ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம், 24-15 என்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றது பற்றி இலங்கையில் எப்படியான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன? இதோ, இப்படித்தான்:
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், “15 நாடுகள் எமக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது பெரும் திருப்தி அளிக்கிறது” என்கிறார்.
“அந்த 15 நாடுகள் மீதும் பல்வேறு விதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அவ்வளவு அழுத்தங்களின் மத்தியிலும், 15 நாடுகள் எமக்கு வாக்களித்துள்ளன. வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் உள்ளன. 15 நாடுகள் எமக்கு வாக்களித்ததன் மூலம், தீர்மானத்தை எதிர்த்துள்ளன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல், தீர்மானத்தைவிட்டு ஒதுங்கி நின்றுள்ளன. மொத்தத்தில், 23 நாடுகளுக்கு இந்த தீர்மானத்தில் உடன்பாடு கிடையாது.
24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. வித்தியாசம் 1 வாக்குதான். இந்தியா எமக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், தீர்மானம் தோற்றுப் போயிருக்கும்” என்றும் கூறியுள்ளார் அவர்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷே, “வெளிநாட்டு நெருக்குதல்கள் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. இதெல்லாம் சாதாரணம். வெளிநாட்டு நெருக்கடிகளை வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய நிலைமை எமது நாட்டில் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம் இவ்வாறான வெளிநாட்டு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படியான நெருக்கடிகளை எல்லாம் முறியடிக்க எங்களால் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே, “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள உறவில் எவ்வித மாற்றமும் கிடையாது. இந்தியா எமக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுக்கும்போது, அவர்களுக்கு உள்நாட்டில் (இந்தியாவில்) சில அரசியல் அழுத்தங்கள் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை இந்திய அரசுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷேவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேவும், இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்கள்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் செயலாளர் குமாரஸ்ரீ ஹெட்டிகே, “இந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் சிலர், இலங்கைக்கு எதிரான நாடுகளுடன் சேர்ந்து, எமக்கு துரோகம் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இவர் யாரைப்பற்றி குறிப்பிடுகிறார்? எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பற்றியா?