Total Pageviews

Sunday, 15 May 2011

ஐ.நா. அறிக்கை: இந்திய ஆதரவை கோருகிறார் இலங்கை அமைச்சர்

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பு திங்கள் கிழமை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
 உள்நாட்டுப் போர் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக அமைந்துள்ள ஐ.நா. அறிக்கை குறித்து தங்கள் நாட்டின் நிலை குறித்து விளக்கவும், இலங்கைக்கு ஆதரவு திரட்டவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
 தில்லி வரும் அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்து இதுகுறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மறுநாள் செவ்வாய்க்கிழமை அவர் கொழும்பு திரும்புவார்.
 கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகளை அந்நாட்டு அரசு மீறியதாகவும், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உணவு சரிவர வழங்கப்படவில்லை, பலர் பட்டினியால் இறந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
 எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலை என்று ஐ.நா. குழு குற்றம் சாட்டியது. இதை அடுத்து, அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 ஆனால், அந்த நாடு இது குறித்து கவலைப்படவில்லை. இனப்படுகொலை குறித்து பல நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்தியாவோ அமைதி காத்தது.
 இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐ நா பாதுகாப்பு சபையில் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 29 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இத்தகைய பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தில்லியில் இந்தியாவிடம் தங்களது நிலையை விளக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஐஏவுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐஎஸ்ஐ

அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிறுத்திவிட்டது.பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்த தாங்கள் உதவியதாகவும், சிஐஏவுக்கு தகவல்கள் அளித்ததாகவும் முன்பு கூறிவந்த ஐஎஸ்ஐ முகவர்கள், இப்போது பயங்கரவாதிகள் குறித்து சிஐஏவுக்கு தகவல்கள் அளிக்க மறுத்துவருவதாக சண்டே டெலிகிராப் தெரிவித்துள்ளது.அபோட்டாபாதில் மே 2-ம் தேதி அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனைக் கொன்றனர். இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தானிடம் முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது.இதனால் கடும்கோபத்தில் உள்ள ஐஎஸ்ஐ, சிஐஏவுடன் உள்ள உறவை துண்டித்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.