ஐரோப்பியர்களின்
வருகை கடல்மார்க்கமாக இந்தியாவுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில்
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமாவில் தொடங்குகிறது.வாஸ்கோடகாமா
தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையில்தான்
முதன்முதலில் 20-5-1498-ல் கால் பதிக்கிறார். இதைத் தொடர்ந்து ஐரோப்பாவின்
மற்றைய நாடுகளைச் சார்ந்தவர்களும் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு வரத்
தொடங்கினார்கள்.அனைத்து ஐரோப்பியர்களின் வருகையும் ஆரம்ப கட்டத்தில்
வணிக நோக்கம்தான். அன்றைய இந்திய பூபாகம் எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஒரே
நாடாகவும் இல்லை, ""இந்தியா'' என்றும் வழங்கப்படவில்லை. வடக்கே தில்லி
மொகலாய சாம்ராஜ்யம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.தெற்கே
விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட
சிறுசிறு பகுதிகளை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிதைவுக்கு முன்னர்
நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. எனவே 17-ம்
நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, 18, 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியப்
பகுதியில் பலம்வாய்ந்த சாம்ராஜ்யங்கள் உருவாகவில்லை. மாறாக, சிதறுண்ட
500-க்கும் மேற்பட்ட சிறுசிறு நிலப்பகுதிகளைச் சிற்றரசர்களும்,
ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்து வந்தனர்.இந்தச்
சூழ்நிலையில்தான் திருப்பதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்திரகிரியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வெங்கடாத்திரியிடம் 22-8-1639-ம் நாள்
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி, சாந்தோம் கடற்கரைப் பகுதியை ஒட்டி வணிகம்
செய்துகொள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தைத்
தொடர்ந்துதான், ஆங்கிலேயர்கள் வணிகத்தைப் பெருக்கி இங்கு தங்களது ஆட்சியை
நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார்கள். இந்தியாவின்
தென்பகுதிதான் ஆங்கிலேயர்களின் வணிகநோக்கத்துக்கும், அரசியல் அதிகாரத்தைக்
கைப்பற்றுவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் களமாக அமைந்திருந்தது.ஆங்கிலேயர்கள் படிப்படியாகத் தங்களின் வணிக நோக்கத்திலிருந்து விலகி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டனர்.18-ம்
நூற்றாண்டு முழுமையும், ஆங்கிலேயர்கள் இந்தியப் பகுதியில் குறிப்பாகத்
தென்னிந்தியப் பகுதியில், தங்களின் நவீன ராணுவ பலத்தாலும், இங்கிருந்த
துரோகிகளின் துணையோடும், ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தனர்.
இந்த மண்ணையும், மக்களையும் அடிமைப்படுத்த வந்த மாற்றானை எதிர்க்கும்
திறன்கொண்டவர்களாக நெஞ்சுரம் கொண்டவர்கள் இருந்தார்கள். ஆம்! அவர்கள்
ஆங்கிலேயர்களை எதிர்த்துக் களத்தில் நின்றார்கள். ஆயுதம்தாங்கிப் போர்
செய்தார்கள், இறுதிவரை மரணத்துக்கு அஞ்சாமல் போர்க்களத்தில் மாண்டனர்,
தூக்குமேடையிலும் மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.வெள்ளையனின் வெடிமருந்துகளும், இங்கிருந்த துரோகக் கும்பலும் அவர்களின் வெற்றியை இறுதியில் உறுதி செய்தது.தென்பகுதியில்
நெல்லைச்சீமையில் பூலித்தேவன், தீரன் திப்புசுல்தான், வீரபாண்டிய
கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், கேரளவர்மா, விருப்பாச்சி கோபாலநாயக்கர்,
தூண்டாஜ்வாக், தீரன் சின்னமலை, கிருஷ்ணப்பநாயக்கர் எனப் பட்டியல் தொடரும்.
