Total Pageviews

Saturday, 30 April 2011

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும் டெல்லியின் மெளனமும்

 இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் மீறல் ஆகியன பற்றி விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்திய இனப் படுகொலைப் போருக்கு (இரகசியமாக) ஆயுதம், ராடார் வழங்கியதிலிருந்து, போரை ‘வேகமாமுடிக்க’ ஆலோசனையும் தந்தது மட்டுமின்றி, அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கூறியது போல், ஒவ்வொரு நாளும் இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சி்வ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஆலோசித்து திட்டமிட்டே போரை நடத்தினோம் என்று கூறும் அளவிற்கு சிறிலங்க அரசிற்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்றது. அந்தப் போர் தொடர்பாக சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதனை அப்படியே இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் கூறி, நியாயப்படுத்திய சோனியா காங்கிரஸ் அரசு, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இதுவரை ஒரு வார்த்தையும் சொல்லாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று டெல்லி கூறலாம். ஆனால், பான் கி மூனிடம் அளிக்கப்பட்ட அந்த அறிக்கை, டெல்லியின் நண்பனான சிறிலங்க அரசிடன்தான் முதலில் அளிக்கப்பட்டது என்பதையும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகளை சிறிலங்க அரசே கசியவிட்டது என்பதை அறிந்த பின்னரும் ‘எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது’ என்று கூற முடியாத நிலை டெல்லிக்கு.

இருந்தாலும் டெல்லி மெளனம் சாதிப்பதற்கு உண்மைக் காரணம், அது தனது இனப் படுகொலை நண்பனை காப்பாற்ற எந்த உண்மைகளையெல்லாம் மறைத்ததோ அந்த உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது ஐ.நா.நிபுணர் குழு. அதனால்தான் பதில் சொல்ல முடியாமல் மெளனம் காக்கிறது.

மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் எண்ணிக்கை 50,000 முதல் 70,000தான் என்று சிறிலங்க அரசு கூறியதை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் அப்படியே கூறினாரே பிரணாப் முகர்ஜி! அந்த மூன்று வளையங்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை 3,30,000 பேர் என்பதை அன்றைக்கே உலகம் கூறியபோது, “அதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது, சிறிலங்க அரசு கூறியதைக் கூறுகிறேன்” என்றல்லவா பிரணாப் முகர்ஜி கூறினார்!





இன்றைக்கு 3,30,000 பேர் என்பது ஐ.நா.நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது...

றுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000 பேர் என்ற எண்ணிக்கைக்கு ஆதாரமான தகவல் இது.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்றுத் திரும்பியதாகக் கூறினார் பிரணாப் முகர்ஜி. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது மட்டுமின்றி, எரிகணைகளைக் கொண்டு தொடர்ந்து தாக்கியதில்தான் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா.நிபுணர் குழு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை, ஒருவரைக் கூட கொல்லாமல் (with zero civilian casualty) அவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கை என்று ராஜபக்ச அரசு கூறியதை, இந்திய ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கூறியது டெல்லி அரசு. ராஜபக்ச அரசு கூறியது அப்பட்டமான பொய் என்றும், சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதற்கு நேர் எதிராக எதார்த்த நிலை இருந்தது என்றும், பன்னாட்டு மனித பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்திற்கும் எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்றும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளால்தான் மக்கள் அதிகம் கொல்லப்பட்டார்கள் என்று சிறிலங்க அரசு கூட சொல்லத் துணியாத பொய்யை காங்கிரஸ் தலைவர்கள் பரப்பினார்கள். தமிழ்நாட்டு மக்களிடையே அப்படிப்பட்ட பொய்யைச் சொன்னார்கள். ஆனால், சிறிலங்க படைகளின் தொடர்ச்சியான தாக்குதலே இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்று ஐ.நா.நிபுணர் குழு கூறியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, போர் முடிந்த பிறகு, போர்க் குற்றங்கள் குறித்து சிறிலங்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் 2009ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி கூட்டப்பட்டபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே, “இந்தக் கூட்டம் அவசியமற்றது, உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தை போரில் தோற்கடித்ததற்காக சிறிலங்க அரசை பாராட்டுவதற்கு பதில் அதனை தண்டிக்க முற்படும் செயல் இது” என்று பரபரப்போடு பேசினார். சீனா, பாகிஸ்தான், இரஷ்யா, விவரமறியாத தென் அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளின் துணையுடன், சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்தார்.

அதன் பிறகு சிறிலங்க அரசு தன்னைத் தானே பாராட்டிக்கொள்ளும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதனை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறச் செய்தார் இந்தியாவின் பிரதிநிதி. சிறிலங்க அரசின் இனப் படுகொலைக்குத் துணை நின்றது மட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அதற்கு ஆதரவான தீர்மானத்தையும் நிறைவேற்றி காப்பாற்றியது இந்தியா.

ஆனால், மிகுந்த இராஜ தந்திரத்துடன் இந்தியா நிறைவேற்றித் தந்த அந்தத் தீர்மானத்தை (தீர்மானம் A/HRC/8-11/L.1Rev.2) தாங்கள் தந்துள்ள இந்த அறிக்கையின் அடிப்படையிலஐ.நா. மனித உரிமைப் பேரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பான் கி மூனிற்கு பரிந்துரைத்துள்ளது நிபுணர் குழு. இதைவிட வெட்கக்கேடு ஒரு ஜனநாயக நாடான இந்தியாவிற்கு இருக்க முடியுமா?

அதனால்தான் டெல்லி மெளனம் காக்கிறது. ஆனால் உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியுள்ளன.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்தியா தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் மனித உரிமைக் காப்பகத்தின் தெற்காசிய பிரிவு இயக்குனரான மீனாட்சி கங்கூலி கூறியுள்ளார்.

என்ன பதில் சொல்லப்போகிறது டெல்லி?