Total Pageviews

Blog Archive

Wednesday, 6 April 2011

ஈரான் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்

தெஹ்ரான்: பிராந்திய நாடுகளில் ஈரான் தலையிடுவதாக குற்றம் சுமத்துமாறு வளைகுடா அரபு நாடுகளுக்கு அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் அழுத்தம் கொடுத்திருந்ததாக தெரிவித்திருக்கும் ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் பஹ்ரெயினிலிருந்து சவூதி அரேபியப் படைகள் வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

குவைத் மற்றும் பஹ்ரெய்ன் விவகாரங்களில் ஈரான் அழையா விருந்தாளியாகத் தலையிடுவதாக வளைகுடா மற்றும் அரபு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தன. ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வளைகுடா அரபு நாடுகளினால் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அஹமதி நிஜாத் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அது சட்டரீதியான பெறுமதியை கொண்டிருக்கவில்லையெனவும் கூறியுள்ளார்.

ஷியா பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சவூதி அரேபியப் படைகள் பஹ்ரெயினுக்குள் கொண்டுவரப்பட்டனர்.அவ்வாறு அவர்கள் கொண்டுவரப்பட்டமை மிகவும் கொடூரமான நிகழ்வு.அவர்களை வெளியேற்றுங்கள்.மக்கள் அதனையே வலியுறுத்துகின்றனர்.அவர்களின் கோரிக்கைகளை செவிமடுங்கள் எனவும் அஹமதி நிஜாத் வலியுறுத்தியுள்ளார்.

வளைகுடா அரபு நாடுகளின் இராச்சியங்கள் அமெரிக்காவின் பிடிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது.அந்நாடுகள் ஈரானுடனான உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் அஹமதி நிஜாத் கூறியுள்ளார். நட்புறவைப் பேணுவதற்கான எமது கரங்களை நாம் நீட்டியுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஷியோனிஷ்ட் ஆட்சி அற்ற புதிய மத்திய கிழக்கு விரைவில் உருவாகும் எனவும் அதில் அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் பிரதிநிதித்துவம் இருக்காதென்றும் அஹமதி நிஜாத் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இவ்விடயத்தில் இஸ்ரேலைச் சுட்டிக்காட்டியுள்ள அஹமதி நிஜாத் மேற்குலகின் தலையீடானது மத்திய கிழக்கு நாடுகளை ஷியோனிஷ்ட் பிராந்தியமாக்குவதை நோக்காகக் கொண்டதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடுகளின் உள்ளக விடயங்களில் ஈரான் தலையிடப் போவதில்லையெனவும் அஹமதி நிஜாத் குறிப்பிட்டுள்ளார். ரைம்ஸ் ஒப் இந்தியா