Total Pageviews

Blog Archive

Wednesday, 4 January 2012

சீனாவின் இவு பகுதியில் வியாபாரத் தொடர்பு கொள்ள வேண்டாம்: இந்திய வியாபாரிகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை

பெய்ஜிங், ஜன. 3:÷சீனாவின் இவு வர்த்தக மையத்தில் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று இந்திய வியாபாரிகளுக்கு சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ஜிஜியாங் மாகாணம், இவு பகுதியில் செயல்பட்ட நிறுவனமொன்று நிலுவைத் தொகையை தராததால், அதில் பணியாற்றிய இந்தியர்கள் ஷியாம் சுந்தர் அகர்வால், தீபக் ரஹேஜா ஆகியோரை சீன வர்த்தகர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். பின்னர், அவர்களை போலீஸôரிடம் ஒப்படைத்தனர்.
 இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர்களை மீட்க கடந்த டிசம்பர் 31-ம் தேதி இந்திய தூதரக அதிகாரி பாலசந்திரன் சென்றார். அப்போது பாலசந்திரனை நீதிமன்ற வளாகத்தில் சீன வர்த்தகர்கள் தாக்கினர். காயமடைந்த பாலசந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 இதற்கிடையே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் இருவரின் பாதுகாப்பைக் கருதி, அவர்களை ஹோட்டல் ஒன்றில் போலீஸôர் தங்க வைத்துள்ளனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
 இந்தச் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 எச்சரிக்கை:÷இந்த நிலையில், இவு பகுதிக்கு வியாபாரம் செய்யச் செல்லும் இந்தியர்களுக்கு, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:÷இவு பகுதியில் உள்ள சீன வியாபாரிகளிடம் தொடர்பு கொண்டு எந்த வியாபாரமும் செய்ய இந்தியர்கள் முயற்சிக்க வேண்டாம். இப்போது வியாபாரம் செய்து வருபவர்களும் தங்களது பணப் பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 வர்த்தக ரீதியாக தகராறு ஏற்படும்போது, இந்திய வியாபாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கும் போக்கு அப்பகுதியில் உள்ளது. மேலும், கடுமையான தாக்குதலுக்கும் உள்ளாகின்றனர். இது போன்ற பிரச்னை எழும்போது, இந்திய வர்த்தகர்களுக்கு சட்டரீதியான உதவிகளைச் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. மேலும், இந்திய வியாபாரிகளுக்கு அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இவு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் தங்கியுள்ளனர் என்றும், கடந்த ஆண்டு பல கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பொருள்களைக் கொள்முதல் செய்தனர் என்றும் கூறப்படுகிறது.

குழப்பத்தில் இந்தியப் பொருளாதாரம்

வளரும் பொருளாதார நாடுகள் வரிசையில் சீனா, இந்தியா, பிரேசில் முன்னணியிலும் பின்னர் வளைகுடா நாடுகள் இதர ஆசிய நாடுகள் பின்னணியிலும் உள்ளன. எல்லாமே ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் வளர்ச்சியுற்ற யூரோ நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனும் பின்னிப் பிணைந்துள்ள சூழ்நிலையில், ஐரோப்பிய - அமெரிக்க வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் நிதிக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 இப்படிப்பட்ட "குளோபல் குழப்பத்தில்' இந்தியப் பொருளாதாரம், யூரோ - அமெரிக்காவைவிட மோசமாயுள்ளதைப் புரிந்துகொள்வது நன்று. ஏற்றுமதியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் எல்லாமே அவரவர் பணத்தை மதிப்பிழக்கச் செய்கின்றனர். இது பொதுவான நிலை. அமெரிக்காவிலும் யூரோ நாடுகளிலும் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. வாராத கடன் வரம்பு மீறிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துள்ளது.
 அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் 2009-ஐ விட 2010-ல் நிகழாண்டு பற்றாக்குறைக் கணக்குக் கூடியுள்ளது. எனினும் 2008 -09 வீழ்ச்சியைவிட சற்றுக் குறைவுதான். சுமார் 30 சதவிகிதம் குறைவுக்குப் பின்னரும் பற்றாக்குறை நீடிக்கிறது. சுமார் 2 ட்ரில்லியன் டாலர் அளவில் பற்றாக்குறை குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 யூரோ நாடுகளின் நிலை இன்னமும் மோசம். டாலரின் வீழ்ச்சியைக் காட்டிலும் யூரோவின் வீழ்ச்சி ஏறத்தாழ 10 சதவிகிதம் அதிகம். இன்றைய இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இன்னமும் மோசம். ஆகஸ்டு 2011-ல் ரூ. 44.04 விலைக்கு விற்ற டாலர் டிசம்பர் 13-ம் தேதி ரூ. 53.40 என்ற நிலை. அதாவது 5 மாத வீழ்ச்சி 21 சதம். ரூபாயோடு ஒப்பிடும்போது டாலர் பலமாயுள்ளது. பலவீனமான யூரோவுடன் ஒப்பிட்டால் ரூபாயின் நிலை யூரோவைவிடக் கீழே விழுந்துவிட்டது. சரி ரூபாயின் வீழ்ச்சியால் நிகழக்கூடிய விபரீதங்கள் ஒன்றா, இரண்டா எடுத்துச்சொல்ல.
 முதலாவது பணவீக்கம் தணியாது, விலைவாசி ஏறும் என்பன உள்ளூர்ப்பிரச்னை. ரூபாயின் வீழ்ச்சிக்குரிய காரணம் முதலீட்டாளர்கள் ரூபாயை நம்பாமல் டாலரை நம்பும் நிலையில் ரூபாய் மூலதனம் டாலராக மாறியவண்ணம் உள்ளது.
 இந்தியாவில் ரூபாய்க்கு ரிப்போ வட்டி அதிகம் என்பதால் இந்தியக் கார்ப்பரேட்டுகள் குறைந்த வட்டி அல்லது வட்டியே இல்லாத டாலர் ரொக்கக்கடனில் ஆர்வம் காண்பிக்கின்றனர். ஏற்றுமதிக்குரிய உற்பத்தியில் முதலீடு செய்து கஷ்டப்படுவதைவிடத் தங்கம் வாங்கும் போக்கும் உள்ளது.
 பணவீக்கம், விலைவாசி உயர்வு எல்லாம் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் எந்த நாடும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் போக்கு விசித்திரமாகத் தோன்றலாம். டாலரை வலிமைப்படுத்துவதற்காக ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்துவதற்கு மாறாக மேலும் மேலும் டாலர் ரொக்கப் புழக்கத்தை அள்ளிவிடுவதன் மூலமே பொருளாதாரம் சீராகும் என்று எண்ணுகின்றனர்போலும்! எந்த அளவில் ஒழுங்கற்ற கடன், முதலீட்டுக் கட்டுப்பாடு ஒருங்கிணையாமல் கீன்ஸ் வகுத்த முழு வேலைவாய்ப்பு இலக்கைத் தொட முடியும்?
 அமெரிக்கா யோசிக்க வேண்டிய கேள்வியைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆனால், நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் அமெரிக்க ஏற்றுமதி பற்றியது. மலிவான டாலர் முதலீடுகளை அனுப்பி ரூபாயை விழவைத்த தந்திரம் கவலைப்பட வேண்டிய விஷயம் அல்லவா?
 டாலர் முதலீடுகள் வேண்டாம் என்று பிரேசில் மட்டும் குரல் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவோ வரவேற்கிறது. டாலர் முதலீடுகளே நம்மைக் காப்பாற்றும் என்ற அளவில் நிதியமைச்சரும் பிரதமரும் பேசி வருகின்றனர்.
 இந்தியாவுக்கு வரும் டாலர் முதலீடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும். பரிவர்த்தனை விலை மதிப்பு காரணமாக நமது நாணயச் செலாவணி பற்றாக்குறை இப்போதே கூடுதலாகியுள்ளது. மேலும் மேலும் இது அதிகமாகும்போது ஏற்றுமதி லாபமாயிருக்காது. மற்றொரு சிக்கலை அதாவது, பொருளாதாரச் சீரழிவைக் கவனிக்கலாம்.
 தொழிலில் பணம் முதலீடு ஆகாமல் ரியல் எஸ்டேட், கட்டடக் கட்டுமானம், ஷேர் - ஸ்டாக் மார்க்கெட், தனிப்பட்ட நுகர்வு போன்றவை வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்காமல் பணவீக்கத்தையும், வாராத கடனால் ஏற்படும் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.
 அமெரிக்காவில் செய்வதையெல்லாம் நாம் செய்ய வேண்டும். அமெரிக்காவையே இங்கு கொண்டுவந்து வால்மார்ட் அழகை ரசிக்க நினைத்தால் அமெரிக்கா இந்தியாவை விழுங்கி விடாதா?
