Total Pageviews

Blog Archive

Thursday, 23 June 2011

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி தடையை நீக்குகிறது ஆஸ்திரேலியா

மெல்போர்ன் : "இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை, நடப்பாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ளும்' என, அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. ஆனால், சமீப காலமாக, பெரிய அளவில் அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடுகள், இந்தியாவுடன், வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, ஆஸ்திரேலிய இயற்கை வளத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசன் மற்றும் அதிகாரிகளுடன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நட்பாண்டு துவக்கத்தில், பேச்சுவார்த்தை நடத்தினார். இதனடிப்படையில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. வர்த்தக ரீதியாக சீனா பெரிய வளர்ச்சி அடைந்து வருவதால், அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நட்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு தேவை என்பதால், இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தப்ப முடியாது : பாகிஸ்தானுக்கு ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன் : ""எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை, அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது,'' என்று அதிபர் ஒபாமா மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

ஆப்கனிலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலும், அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் மறைந்திருந்து, உலக நாடுகளை மிரட்டி வருகின்றனர். "பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கன் இருக்கிறது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறி வந்தார். ஆப்கனில், சோவியத் யூனியன் படைகளை விரட்டி அடிக்க, அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல் - குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், இறுதியில், அந்நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பின்னர் தான் அமெரிக்கா விழித்தது. அமெரிக்காவுக்கே சவாலாக இந்த பயங்கரவாதிகள் மாறினர்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், கடந்த 2009ம் ஆண்டில், ஆப்கனில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக அதிகரித்தார். தற்போது, ஆப்கனில் ஒரு லட்சம் அமெரிக்கப் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, "தலிபான்களுடன், அமைதிப் பேச்சுவார்த்தையை, ஆப்கன் அதிபர் அமித் கர்சாய் தலைமையிலான அரசு துவக்கும். பின்னர் சிறிது, சிறிதாக அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும்' என்று அப்போது ஒபாமா பேசினார்.

இந்நிலையில், ஆப்கனில், அமெரிக்கப் படைவீரர்கள் வாபஸ் தொடர்பான அறிவிப்பை, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டு பேசியதாவது: ஆப்கனில் இருந்து, நடப்பாண்டில் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு, 2012ம் ஆண்டில் மொத்தம் 33 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவார்கள். இவர்கள் வாபசுக்குப் பின், அந்நாட்டில், மீதம் 68 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருப்பார்கள். 2014ம் ஆண்டில், ஆப்கனின் முழுபாதுகாப்பு பொறுப்பும், அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அனைத்து அமெரிக்கப் படைவீரர்களும் வாபஸ் பெறப்படுவார்கள்.

தலிபான்கள் மீதான போரில், அமெரிக்கா பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அதே சமயம், முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவுடன் இணைந்து, இதன் கூட்டு நாடுகளும், ஆப்கனில் ஸ்திரத்தன்மையை உண்டாக்க உதவின. ஏற்கனவே, ஆப்கனின் சில மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளின் அதிகாரங்களை, அப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கும் பணியை துவக்கி விட்டோம்.

தலிபான்களுடனான எங்களது அமைதிப் பேச்சு திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியான ஆப்கன் நாடாக மாற விரும்புபவர்கள் அல்- குவைதா அமைப்பை துண்டித்து வெளியேற வேண்டும். வன்முறையை கைவிட வேண்டும். ஆப்கன் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். ஆப்கன் நாட்டை பயங்கரவாதிகளின் கூடாரமாக அல் -குவைதா பயங்கரவாதிகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மாற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் முதல் நோக்கமாக இருந்தது. தற்போது, அமெரிக்காவின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்களை கொல்லும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை (பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்) அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது. அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திறமையாக தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

அமெரிக்க உளவு அதிகாரிகள் 67 பேருக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், ஜூன்.23: அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் 67 பேருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது. தன்னிச்சையாக தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கொன்றதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தானுக்கு வருவதற்காக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் 67 பேருக்கு வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விஸா வழங்கியுள்ளதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.இரு நாடுகளிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் விசா வழங்கும் முடிவை பாகிஸ்தான் எடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஏற்பாட்டின்படி இஸ்லாமாபாதின் கோரிக்கையான பாகிஸ்தானில் சிஐஏவின் பணிகளை முழுமையாக தங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை சிஐஏ ஏற்றுக்கொண்டது.ஐஎஸ்ஐ தலைவர் சுஜா பாஷாவுக்கும், சிஐஏ அதிகாரிகளுக்கும் இடையே இந்த மாதத் தொடக்கத்தில் இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக டான் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு

ஐ.நா.: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், உலக அளவில் கடும் சர்ச்சைக்குள்ளானவரான பான் கி மூன்.

இதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.

இந்த பான் தற்போது மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராகியுள்ளார் - 2வது முறையாக. அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இவர்தான் பொதுச் செயலாளராக செயல்படுவார்.

தென் கொரியாவைச் சேர்ந்தவர் பான் கி மூன். மீண்டும் தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நிற்கப் போவதாக பான் கி மூன் சமீபத்தில் தான் ஐ.நா. பொதுச் சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இவரை 192 நாடுகளும் ஒரு மனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தன. இதையடுத்து இவரது 2வது பதவிக்காலம் 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

2வது பதவி்க்காலத்திலாவது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உதவ உருப்படியான நடவடிக்கைகளை பான் கி மூன் எடுப்பாரா என்று பார்ப்போம்.

