Total Pageviews

Saturday, 7 May 2011

தண்ணீர்-உணவுப் பற்றாக்குறை அபாயம்: மத்திய திட்டக்குழுவுக்கு கருணாநிதி கோரிக்கை

"தண்ணீர், உணவுப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும்' என்று மத்திய திட்டக்குழுவுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:உலகத்தின் மக்கள் தொகை அடுத்த நூற்றாண்டில் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் 50 ஆண்டுகளில் அதாவது 2060-ல் 170 கோடியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நமது நாட்டில் 2030-ல் தண்ணீர், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், பெரும்பாலான தண்ணீர், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறையிலும் எதிரொலிக்கும் என்றும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும் என்றும், சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.மக்கள் தொகை குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையையும், தண்ணீர், உணவுப் பற்றாக்குறை குறித்து சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெரும் கவலை ஏற்படுகிறது. இந்த கணிப்புகளையெல்லாம் மத்திய திட்டக்குழு முன்னெச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொள்ளும் என நம்புகிறேன்.