 ரூபாய் மதிப்பு விழுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏற்றுமதியாளர்களும், டாலர் பணம் வைத்துள்ளவர்களும் ரூபாயாக மாற்றிக்கொள்வதில் ஆர்வம் காண்பிக்க மாட்டார்கள்.
 இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள். ரூபாயைக் காப்பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் செயல்பாடுகளை நிதியமைச்சர் ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
 இந்தியாவின் நிதிக் கொள்கையை அதாவது, பணம் - வட்டிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வகுக்கும். பைனான்சியல் பாலிசி என்ற நிதிக்கொள்கையை நிதியமைச்சர் வகுத்தளித்தார்.
 ரூபாயைப் பலப்படுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் விரும்புகிறார். ரூபாயைப் பலவீனப்படுத்த பிரணாப் முகர்ஜி விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒத்துப்போனால்தான் இந்தியா உருப்படும் என்று தோன்றுகிறது.
 ஏற்றுமதியை நம்பி உயர்ந்துவரும் முன்னேற்றப் பொருளாதாரம் என்று பீற்றிக்கொள்ளும் சீனா, இந்தியா, பிரேசில், ரஷிய நாடுகளுக்கு அமெரிக்கா எப்படிப் பொறி வைத்துள்ளது என்பதை அனைத்துலகப் பொருளியலில் அரிச்சுவடி படித்தவர்களுக்குப் புலனாகும். சீனாவின் வளர்ச்சி யூரோ - அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ளது. சமையலறைக்குரிய மின்சாதனப் பொருள், கருவிகள் - ஃபிரிட்ஜ் உள்பட சாதனங்களின் உதிரிகளை வியட்நாம், கொரியா போன்ற பல சிறிய நாடுகளிடம் சீனா இறக்குமதி செய்து, அமெரிக்க ஏற்றுமதி நிகழ்கிறது.
 இந்தியாவிலிருந்து சர்வீஸ் எக்ஸ்போர்ட் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் போன்ற பல்வேறு கணினிப் பணிகள் ஏற்றுமதி. ரஷியாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி. பிரேசிலிலிருந்து வேளாண் விளைபொருள்கள், இன்று நிலவியுள்ள "குளோபல் குழப்பம்' - வால்ஸ்டீரிட் போராட்டம் ஆகிய காரணங்களால் பொருளாதாரத்தில் விரைந்து வளரும் நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது வளர்ச்சியின் தேக்கமும் உலகளாவியிருக்கும். சீன ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்தால் நஷ்டம் சீனாவுக்கு மட்டுமல்ல, சீன ஏற்றுமதியை நம்பி வாழும் கிழக்காசிய நாடுகளின் வளர்ச்சியும் தடையுறும்.
 நஷ்டம் என்றாலும் டாலர் யூரோ நாடுகளுக்கு ஏற்றுமதி வழங்கலைத் தொடர்வதைத் தவிர, வேறு வழியில்லை. அதேசமயம் அமெரிக்கா மதிப்பிழந்த டாலரை பொருளாதாரத்தில் விரைந்து வளரும் நாடுகளுக்கு முதலீடுகளாக அனுப்பித் தன் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதற்கு ஏற்ப, அந்த நாடுகளை வீழ்த்தி டாலர் பரிவர்த்தனை விலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் போக்கையும் கவனிக்க வேண்டும். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அமெரிக்க - இந்திய உறவு என்றாலும் அமெரிக்க - சீன உறவு என்றாலும் ""நாயர் பிடித்த புலிவால்'' - கதைபோல் உள்ளது.
 இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருவது "குளோபல் குழப்பம்' மட்டுமே அல்ல. உள்ளூர்க்காரணிகள் நிறைய உண்டு. குளோபல் குழப்பத்தில் தத்தளிக்கும் நாட்டுப் பொருளாதாரத்தில் வந்தவரை லாபம் என்று கொள்ளையடிக்கும் திருட்டுக்கூட்டம் திருடிக்கொண்டே வாழ்கிறது. ஊழல் கூட்டம் ஊழல் செய்த வண்ணம் உள்ளது.
