Total Pageviews

Blog Archive

Friday, 22 April 2011

ஜப்பான்: கடலில் அணுக்கதிர்வீச்சு 20 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு

டோக்கியோ, 
ஏப்.22:  ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் அணுக் கதிர் வீச்சு பசிபிக் கடலில் கலந்து வருகிறது. இது ஆபத்தான அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்த அணுமின் நிலையத்திலிருந்து 5,000 டெராபிகியூரெல் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஆண்டு கடலில் கலக்க அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகமாகும். கதிர்வீச்சுக் கழிவின் அளவு 520 டன் அளவுக்கு இருக்கும் என தெரியவந்துள்ளது.  அணு மின் நிலையத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக வெளியாகும் கதிர்வீச்சு அளவு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு கதிர்வீச்சு கடலில் பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ஆனால் கடலில் இப்போது பரவியதாகத் தெரிவிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கடலில் அணுக் கதிர்வீச்சு பரவி வருகிறது.  மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதைத் தொடர்ந்த சுனாமி பேரலையின் தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்ட்டது. இதனால் இந்த ஆலையைச் சுற்றியிருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். இதனால் ஆலையைச் சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  இருப்பினும் இந்த ஆலையில் அணு உலையைக் குளிர்விக்கும் பணியில் 6 ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து அணு உலை 2-ன் ரியாக்டர் டர்பைனிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  இந்தக்கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் வெளியேற்றுவதற்குப் பதில் கடலில் கலக்க விடுவதால் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேயிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு 4.3 டன் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது