேற்குலக நாடுகள் முன்னெடுத்துவரும் ராணுவ தலையீடு குறித்த ரஷ்யாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.
இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ், மாஸ்கோ சென்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனட்டோலியன் ஸ்யேர்டியூக்கோஃப் ஐ சந்தித்து பேசினார்.
மேற்குலக நாடுகளின் படைகள் லிபியாவில் பொதுமக்களின் உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுத்துவருவதாக அவர் அப்போது கூறினார்.
மேலும் அடுத்த சில நாட்களில் லிபியாவில் நடக்கும் சண்டைகள் குறையத்துவங்கும் என்று தாம் ரஷ்ய அமைச்சரிடம் கூறியதாகவும் கேட்ஸ் தெரிவித்தார்.
அதேசமயம் லிபியாவில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்படுத்துவதே பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வழி என்று ஸ்யேர்டியூக்கோஃப் தெரிவித்தார்.
அமெரிக்க விமானம் விழுந்தது
இதேவேளை லிபியாவில் கேணல் கடாபியின் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கும் சர்வதேச நடவடிக்கையின் போது அமெரிக்க போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விழுந்த அமெரிக்க விமானத்துக்கு அருகில் மக்கள் கூட்டம்
விழுந்த அமெரிக்க விமானத்துக்கு அருகில் மக்கள் கூட்டம்
இந்த எஃப் 15 போர் ஜெட்டின் உடைந்த பாகங்களைச் சுற்றி மக்கள் கூட்டம் காணப்படுவதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வீழ்ந்ததாக அமெரிக்க இராணுவம் கூறுகிறது.
விமானத்திலிருந்து தப்பிக் குதித்த இரண்டு விமானிகளும் மீட்கப்பட்டு விட்டனர்.
லிபியாவில் கேணல் கடாபிக்கு ஆதரவான படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே சண்டைகள் தொடருகின்றன.
ஷெல் தாக்குதலும், கண்மூடித்தனமான துப்பபாக்கிச் சூடுகளும் நகரில் இடம்பெற்றதாக மேற்கு நகரான மிஸ்ரட்டாவில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இரவில் மாத்திரம் 22 பேர் இறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய நககரான அஜ்டாபியாவைச் சுற்றிலும், ஷிண்டானிலும் மற்றும் திரிபோலிக்கு தென்மேற்கிலும் கூட தொடர்ந்தும் சண்டைகள் இடம்பெறுகின்றன.