 அண்மையில் ஆடிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல் துணுக்குறச் செய்கிறது. தேச வருமானத்துக்கு வரவு வைக்க வேண்டிய வருமான வரிப்பணத்தில் வரி கட்டாமல் ஏமாற்றும் 12 பெரிய நிறுவனங்களின் பங்கு 90 சதவிகிதமாம்.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில் உற்பத்தித் தன்மையுள்ள தொழில் - வேளாண்மையில் முதலீடு செய்யவேண்டிய அன்னிய டாலர் வணிகத்திலும், சர்வீஸ் துறையிலும் செலவாகும்போது பற்றாக்குறை பாரமாகி பணவீக்கம் தொடரும். விலைவாசி மேலும் மேலும் உயரும்.
 தொழில் உற்பத்தி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு இவற்றில் கவனம் செலுத்தாமல் கடைவிரித்து எலைட் அங்காடிகளைப் பெருக்குவதால் இந்தியப் பொருளாதாரம் சீரடையாது.
 உலகமயமாக்கல் குழப்பத்தால் இந்தியாவில் வரியை ஏமாற்றும் பணக்காரத் தொழிலதிபர்கள் கறுப்புப்பணத்தைப் பெருக்கியவண்ணம் உள்ளனர். நியாயமாகத் தொழில் செய்ய நினைக்கும் நல்லவர்கள் நசிந்து வருகின்றனர்.
 இந்தியத் தொழிலில் ஏகபோகமாக வளர்ந்துள்ள ஒரே தொழில் கந்துவட்டி. 2 வட்டி, 3 வட்டிக்கு நல்ல தொழில் செய்ய விரும்புவோருக்குக் கடன் கிடைக்கும். எவ்வளவு பாடுபட்டும் வட்டி கட்டியே வாழ்நாளைக் கடத்தும் நல்லவர்களுக்கு மலிவான கடன் கிட்டுவதில்லை.
 சீப் லிக்விடிட்டி, மொபைல் கேபிட்டல் என்று சொல்லப்படும் டாலர் பணம் உழைக்கும் தொழில் முனைவோருக்கும் விவசாயிகளுக்கும் எட்டாக் கனி. கந்து வட்டிக்கும், ரியல் எஸ்டேட்டுக்கும் டாலர் கிட்டலாம்.
 பாவம் இந்த குளோபல் குழப்பத்தில் லட்சம் லட்சமாகப் பணம் செலவழித்துப் பொறியியல் பட்டம், மென்பொருள் பயிற்சி பெற்றுள்ள இந்திய மாணவர்களின் காத்திருப்போர் பட்டியல் விரிவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் விசில் சப்தம் வராத பிரஷர் குக்கர் கொதிப்பதுபோல் உள்ளது. 

உள்நாட்டுப் போருக்கு ஒத்திகையா?

எதை விதைக்கிறோமோ அதுதானே முளைக்கும். இது அனைவருக்கும் தெரியும்; அன்பை விதைத்தால் அன்பே முளைக்கும்; வம்பை விதைத்தால் வம்புதானே விளையும். கேரள அரசாங்கம் தம் மக்களைத் தூண்டிவிட்டு வெறுப்பையும் வன்முறையையும் விதைத்துவிட்டு அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 தமிழகத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! சாது மிரண்டால் காடு கொள்ளாது; தமிழ் மக்கள் மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்குக்கே கறுப்புக்கொடி காட்டும் அளவுக்குக் கோபம் உச்சநிலையை அடைந்துள்ளது. கட்டிக்காக்க வேண்டிய அரசே கொட்டி இறைத்தால் அதை பொறுப்புள்ள தலைமை என்று கூற முடியுமா?
 முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் கொதிநிலையை அடைந்துள்ளனர். உறங்கிக் கிடந்த தமிழ் மக்களை உசுப்பிவிட்ட பெருமை கேரள அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையுமே சேரும். உச்ச நீதிமன்றத்தில் இருந்த விவகாரத்தை உள்ளூர் சண்டையாக உருமாற்றி விட்டார்கள்.
 ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டிருக்கும் நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாகவும், அணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உயர்நிலைக் குழுவிடம் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களை வகுப்பதற்காக தனியான குழு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் தலைமையிலான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் திரும்பப் பெறும்படி தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 ""புதிய அணையைக் கட்டியே தீருவோம்'' என்று கொக்கரிக்கும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ""தமிழகத்துடன் பேசத் தயார்'' என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
 ""மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் கேரள அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற முடிவை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்றும் கூறியுள்ளார்.
