Total Pageviews

Blog Archive

Friday, 30 March 2012

சோனியாவின் நெஞ்சைத்தொட்ட பாலச்சந்திரனின் ஒளிப்படம்


ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தியே, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும் அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம் காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்றுவித்தன.வாக்கெடுப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, மார்ச் 22ஆம் திகதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தனியொரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க முடியாது என்று கூறியிருந்தனர்

bala-son-of20prrabaharan


.இதனால் அதிருப்தியடைந்த சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோனியாகாந்தியை அணுகி அவரிடம் முறையிட்டனர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட படங்களை அவர்கள் சோனியாகாந்தியிடம் காண்பித்து நியாயம் கேட்டனர்.
குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் மார்பில் சுடப்பட்டுக் கிடக்கும் காட்சி அவரை உறைய வைத்தது. இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தான் நடவடிக்கை எடுப்பதாக சோனியாகாந்தி உறுதி வழங்கினார்.
உடனடியாகவே, அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம், ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.ஒரு குழந்தையின் மரணம் இந்திய – இலங்கை உறவையே மாற்றி விட்டது என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

வெட்கத்தில் தலைகுனிந்த சீனா


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது. உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இவ்வாறு தீவிர முயற்சியில் இறங்கியது.
இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலிய வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.
சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.
இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.
இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.
இப்போது ஐநாவில் தோற்ற ‘கடுப்பில்’ உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள்.

முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி




மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் முகம் சிதைந்த ஒருவருக்கு, உடல் உறுப்பு தானம் செய்த ஒருவரது முகப் பகுதிகளை எடுத்து பொருத்தி மருத்துவர்கள் செய்துள்ள முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவரின் சாயல் புதிய முகத்தில் இல்லை என்பதுதான் வெற்றிக்கு அடிப்படையே.


மேலும், உலகிலேயே இந்த அறுவை சிகிச்சைதான் அதிக நேரம், அதிக செலவில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.

விர்ஜீனியாவைச் சேர்ந்த ஹில்ஸ் ரிச்சாட் லீ நோரிசுக்கு (வயது 37) 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் முகப்பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பற்கள், மூக்கு, நாக்கின் ஒரு பகுதி, உதடுகள் ஆகியவற்றை அவர் இழந்துவிட்டார். மூக்கு முற்றிலும் சேதமடைந்து நுகரும் உணர்வே இல்லாமலும், பாதி நாக்குடன், முகத்தில் பல்வேறு தையல்களும், கண் பார்வை குறைந்தும் இருந்ததால் ரிச்சர்ட், வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வந்தார்.

இவருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த ஒருவரது முகப் பாகங்களை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை செய்ய மேரிலாண்ட் மருத்துவ மையம் முடிவெடுத்தது.

அதன்படி, வேறொருவருடைய உடலில் இருந்து மேல் மற்றும் கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முக திசுக்களை எடுத்து ரிச்சர்ட்டிற்கு பொருத்தும் அறுவை சிகிச்சை 36 மணி நேரம் நடைபெற்றது.

அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் ரிச்சர்ட், தற்போது பல் துலக்குகிறார், முகச் சவரம் செய்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன் இழந்த நுகரும் உணர்வையும் அவர் திரும்ப பெற்றுவிட்டார்.

தனக்கு புதிய முகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ரிச்சர்ட். தானும் மற்றவர்களைப் போல வெளியில் நிம்மதியாக நடமாட முடியும் என்றும், தன்னை யாரும் விநோதமாக பார்க்க மாட்டார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.