சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக பாரிய நிதியுதவிகளை வழங்கி இலங்கைத்தீவை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சீன அரசாங்கம், மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றிற்கு இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
சீன அபிவிருத்திக் கூட்டுறவு வைப்பகம் (China Development Bank Corporation) ஊடாக இந்த நிதி வழங்கலை சீனா அரசாங்கம் மேற்கொள்ளுகின்றது. வீதி அமைத்தல், பாலம் கட்டுதல், தண்ணீர் வழங்கல் போன்ற பல திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரச அதிபர் ராஜபக்ச முன்வைத்துள்ள இதற்கான திட்டத்தை, சிறீலங்காவின் அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக கொழும்பின் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால் மகிந்த சொல்வதை அப்படியே செய்யும் அளவிற்கே அமைச்சர்களுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, அமைச்சர்களைப் பொம்மைகள் என வர்ணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் சீனா முன்னணியில் இருப்பதுடன், உலக வைப்பகம், ஆசிய அபிவிருத்தி வைப்பகம் போன்ற முன்னணி நிதி உதவி வழங்கும் நிறுவனங்களைவிட அதிகளவு நிதியுதவியை சிறீலங்கா அரசாங்கத்திற்குச் செய்து வருகின்றது.
சீன அரசாங்கத்தின் இந்த நிதியுதவி இந்திய அரசாங்கத்திற்கு பாரிய சங்கத்தைக் கொடுப்பதுடன், இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க நினைக்கும் இந்திய அரசாங்கத்திற்கு இது கசப்பான செய்தியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருந்தாலும் இந்த விடயத்தில் சீனாவுடன் நேரடியாக மோதும் நிலைக்கு இந்தியா செல்லாது எனவும், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலுள்ள பல பில்லியன் வர்த்தக உறவே இதற்குக் காரணம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.