 வீண் சண்டைக்கு இழுத்து, சமாதானம் பேசும் கட்டப்பஞ்சாயத்து முறை இது. இதற்குத் தமிழகம் உடன்பட வேண்டுமா?
 "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித நாகரிக வரலாற்றை ஆய்வு செய்தாலும், நீரும் நீர் மேலாண்மையுமே மனித இனத்தின் அடிப்படை உரிமையாகிறது.
 "நீரின்றி அமையாது உலகு' என்று குறள் கூறுகிறது. மனித நாகரிக வரலாற்றில் வேளாண்மையே முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணமான தண்ணீரின் மேலாண்மையே மனிதர்களை நாகரிக மனிதர்களாக மாற்றின. பல நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் உருவானதற்கும் இதுவே காரணமாகிறது.
 "நாகரிகத்தின் தொட்டில்கள்' என்று அழைக்கப்படும் நான்கு பெரும் நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே அமைந்தன. தலைசிறந்த எகிப்து நாகரிகம் நைல்நதியின் கரையிலேயே அமைந்திருந்தது. அதனால்தான் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் "எகிப்து என்பது நைல்நதியின் கொடை' என்று எழுதினர்.
 மனிதனுக்கும், தண்ணீருக்கும் உள்ள உறவை விளக்குவதற்கு எகிப்து நாகரிகமே சிறந்த எடுத்துக்காட்டாகும். எகிப்து நாட்டு மக்களின் வாழ்க்கையும் நைல்நதியையே நம்பியிருந்தது.
 இதே காலகட்டத்தில் மத்திய ஆசியாவில் உள்ள யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் என்ற இரு நதிகளுக்கிடையில் வளர்ந்த நாகரிகமே சுமேரிய நாகரிகம். இங்கும் வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்த நாடு இப்போது இராக் என அழைக்கப்படுகிறது. இப்போது இது படும் பாடு உலகம் அறியும்.
 சுமேரிய நாகரிகத்தைப் போலவே சீனாவிலும் யாங்ட்úஸ மற்றும் ஹுவாங்ஹோ என்ற ஆற்றுப்படுகைகளிலும் பாசனமும், வேளாண்மையும் அதையொட்டிய நாகரிகமும் வளர்ந்திருந்தன. சுமேரியர்களைவிட அதிகமாக வெள்ளத்தின் துயரத்துக்கு ஆளானவர்கள் சீனமக்கள். கடந்த 3000 ஆண்டுகளில் 1500 முறை வெள்ளச்சேதம் விளைவித்த ஹுவாங்ஹோ நதியை "சீனாவின் துயரம்' என்றே வரலாறுகள் கூறுகின்றன.
 சிந்து நதியின் விளைவாக உருவானதால்தான் அது "சிந்து நதி நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது. மற்ற நாகரிகங்களை ஒப்பிட்டு நோக்கும்போது சிந்துவெளி நகரங்களின் அமைப்பு வியப்பூட்டுகிறது.
 மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இரு நகரங்கள் வல்லுநர்களையே திக்குமுக்காட வைத்தது. சிந்து நதியின் பாசன வேளாண்மை சிறந்த நிலையில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
 உலகின் எல்லா நதிகளும் இதைப்போன்ற நாகரிகங்களை உருவாக்கிவிடவில்லை. ஆரம்பத்தில் மனிதர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதற்கு ஆறுகளில் பாசன வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.
 இந்தப் பெருமைமிக்க நீர்ப்பாசன முறையை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் வளர்த்தெடுத்தனர். அதற்கு எடுத்துக்காட்டே முல்லைப் பெரியாறு அணையும், மேட்டூர் அணையுமாகும். வறட்சிப் பிரதேசமாக இருந்த மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் மக்களை வாழ வைப்பதற்கு வைகை நதியால் முடியவில்லை. 1861 - 62-ம் ஆண்டுகளில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டது. இப்பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்; பல்லாயிரக்கணக்கானவர்கள் பிழைப்புத் தேடி வெளியிடங்களுக்குப் போயினர்.
 வைகை நதி வறண்டுபோன காலங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் ஓடும் பெரியாறு ஏராளமான நீரை வீணாகக் கடலில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நீரைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமாகும்.
