ஜெனீவாவில் சற்று நேரத்துக்குமுன் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக 24 நாடுகளும், ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. எந்தப் பக்கம் வாக்களிக்கும் என அதிக சஸ்பென்ஸை ஏற்படுத்தியிருந்த இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.
இலங்கைக்கு இரு அயல்நாடுகள் உள்ளன. ஒன்று இந்தியா, மற்றையது மாலதீவு. இவற்றில், இந்தியா, எதிர்த்து வாக்களித்திருக்க, மற்றைய அயல் நாடான மாலதீவு, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
மற்றொரு விஷயம், இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஒரேயொரு ஆசிய நாடு இந்தியாதான். வாக்களிப்பில் கலந்துகொண்ட மற்றைய அனைத்து ஆசிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்தன. பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, மாலைதீவு, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களாக 47 நாடுகள் உள்ளன. தீர்மானம் வெற்றிபெற 24 வாக்குகள் தேவை. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்ததால், இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் இரு தரப்பையும் ஆதரிக்காமல், நடுநிலைமை வகித்தன.
சில நாடுகள் வாக்களிப்பதற்குமுன், தாம் எதற்காக ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்கின்றன என தமது கருத்தை தெரிவித்துவிட்டு வாக்களித்தன. இதோ, சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களித்த காரணங்களைப் பாருங்கள்:
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பங்களாதேஷ் நாட்டுப் பிரதிநிதி, “குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மட்டுமே இப்படியான தீர்மானங்களை கொண்டு வருவதை நாம் விரும்பவில்லை. அதனால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
சீனாவின் பிரதிநிதி, “இலங்கையில் உள்நாட்டு விவகாரம் இது. அதில் தலையிடுவது, மற்றொரு நாட்டின் இறைமையில் தலையிடுவது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். ரஷ்யப் பிரதிநிதி தெரிவித்த கருத்தும் இதோதான்!
மாலதீவு பிரதிநிதி, “குற்றச்சாட்டு சரியானதுதான். ஆனால், அதை ஆராய்ந்து திருத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு கொடுத்த கால அவகாசம் போதாது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார். கிர்கிஸ்தான் பிரதிநிதி கூறிய காரணமும் இதேதான்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் பிரதிநிதி, “நீண்டகால யுத்தம் முடிந்து இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு நாட்டின் (இலங்கை) மீது அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கை இது என்பதால், தீர்மானத்துக்கு எதிராக (இலங்கைக்கு ஆதரவாக) வாக்களிக்கிறோம்” என்றார்.
கியூபா நாட்டு பிரதிநிதி, மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை தெரிவித்தார். “இலங்கைக்கு எதிரான நடவடிக்கை, இரட்டை நிலைப்பாட்டை (double standards) உடையது. சில நாடுகள் எந்த போர்க் குற்றமும் செய்யலாம். அதற்கு விசாரணை கிடையாது. இலங்கை போன்ற சில நாடுகள் மீதுதான் விசாரணை வைக்கிறீர்கள்.
அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையை கோருகின்றன. இவர்கள் ஏன் லிபியாவில் நேட்டோ படைகளும், ஈராக்கில் அமெரிக்கப் படைகளும் செய்த போர்க் குற்றங்களையும் விசாரிக்க கோரவில்லை? நாங்கள் (கியூபா) இலங்கையின் நண்பர். இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கிறோம்” என்று தெரிவித்தார் கியூபா பிரதிநிதி.
இலங்கைக்கு எதிராக (பிரேணைக்கு ஆதரவாக) வாக்களித்த நாடுகள்:
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரியா, இத்தாலி, நார்வே, ஸ்பெயின், பெல்ஜியம், சுவிட்ஸர்லாந்து, கிரீஸ், ஹங்கேரி, போலந்து, மால்டோவா, ருமெனியா, சிலி, காஸ்டா ரிக்கா, கௌதமாலா, மெக்சிகோ, பெரு, உருகுவே, பெனின், கெமரூன், லிபியா, மொரிசியஸ், நைஜீரியா.
இலங்கைக்கு ஆதரவாக (பிரேணைக்கு எதிராக) வாக்களித்த நாடுகள்:
பங்களாதேஷ், சீனா, இந்தோனேஷியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கத்தார், சவூதி அரேபியா, தாய்லாந்து, கியூபா, ஈக்குவடோர், ரஷ்யா, காங்கோ, மொரிட்டானியா, உகன்டா.
வாக்களிப்பில் நடுநிலை வகித்த நாடுகள்:
ஜோர்தான், அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பெஸோ, டிஜிபோட்டி, செனகல், கிர்கிஸ்தான்.