பின்னர் இந்தியாவின் வடபகுதியிலும் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற
குறுநில மன்னர்களும் உண்டு. ஆனால், இவர்களுடைய வரலாறுகள் சமீபகாலமாகத்தான்
வெளிவரத் தொடங்கியுள்ளன.இன்னும் வெளிக்கொண்டு வராத வரலாறுகள் நிரம்ப
இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்துப்
போரிட்டு மாண்டுபோன மான மறவர்களின் முழுமையான வரலாறுகளை, இளம் வரலாற்று
ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்.சென்னை, கல்கத்தா,
தில்லி, மைசூர் மேலும் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ்
நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களில் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் வருகையை
நோக்கி வரலாற்றுக் குறிப்புகள் காத்துக் கிடக்கின்றன. அந்த வரலாற்றின்
பக்கங்கள் ஒவ்வொன்றும் வருங்காலச் சமுதாயத்துக்காக நாட்டுப்பற்றையும்,
தன்னலமற்ற தியாகத்தையும், ஆதிக்க எதிர்ப்பு உணர்வையும் எடுத்துக்காட்டும்
கலங்கரை விளக்குகளாக அமையும். எதிர்கால இளைஞர்கள் அறிவியல் ஆற்றலைவிட,
அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணமும் கொள்கையும் "நாட்டுப்பற்றும்,
தன்னலமற்ற தியாகமும்தான்! ஆதிக்க எதிர்ப்பு உணர்வும்தான்!!'உலக
நாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சில நாடுகள் முன்னேற்றப் பாதையில்
மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும் சில நாடுகள் முன்னேற்றத்துக்கு
வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.உலகமயம், தாராளமயம், தனியார்மயம்
என்கின்ற அணுக்கதிர்வீச்சைப்போல், மனித சமுதாயத்தை அழித்துச் சிதைத்திடும்
அந்தக் கொள்கைகளைத்தான் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்தக்
கொள்கைகள் நமது நாட்டின் பொருளாதார அடிமைத்தனத்துக்கு வழிவகுத்து மீண்டும்
மறுகாலனி ஆதிக்கத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. உலக வல்லரசுகளும்,
பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கி அமல்படுத்திக் கொண்டிருக்கும்
சதித்திட்டங்களிலிருந்து, நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டியவர்கள்
நாம். இரண்டாம் விடுதலைப்போரை முன்னின்று நடத்த வேண்டிய வரலாற்றுக்
கட்டாயத்தில் உள்ள நம் இளைஞர்களைத் தயார் செய்யும் புனித நோக்கமே இந்தக்
கட்டுரையில், முதல் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துக் கடும் விளைவுகளையும்,
அழிவுகளையும் வியத்தகு நெஞ்சுரத்துடன் விரும்பி ஏற்றுக்கொண்ட மாவீரர்களின்
மயிர்க்கூச்செறியும் போராட்ட வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளில் ஓர்
அத்தியாயத்தின் மறுபார்வையாகும்.சிவகங்கைச் சீமையின் மாமன்னர்
மருதுபாண்டியர்களின் 210-வது (27-10-2011) நினைவு நாள். 210 ஆண்டுகளுக்கு
முன்னர் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மாவீரர்கள்
500-க்கும் மேற்பட்டோர்கள் திருப்பத்தூர் கோட்டை அருகில் 24-10-1801-ம்
நாள் தொடங்கி 27-10-1801-ம் நாள் முடிய தூக்கிலிடப்பட்டனர்.