 1808-ல் சர் ஜேம்ஸ் கால்டுவெல் இத்திட்டத்தை ஆய்வு செய்தார். கர்னல் பென்னி குயிக் கடுமையான உழைப்பால் கட்டி முடித்தார். 1895 அக்டோபரில் ஆளுநர் வென்லாக் பிரபு முறைப்படி திறந்து வைத்தார். 999 ஆண்டுகளுக்கு திருவனந்தபுரம் அரசு சென்னை அரசுக்குக் குத்தகைக்கு விட்டது. 999 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது உடன்படிக்கை.
 இதன் மூலம் மிகவும் பின்தங்கியிருந்த மதுரை, இராமநாதபுரம் பகுதிகள் புதுவாழ்வு பெற்றன. 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே விளைநிலமாக இருந்த இப்பகுதிகளுக்குப் பாசன வசதியளித்து 2 லட்சம் ஏக்கர் நிலப்பகுதியை விளைநிலமாக்கி, அப்பகுதி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்துவிட்டது. அதற்கும் இப்போது சோதனை வந்துவிட்டது; சொல்ல முடியாத வேதனையும் வந்துவிட்டது.
 ஆங்கிலேயரின் மனிதநேயம் நம் மக்களை வாழ வைத்தது. நம் அண்டை மாநில சகோதரர்களால் நம் வாழ்வாதாரங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகளாகி விட்டதால் பழையதாகிவிட்டதாம். அணை பலவீனமாகி விட்டது. அது உடைந்தால் மக்களுக்கு பெருஞ்சேதம் விளையுமாம். அதனால் அணையை உடைப்போம் என்று கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால், உடைவது அணை மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதை மறந்துவிட்டனர். ஆத்திரத்தில் ஓர் அரசாங்கமே அறிவிழந்து போகலாமா?
 ""மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு தண்ணீர் காரணமாக இருக்கக் கூடாது. நதிநீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அதை நம் நாடு தாங்காது...'' என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எச்சரித்துள்ளார். இது தேசத்துக்குத் தேவையான நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அபாய அறிவிப்பு.
 நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை தேசிய அளவிலான அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல் நாட்டின் நீர் ஆதாரத்தையும் நிர்வகிக்க தேசிய அளவிலான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அவர் கருத்து.
 அமெரிக்காவில் உள்ள மிசிசிபி ஆறு அந்நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஆற்றுநீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 200 ஆண்டுகளாக மிசிசிபி ஆற்று நீர்ப் பங்கீடு, பராமரிப்பு அந்த நாட்டு ராணுவத்தின் பொறுப்பில் உள்ளது என்பதால் இதை ஏற்கத் தயக்கம் வேண்டியதில்லை.
 "இப்போது நம் நாட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களைத் தேசியமயமாக்க வேண்டும் என்றும், ஆறுகள், அணைகளை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அதன் மூலம் நமது நாடு அமைதியாக வளர்ச்சிப் பாதையில் செல்லும்' என்றும் அப்துல் கலாம் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
 இது தக்க தருணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சரியான தீர்வாகும்; இதற்கு எந்த அரசியல் சாயமும் பூச வேண்டிய தேவையில்லை. நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டும்.
 "கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்' விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. தென்னக ஆறுகள் இணைப்புத் திட்டமும் பேச்சோடு போனது. இவை செயல்படுத்தப்பட்டிருக்குமானால் இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நதிநீர்ப் பிரச்னையையும் தவிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் இந்தத் திட்டங்களை மட்டுமல்ல, நாட்டு மக்களையும் கைவிட்டுவிட்டது.
 "அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்' என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்திய நாட்டில் நதிநீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரம் உள்நாட்டுப் போருக்கான ஒத்திகையாக இருக்கக் கூடாது.

பிரபஞ்சத்தின் பெருமை கூடங்குளம்

உயிர் வாழ்வதற்கு நீர் எப்படி அவசியமானதோ, அதே அளவுக்கு நமது அன்றாடத் தேவைக்கு மின்சாரமும் அவசியமானது. மின்சாரம் இல்லாமல் ஓரணுவும் அசையாத நிலை உருவாகிவிட்டது. ஆனால், மின்பற்றாக்குறையால் பல்வேறு மாநிலங்கள் திண்டாடி வருகின்றன.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்குவது ஒன்றே இதற்குத் தீர்வாக இருக்க முடியும்.