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்

டோக்கியோ, ஜூன்.23: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  6.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்துக்குப் பின் அந்த எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் வாபஸ் பெற்றது.பசிபிக்கில் மியாகோவின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் 50 கிலோமீட்டர் தொலைவி்ல் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.32 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.முன்னதாக சுனாமி ஏற்படலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் அணுஉலை நெருக்கடி ஏற்பட்ட ஃபுகுஷிமாவில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை. அலைகளில் கொந்தளிப்பும் ஏற்படவில்லை.நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சில பகுதிகளில் குடியிருப்புகளை காலி செய்யுமாறும் உள்ளூர் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.ஷின்கான்சென் புல்லட் ரயிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மார்ச் 11 பேரழிவுக்குப் பின்னர் செயல்படாமல் உள்ள மியாகியில் ஓனகாவா அணு உலைக்கு புதிதாக எந்த பாதிப்பும் இல்லை என அரசு ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.

ஜூலையில் ஆப்கானில் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் வாபஸ்: ஒபாமா அறிவிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படையில் இருந்து 10 ஆயிரம் வீரர்கள் வரும் ஜூலை மாதம் வாபஸ் பெறப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் அல்கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை அடக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. ஒபாமா அமெரிக்க அதிபரானபோது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகளை படிப்படியாக வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதன்படி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான வீரர்க்ள் நாடு திரும்பினர்.

தற்போது வரும் ஜூலை மாதம் மேலும் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறப்போவதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஆப்கானிஸ்தான் நிலைமை முன்னேற்றி வருவதால் இனி அங்கு அமெரி்ககப்படைகள் அதிக அளிவல் தேவைப்படாது. எனவே, அங்குள்ள படையின் பெரும் பகுதியை வாபஸ் பெறவிருக்கிறோம். இதில் முதல்கட்டமாக வரும் ஜூலை மாதம் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 23 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படுவர். இது தவிர 63 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து அங்கேயே இருப்பார்கள். அவர்கள் வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படுவார்கள். அமெரிக்கப்படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு படைகள் கவனித்துக் கொள்ளும்.

பின்லேடன் மறைவிற்கு பிறகு வலுவிழந்து, நெருக்கடியில் இருக்கின்றபோதிலும் அல்கொய்தா ஆபத்தானதாகத் தான் உள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கப்படைகளில் இதுவரை ஆயிரத்து 500 பேர் உயிர் இழந்துள்ளனர், 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த படைகளுக்கு ஒரு வாரத்திற்கு ஆகும் செலவு 4 ஆயிரம் கோடி ஆகும். இது அமெரிக்காவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால் தான் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.

'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன்னிப்பு கேட்ட இலங்கை எம்பி

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரை இலங்கை அதிபர் ராஜபக்சே பராமரித்து வருவதாக தாம் கூறியதற்கு ஏ.எச்.எம்.அஷ்வர் எம்பி மன்னிப்பு கோரியுள்ளார்.

பிரபாகரன் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டாலும், அவரது குடும்பத்தினரைக் காப்பாற்றி ராஜபக்சே பராமரித்து வருகிறார் என நாடாளுமன்றத்தில் அஷ்வர் கூறியிருந்தார்.

இதனால் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அஷ்வர், "தாம் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பிரபாகரனின் பெயரை தவறாகக் குறிப்பிட்டு விட்டதாகத்" தெரிவித்துள்ளார்.

ஆனால் நேற்று முன்தினம் அவர் பாராளுமன்றத்தில் பேசியபோது, பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் குறிப்பிட்டு, உயிருடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசின் பிடியிலா? நடுங்கிப்போன ராஜபக்ச!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து ராஜபக்ச நடுங்கிப்போனதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரமான ஏ.எச்.எம்.அஸ்வர், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுடன், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்கா கொன்றது போல அல்லாமல், புலிகளின் தலைவரின் குடும்பத்தை ராஜபகச இப்போதும் பேணிப் பாதுகாப்பது அவரின் மனிதாபிமானத் தன்மையை வெளிக்காட்டுவதாகவும், அவர்களை அரசாங்கம் நல்ல முறையில் பேணி வருவதாகவும் கூறினார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் செய்தியை பல ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அஸ்வரின் நேற்றைய உரையைக் கேட்ட மகிந்தவும் நடுங்கிப்போனார். இவ்வாறு பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் இலங்கை அரசிடம் அகப்பட்டிருந்தால் அவர்களை உலக நாடுகளுக்கு காட்டவேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வருமே என்று அஞ்சினார்.

தடுத்துவைத்திருப்போரைக் காட்டுங்கள் என்று உலகநாடுகள் கேட்டால், தம்மிடம் இல்லாதவர்களை எங்கே காட்டுவது என்று கலக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நேற்றிரவே எம்.பி அஸ்வருடன் தொடர்புகொண்ட ராஜபக்சவின் செயலாளர் இது குறித்து விளக்கம்கோரியுள்ளார்.

நிலையைப் புரிந்துகொண்ட அவர் உடனடியாக மறுப்புச் செய்தி ஒன்றை வெளியிடுமாறு கூறியுள்ளார்.

இதனை அடுத்து அஸ்வர் இன்று நாடாளுமன்றத்தில் மன்னிபுக் கோரியதோடு,விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக பிரபாகரன் என்று வாய் தவறி சொல்லிவிட்டதாக விளக்கமளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.