தூக்கிலிடப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவர்.இந்தத் துயர
நிகழ்ச்சிக்குப் பின்னர் எஞ்சியிருந்த புரட்சியாளர் எழுபத்தி மூன்று பேர்
""பிரின்ஸ் ஆப் வேல்ஸ்'' என்ற பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நாட்டுப்பற்றை உயிரென மதிக்கும் இந்திய குடிமக்களும், குறிப்பாகத்
தமிழர்களும் அந்தப் புரட்சியாளர்களுக்கு இந்த 210-ம் ஆண்டு நினைவுநாளில்
நன்றியும் வீரவணக்கமும் செலுத்துவோம்.நாடு கடத்தப்பட்ட அனைவரும்
வெள்ளைத்தளபதி ஜேம்ஸ் வெல்ஸ் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு ராணுவக்
கட்டுப்பாட்டுடன் 1802-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடித்
துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கிருந்து 11.2.1802-ம்
நாள் "அட்ரமில் நெல்சன்' என்ற கப்பலை லெப்டினென்ட் "ராக்ஹெட்' என்பவர்
வழிநடத்த தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புரட்சியாளர்களை ஏற்றிக்கொண்டு
பயணமானது.76 நாள்கள் கடல் பயணத்துக்குப் பின்னர் கப்பல் பினாங்
துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் புரட்சியாளர்களுக்கு உணவு சமைப்பவர்களைத்
தவிர, அனைவருக்கும் கைவிலங்கு மாட்டப்பட்டிருந்தது. கப்பலிலும், கடலிலும்
தங்களை மாய்த்துக்கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அறியாத பூமியில்
தெரியாத மக்கள் மத்தியில் இறக்கிவிடப்பட்டனர்.பினாங்குத் தீவில்
இறக்கிவிடப்பட்டவர்களில் எவரும் மருதுபாண்டியர் மகன் துரைச்சாமியைத் தவிர,
நம் நாட்டுக்குத் திரும்பி வந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் எதுவும் இங்கு
இல்லை. அங்கு அநாதையாக விடப்பட்ட புரட்சியாளர்களின் கதி என்னவாயிற்று,
வாரிசுகள் எதுவும் உண்டா என்கிற அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் நமக்குக்
கிடைக்கவில்லை.1818-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் மருதுபாண்டியர்
மகன் துரைச்சாமி ஜேம்ஸ் வெல்ஸின் பரிந்துரையின் அடிப்படையில்
தமிழ்நாட்டுக்குத் திரும்பியதாகவும், அவரும் மர்மமான முறையில் மதுரைக்கு
அருகில் வண்டியூரில் இறந்துவிட்டதாகவும் பேராசிரியர் ராஜய்யன் வரலாற்றுக்
குறிப்பொன்றைத் தருகிறார். நாடு கடத்தப்பட்ட 73 பேரும் பல்வேறு சமுதாய -
மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்
சார்ந்தவர்கள்.1800 - 1801-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் மாமன்னர்
மருதுபாண்டியர்களால் நடத்தப்பட்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதமேந்திய
போராட்டம், மக்கள் போராட்டமாக - மக்கள் புரட்சியாக உருவெடுக்க வேண்டுமெனத்
திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த
ஆங்கிலேயர் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். நாடு
கடத்தப்பட்ட 73 புரட்சியாளர்களும் அவர்களின் சொந்தப்பகுதி மக்களுக்கும்,
உறவினர்களுக்கும் இதுவரையிலும் தெரியாத செய்தி.இந்த உருக்கமான
வரலாற்றுச் செய்திகளை மருதுபாண்டியரின் நினைவு நாளில் வெளிக்கொண்டு வருவதன்
மூலம் தமிழ் மக்கள் காலம் கடந்துவிட்டாலும் அவர்களுக்கு வீரவணக்கம்
செய்வதை மறக்கவில்லை என்பதையும் காலமும் கயவர்களும் ஒன்று கூடித்
தடுத்தாலும், உண்மைகள் ஒருநாள் பூகம்பம்போல் வெடித்துக் கிளம்பும்
என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.இந்த வரலாற்றுப்பதிவின் இன்றைய
மறுபார்வை அந்த வீரத்தியாகிகளின் உணர்வும், உணர்ச்சியும் நம்
வாரிசுகளுக்கும் இருந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஏக்கப்பார்வை.
அவர்களின் ஏக்கத்தைப் போக்கிட நம் நாட்டு இளைஞர்கள் ஓர் அணியில் திரண்டிட
வேண்டும். நாட்டுப்பற்றையும், தன்னலமற்ற தியாகத்தையும், ஆதிக்க எதிர்ப்பு
உணர்வையும் முறையே உயிராய், விழிகளாய் கருதிச் செயல்பட இந்நாள் ஒரு
நன்னாளாகும். அந்த வேள்விக்கு இது புனித நாள்.அந்த வீரத்தியாகிகளின்
நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் ஆதிக்க எதிர்ப்பு உணர்வும்
மங்காமல், மலுங்காமல் காலமெல்லாம் சுடர்விட அவர்கள் கடைசியாக இந்த
மண்ணிலிருந்து கப்பலேறிய தூத்துக்குடித் துறைமுகத்தில் நினைவுச்சின்னம்
அமைத்திட மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டுமென்பதே அனைத்துத்
தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் ஆகும்.