இந்தியாவில் நீர் மின் நிலையம், அனல் மின் நிலையம், அணு மின் நிலையம், காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கு இத்தனை வழிகள் இருந்தும், நமது நாட்டில் 65 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரம், அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால், நிரந்தர மின் உற்பத்தியைக் கருத்தில் கொண்டு, அனல் மற்றும் அணு மின் நிலையங்களை நாடியே ஆக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இதன் காரணமாக, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் கடந்த 10 ஆண்டு உழைப்பின் விளைவாக, நாட்டின் தென்கோடியில் உருவானது கூடங்குளம் அணுமின் நிலையம். இதற்குத்தான் போராட்டக்காரர்களால் சோதனை வந்துள்ளது.
அணுமின் நிலையத்தில் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால், பல கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும் மக்கள் மாண்டு போவார்களென, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம்தான் போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், ஜப்பான் புகுஷிமா அணு உலையை சுனாமி தாக்கியதால் ஏற்பட்ட விளைவு. கூடங்குளம் அணுமின் நிலையம் மிகக் குறைந்த அளவிலான நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அணு உலையும் முற்றிலும் அதிநவீனமானது. கடல்மட்டத்தில் இருந்து 8.7 மீட்டர் உயரத்தில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளதால் பூகம்பம், சுனாமி, குண்டுவெடிப்பு, விமான மோதல் போன்ற எந்தவித இயற்கை, செயற்கைத் தாக்குதல்களையும் அணு உலை தாங்கும்.
ஏதேனும் விபத்து நடந்தால், அணு எரிபொருள்கள் புவிஈர்ப்பு சக்தி மூலம் பூமிக்கு அடியில் சென்று தானாக மூடிக்கொள்ளும். அணுக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜப்பான் புகுஷிமா அணு உலையில் சுனாமி தாக்குதலால் தண்ணீர் சூடாகி, ஹைட்ரஜன் வாயு உருவாகி புகை மண்டலம் ஏற்பட்டது.
அதுபோன்ற பிரச்னை ஏற்படாமல் தடுக்க, அணு உலையில் உருவாகும் ஹைட்ரஜனைக் குளிர்வித்து நீராக மாற்றும் "ஹைட்ரஜன் மறு இணைப்பான்கள்' பொருத்தப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளில் பொருளாதார வல்லரசு நாடான அமெரிக்காவின் மக்கள் தொகை, உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே. ஆனால், அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 120. அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி அளவு 1,01,229 மெகாவாட். பிரான்ஸ் மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 0.94% மட்டுமே. அணு உலைகள் எண்ணிக்கை 69; அதன்மூலம் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் 63,236 மெகாவாட்.
சீன மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 19.2%. அணு உலைகள் எண்ணிக்கை 15; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 11,078 மெகாவாட்.
பாகிஸ்தான் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 2.55%. அவர்கள் வைத்துள்ள அணு உலைகள் எண்ணிக்கை 2; அதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் 725 மெகாவாட்.
இந்திய மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 17.35%. அணு உலைகள் எண்ணிக்கை 20; இதன்மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு வெறும் 4,780 மெகாவாட் என்ற நிலையில், உலக அளவில் 15-வது இடத்திலேயே உள்ளது.
மக்கள்தொகையில் இரட்டை இலக்க சதவிகிதத்தில் கூட வராத நாடுகள், அணுமின் உற்பத்தியில் லட்சம் மெகாவாட் உற்பத்தி செய்து, மின் மிகை நாடுகளாக உள்ளன. ஆனால், உலக மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கும் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் அணுமின் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கிறது.
உலக மக்கள்தொகையில் 4.48% மட்டுமே உள்ள அமெரிக்காவுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்போது, உலக மக்கள்தொகையில் 17%க்கும் அதிகமாக உள்ள இந்தியாவுக்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படும்?
இந்தியாவில் அணு உலைகள் எண்ணிக்கை குறைவு; ஆனால், மக்கள்தொகையும் மின்சாரத் தேவையும் அதிகம். இதன் காரணமாகவே அணுமின் நிலையம் இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகிறது. எந்தத் துறையிலும் ஆபத்து இல்லாமல் இல்லை.
அணுமின் நிலையம் அமைக்க, கூடங்குளத்தை தேர்ந்தெடுத்ததை அனைவரும் பெருமையாகக் கருத வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமாக கூடங்குளம் உருவெடுக்கும்; இதை இந்தப் பிரபஞ்சம் காணும்.