மேரிலாண்ட் மருத்துவ மையத்தில் முகம் சிதைந்த ஒருவருக்கு, உடல் உறுப்பு தானம் செய்த ஒருவரது முகப் பகுதிகளை எடுத்து பொருத்தி மருத்துவர்கள் செய்துள்ள முழு முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. உடல் உறுப்பு தானம் செய்தவரின் சாயல் புதிய முகத்தில் இல்லை என்பதுதான் வெற்றிக்கு அடிப்படையே.
மேலும், உலகிலேயே இந்த அறுவை சிகிச்சைதான் அதிக நேரம், அதிக செலவில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது.
விர்ஜீனியாவைச் சேர்ந்த ஹில்ஸ் ரிச்சாட் லீ நோரிசுக்கு (வயது 37) 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் முகப்பகுதிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பற்கள், மூக்கு, நாக்கின் ஒரு பகுதி, உதடுகள் ஆகியவற்றை அவர் இழந்துவிட்டார். மூக்கு முற்றிலும் சேதமடைந்து நுகரும் உணர்வே இல்லாமலும், பாதி நாக்குடன், முகத்தில் பல்வேறு தையல்களும், கண் பார்வை குறைந்தும் இருந்ததால் ரிச்சர்ட், வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே வாழ்ந்து வந்தார்.
இவருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த ஒருவரது முகப் பாகங்களை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை செய்ய மேரிலாண்ட் மருத்துவ மையம் முடிவெடுத்தது.
அதன்படி, வேறொருவருடைய உடலில் இருந்து மேல் மற்றும் கீழ்தாடை, பற்கள், மூக்கு, நாக்கின் எஞ்சிய பகுதி மற்றும் முக திசுக்களை எடுத்து ரிச்சர்ட்டிற்கு பொருத்தும் அறுவை சிகிச்சை 36 மணி நேரம் நடைபெற்றது.
அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் ரிச்சர்ட், தற்போது பல் துலக்குகிறார், முகச் சவரம் செய்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன் இழந்த நுகரும் உணர்வையும் அவர் திரும்ப பெற்றுவிட்டார்.
தனக்கு புதிய முகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ரிச்சர்ட். தானும் மற்றவர்களைப் போல வெளியில் நிம்மதியாக நடமாட முடியும் என்றும், தன்னை யாரும் விநோதமாக பார்க்க மாட்டார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.