நீதியான விசாரணை யொன்றை இலங்கை அரசு தானே நடத்துமென்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா என்று இந்தியாவிடம் இராஜதந்திர ரீதியில் கேட்டிருக்கிறது அமெரிக்கா.
இதற்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்கினால் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை உடனடியாக அமைப்பது பற்றிய விடயத்தை மீள்பரிசீலனை செய்ய முடியுமென்று அமெரிக்கா இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருப்பதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
ஐ. நா. மனித உரிமைகள் சபைக் கூட்டம் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சர்வதேச பொறி முறை ஒன்று அவசியமென்று மேற்குலக நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்கா இந்தியாவிடம் குறித்த உத்தரவாதத்தைக் கோரியுள்ளது.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை குறித்து இந்தியா இதுவரை எதுவித பதிலையும் வழங்கவில்லை.
அதே சமயம், கொழும்பு வந்து புதுடில்லி செல்லும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் அங்கு இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தவுள்ளாரெனக் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்தப் பதிலே சர்வதேச அரங்கில் இலங்கைத் தொடர்பான தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமென மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.