Total Pageviews

Sunday, 16 October 2011

சவூதி பெண்களுக்கு முதல் வெற்றி

சவூதி அரேபியாவில் முஸ்லிம் பெண்கள் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கி மன்னர் அப்துல்லா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதக் கோட்பாடுகளையும், கடுமையான சட்டங்களையும் பின்பற்றி வரும் சவூதியில், முதன்முறையாக இப்படி ஓர் அறிவிப்பு வெளியானது முஸ்லிம் பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி எனலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டாலும், 2015-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில்தான் இது நடைமுறைக்கு வரும்.
சவூதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வந்தாலும் அங்கு இஸ்லாமிய சட்டங்கள்தான் அமலில் உள்ளன. மன்னர் அதிகாரம் மிகுந்தவர் என்று சொன்னாலும், மதத் தலைவர்கள்தான் அங்கு செல்வாக்கு பெற்றவர்கள். அவர்களை மீறி எதுவும் நடந்துவிடாது. இன்னும் சொல்லப்போனால் மறைமுகமாக ஆட்சியை நடத்தி வருபவர்கள் மதத் தலைவர்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது.
மதத் தலைவர்களைக் கலந்து ஆலோசித்து, அதன் பின் ஷுரா கவுன்சில் எனப்படும் முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய குழுவின் கூட்டத்தில் விவாதித்த பின்னரே தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவது குறித்து முடிவு எடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பெண்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படுவதில்லை; அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பலரும் எங்களைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதை நான் மறுக்கிறேன். ஷரியத் சட்டத்தின்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்கிறார் அவர்.
வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய மாற்றமாக கருதுவதாகவே அந்த நாட்டைச் சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
1995-ல் அப்போதைய மன்னர் பாத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அப்துல்லாதான் மறைமுக ஆட்சி நடத்தி வந்தார். பின்னர் 2005-ல் மன்னர் பாத் மறைவை அடுத்து அப்துல்லா ஆட்சிக்கு வந்தார். மன்னர் அப்துல்லா ஒரு சீர்திருத்தவாதி. படிப்படியாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்பது சிலரின் கருத்து.
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்கள் சவூதி நகரங்களில் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சவூதி பெண்கள் ஓர் இயக்கமாகத் தொடங்கி, தங்களுக்குக் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று மாபெரும் பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு இருந்தது. ஆனால், பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதித்திருந்த தடையை நீக்க மன்னர் அப்துல்லா மறுத்துவிட்டார்.
சவூதியில் பெண்களுக்கான சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தபோதிலும், அங்கு சீர்திருத்தங்கள் வராமல் இல்லை. அண்மையில் மன்னர் அப்துல்லா, பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், பெண்கள் சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலும் ரியாத் நகரில் மகளிர்க்கு என மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளார். இதற்கான செலவு 5.3 பில்லியன் டாலர்.
நாட்டில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வி வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், புதிதாக ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகள் இங்குள்ள மக்களுக்குத் தரப்படாமல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்தால் அதில் என்ன லாபம்?
மேலும் கல்விக்கூடங்களில் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இளைஞர்களைத் தயார்படுத்தாமல், மதத்தின் அடிப்படையிலேயே கல்வி அமைந்திருந்தால் அதனால் எதிர்கால இளைஞர்களுக்கு என்ன பயன் என்று கேட்கிறார் சவூதி மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் உள்ள ஒருவர்.
சவூதி அரேபியா எண்ணெய் வளம் கொழிக்கும் பணக்கார நாடுகளில் ஒன்று. மற்ற அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளதைப் பார்க்கும்போது, சவூதி அரேபியாவிலும் மக்கள் ஒன்றுதிரண்டு கிளர்ச்சியில் இறங்கிவிடக்கூடாது என்ற கவலை மன்னர் அப்துல்லாவுக்கு உள்ளது. இதற்காகவே கோடிக்கணக்கான தொகையை அவர் செலவழித்து வருகிறார்.
இதன் எதிரொலியாகவே முஸ்லிம் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்படுவதாக மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆண்களைப்போலவே தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று கோரி, தனி இயக்கத்தைத் தொடங்கிவிட்டனர் பெண்கள்.
2015-தேர்தலில் பெண்கள் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பெண்களுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் மேலும் சில மாற்றங்கள் வரக்கூடும்.
கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடைக்காவிட்டாலும், வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளதை ஒரு சலுகையாகப் பெண்கள் நினைக்கிறார்கள். தேர்தலுக்கு வாக்குரிமை அளிக்கும் உரிமை என்பது அவர்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம் எனலாம்.
தேர்தலில் வாக்களித்தும், போட்டியிட்டும் வெற்றிகாணும் பெண்கள், நாளை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.