Total Pageviews

Blog Archive

Friday, 22 April 2011

திருத்தங்கள் இன்றி விரைவில் அறிக்கை: ஐ.நா.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்ததின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதன் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
நிபுணர் குழுவுக்கு ஐ.நா. குழு என்ற அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்ற நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா வெளியிடக்கூடாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டுவருகிறார்.
இந்த நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை எவ்வித திருத்தங்களும் இன்றி கூடுதல் விரைவில் வெளியி்டவுள்ளதாக ஐ.நா. அறிவித்துவிட்டது.
இலங்கை அரசாங்கத்தின் பதிலையும் பெற்றுக்கொண்டே அறிக்கையை வெளியிடவேண்டும் என்பதே ஐ.நா.வின் எண்ணம் என தலைமைச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளரன பர்ஹான் ஹக் அறிவித்துள்ளார். 


நிபுணர்குழு அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்கள், போரின் இறுதிக்கட்டங்களின்போது, அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பொதுமக்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அவை தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை இலங்கை அரசாங்கத்தின் பதில் கிடைக்கும்வரை ஐ.நா. நீண்டகாலம் காத்திருக்காது என்பது தெரிகிறது.


இந்து கோயில் விவகாரம்: தாய்லாந்து-கம்போடியா படைகள் மோதல்

பாங்காக், ஏப்.22- 
எல்லையோரத்தில் அமைந்துள்ள இந்து கோயில் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சர்ச்சையில், தாய்லாந்து - கம்போடியா படையினர் இடையே இன்று துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்றது.இந்த மோதலில் மொத்தம் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கம்போடிய வீரர்கள்.பிரே விஹார் என்னும் இடத்தில் உள்ள 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோயில் தங்களுக்குச் சொந்தம் என்று இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், டா கிராபே என்னுமிடத்தில் உள்ள மற்றொரு இந்து கோயில் தொடர்பாக இன்று மோதல் ஏற்பட்டதாக, கம்போடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சும் சொச்சீத் தெரிவித்தார். இன்றைய மோதலில் தங்கள் தரப்பில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, சுரின் மாகாணத்தில் சர்ச்சைக்குரிய கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து, சுமார் 5 ஆயிரம் பொதுமக்களை வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பான்: கடலில் அணுக்கதிர்வீச்சு 20 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு

டோக்கியோ, 
ஏப்.22:  ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் அணுக் கதிர் வீச்சு பசிபிக் கடலில் கலந்து வருகிறது. இது ஆபத்தான அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்த அணுமின் நிலையத்திலிருந்து 5,000 டெராபிகியூரெல் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஆண்டு கடலில் கலக்க அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகமாகும். கதிர்வீச்சுக் கழிவின் அளவு 520 டன் அளவுக்கு இருக்கும் என தெரியவந்துள்ளது.  அணு மின் நிலையத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக வெளியாகும் கதிர்வீச்சு அளவு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு கதிர்வீச்சு கடலில் பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ஆனால் கடலில் இப்போது பரவியதாகத் தெரிவிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கடலில் அணுக் கதிர்வீச்சு பரவி வருகிறது.  மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதைத் தொடர்ந்த சுனாமி பேரலையின் தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்ட்டது. இதனால் இந்த ஆலையைச் சுற்றியிருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். இதனால் ஆலையைச் சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  இருப்பினும் இந்த ஆலையில் அணு உலையைக் குளிர்விக்கும் பணியில் 6 ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து அணு உலை 2-ன் ரியாக்டர் டர்பைனிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  இந்தக்கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் வெளியேற்றுவதற்குப் பதில் கடலில் கலக்க விடுவதால் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேயிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு 4.3 டன் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது