Total Pageviews

Thursday, 26 May 2011

பாக். வைத்துள்ள அணு ஆயுதங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-ஏ.கே.அந்தோணி

டெல்லி: பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் விடுமோ என்ற அபாயம் எழுந்துள்ளது. கராச்சி சம்பவத்திற்குப் பின்னர் இந்த அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார் அந்தோணி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பாகிஸ்தானில், கராச்சி கடற்படைத் தளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அந்த நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். 2 விமானங்கள் அழிக்கப்பட்டன.

இந்த கடற்படைத் தளத்துக்கு அருகில் உள்ள ரகசிய இடத்தில்தான் அணுஆயுதங்கள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி அணுஆயுதங்களைக் கைப்பற்றினால் பெரும் ஆபத்து நேரிடும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் அணுஆயுத விவகாரத்தில் இந்திய முப்படைகள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுவதாகவும், இப்போதே அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஆனால், இதுகுறித்து இப்போது வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. எனவே, எந்தப் பிரச்னையும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயாராக உள்ளன என்றார் அவர்.