ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா 'லிட்டிஸ் பாய்' என்ற அணுகுண்டை வீசி தாக்கியது. அதில் சுமார் 1.4 லட்சம் பேர் பலியாயினர். இதன் நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இது நடந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஹிரோசிமா-நாகசாகியின் வலி இன்னும் மறையவில்லை.
அதே நேரத்தில் உலக நாடுகளின் 'அணு ஆயுத தாகமும்' இன்னும் குறையவில்லை.
ஒரு பக்கம் பனிப் போர் காலத்தில் தயாரித்து குவித்து வைத்த அணு ஆயுதங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் அழித்து வந்தாலும், இன்னொரு பக்கம் இரு நாடுகளுமே போட்டி போட்டிக் கொண்டு நவீன ரக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
'Global nuclear weapons inventories, 1945-2010' என்ற ஆய்வறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
ராபர்ட் நோரிஸ், ஹேன்ஸ் கிரிஸ்டென்சன் ஆகிய சர்வதே அணு ஆயுத நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் விவரம்:
இந்தியா மற்றும் பாகி்ஸ்தானிடம் தலா 150 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒரு டிரைடன்ட் ரக நீ்ர்மூழ்கியிலேயே 150 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் உள்ளன.
அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல், வட கொரியா போன்ற நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.
இன்றைய நிலையில் உலகின் 9 அணு ஆயுத நாடுகளிடம் சுமார் 22,400 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதில் 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் உள்ளன.
இதில் அமெரிக்காவிடம் 9,400 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 5,100 அணு ஆயுதங்கள் பென்டகன் வசமும் மற்றவை அமெரிக்க அணு சக்தித் துறையிடமும் உள்ளன.
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்சிடம் தான் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. பிரான்சிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன.
அடுத்த நிலையில் சீனா உள்ளது. அந்த நாட்டிடம் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் 100 அணு ஆயுதங்களைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் பிரிட்டனும் பிரான்சும் தங்களது அணு ஆயுதங்களை பெருமளவு குறைத்துவிட்டன. பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தனது ஏவுகணைகளின் எண்ணிக்கையை பிரிட்டன் வெறும் 50 ஆக சுருக்கிவிட்டது. இவற்றால் மொத்தமே 150 அணு ஆயுதங்களையே ஏந்திச் செல்ல முடியும். மேலும் தன்னிடம் உள்ள 3 அணு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிகளில் ஒன்றை மட்டுமே பிரிட்டன் இயக்கி வருகிறது.
பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்து வருகிறது. 1964ம் ஆண்டில் 1,260 அணு ஆயுதங்கள் வைத்திருந்த பிரான்ஸ் அதை 1992ல் 540 ஆகக் குறைத்தது. இப்போது 300 ஆக்கிவிட்டது. தொடர்ந்து இவை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி கூறியுள்ளார்.
இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவுகள் மதிப்பிட்டுள்ளன.
1945ம் ஆண்டு முதல் உலகில் சுமார் 1.28 லட்சம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 55 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலும் 43 சதவீத ஆயுதங்கள் சோவியத் யூனியன்/ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டன. 1986ம் ஆண்டில் தான் உலகில் மிக மிக அணு ஆயுதங்கள் இருந்தன.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் 'Strategic Arms Reduction Treaty (New START)' ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த ஆயுத ஸ்டாக்குகளை குறைத்து வருகின்றன. அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியும் அளித்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு சுமார் 1,000 அணு ஆயுதங்களை ரஷ்யா அழித்து வருகிறது.
அமெரிக்கா இதுவரை 60,000 அணு ஆயுதங்களை அழித்துவிட்டது. ஆனால், இதிலிருந்த 14,000 புளுட்டோனியம் கருக்களை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. இதைக் கொண்டு எந்த நேரமும் புதிய அணு ஆயுதங்களைத் தயாரித்து விடலாம். இந்த புளுட்டோனியம் பேன்டெக்ஸ் பிளாண்ட் மற்றும் டென்னசி மாகாணத்தி்ல் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பிரிட்டனிடம் 1970ம் ஆண்டில் தான் மிக அதிகபட்சமாக 350 அணு ஆயுதங்கள் இருந்தன. இதில் மூன்றில் ஒரு பகுதி ஆயுதங்களை அந்த நாடு அழித்துவிட்டது.
ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதத் தயாரிப்பை தீவிரமாக்கியுள்ளன. அதே போல அமெரிக்காவும் ரஷ்யாவும் ரகசியமாக நவீன ரக அணு ஆயுதத் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
மேலும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் 500 ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் சுமார் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்றும் மேலும் 105 அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான புளுட்டோனியமும் இருக்கலாம் என்று தெரிகிறது.
பாகிஸ்தானிடம் 90 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 90 ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான அணு கதிர்வீச்சு பொருட்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.