Total Pageviews

Blog Archive

Wednesday, 26 October 2011

தேவைதானா கூடங்குளம்?

தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையத்தை நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். தமிழக அமைச்சரவையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடி அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமரின் தூதராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளத்துக்குச் சென்று அங்கு போராடும் மக்களைச் சந்தித்துப் பேசினார்.

ஐ.நா  கூட்டம் முடிந்து பிரதமர் நாடு திரும்பியபின் போராட்டக் குழுவினரைச் சந்திப்பார் என அவர் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக இந்த மாதம் ஏழாம் தேதி பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது.தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில், சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூடங்குளம் போராட்டக் குழுவினரும், தில்லியில் பிரதமரைச் சந்தித்தபொழுது, பராமரிப்புப் பணிகள்தான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது என்று பிரதமர் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இன்னும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்படாமல் இருக்கும்பொழுது, அங்கு பராமரிப்புப் பணிக்கு என்ன தேவை என்று ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை?

இடிந்தகரையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து 12 நாள்கள், 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, தினமும் 10,000-க்கு மேல் மக்கள் திரளாகப் போராடியதைத் தாற்காலிகமாக நிறுத்துவதற்குத்தான் மத்திய, மாநில அரசுகள் இப்படிப் பசப்பு உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனவா?1985-ல் திட்டமிடப்பட்டு, 1988-ல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்தபொழுது ராஜீவ் காந்தி கோர்பச்சேவ் ஒப்பந்தத்தில் ரஷியத் தொழில் நுட்பம் மூலம் அணுமின் உற்பத்திக்குக் கூடங்குளம் திட்டம் கையெழுத்திடப்பட்டது. அப்பொழுதே போராட்டங்கள் எழுந்தன. அந்தச் சூழலை அறிந்து பிரதமர் ராஜீவ் காந்தி தொடக்க விழாவுக்கு வரமுடியாத நிலையும் ஏற்பட்டது. 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அமைந்த ஆளுநர் ஆட்சியில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணங்களை பலமுறை மேற்கொண்டார். இந்தப் பிரச்னை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பயந்து சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தது.இந்தப் பிரச்னையில் உள்ள அபாயங்களை அறியக் குழு அமைத்து முடிவுக்கு வரவேண்டும் என 1989-ல் அமைந்த திமுக அரசு குறிப்பிட்டது. இதற்கிடையில் சோவியத் யூனியன் சிதறுண்டு பல்வேறு நாடுகளாகப் பிரிந்தது. இதனால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.கிடப்பில் போடப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை, 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த பிறகு மீண்டும் உயிர் பெற்றது. 1997-ல் தேவெ கௌட பிரதமராக இருந்தபொழுது, இரண்டாவது ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்குப் பிறகு பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. ரூ.13,500 கோடித் திட்ட மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்பட இருந்தது.கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கும்பொழுது மக்களின் கருத்துகளை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், இதுகுறித்தான முழு விவரங்களை மக்களுக்குப் புரிதலோடு சொல்லவுமில்லை. 

கூடங்குளம் வட்டார மக்களுக்கு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கிடைக்குமென்றும் உறுதிமொழிகள் கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால், இவ்வட்டார மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் நடைபெறவில்லை.உள்ளூரைச் சேர்ந்த வெறும் 35 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் எல்லாம் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீரும் வரவில்லை. சமீபத்தில் அப்பகுதி மக்களிடம் பேரிடர் வகுப்புகள் நடத்தப்பட்டபொழுது, ஆபத்து வந்தால் மூக்கு, கண், காது ஆகியவற்றை அடைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என சொல்லியபொழுதுதான், அங்குள்ள மக்கள் பீதியுடன் விழித்துக் கொண்டனர்.அதன் பின்தான் முச்சந்தி, டீக்கடை பிரசாரமாக இருந்த நிலை மாறி, போர்க் குணத்தோடு பொதுமக்கள் எழுந்தனர். அதற்குப் பிறகுதான் கூடங்குளம் பகுதி மக்களின் உரிமைக்குரல் சென்னை கோட்டைக்கும், தில்லி செங்கோட்டைக்கும் கேட்கத் தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாவது தலைமுறையின் தொழில்நுட்பத்தால் இத்திட்டம் நிறுவப்படுவதால் ஆபத்து இல்லை என்று இந்த அணுமின் நிலைய இயக்குநர் பாலாஜி கூறினாலும், அது வெறும் ஒப்புக்குச் சொல்கிற வாதமாகத்தான் உள்ளது. வேறு சில அணு விஞ்ஞானிகளும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளைச் சொன்னாலும், இயற்கையை எதுவும் விஞ்ச முடியாது என்பதுதான் நியதி. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் 3,50,000 பேர் அங்கிருந்து வெளியேறினர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர் வீச்சால் லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். புற்றுநோய் வந்து தொடர்ந்து மரண வாயில்வரை சென்றவர்கள் பலர். 

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைவிட 40 மடங்கு செர்னோபில் கதிர்வீச்சு அதிகமானது. செர்னோபில் கதிர் வீச்சு தாக்கம் இன்றும் உக்ரைனில் உள்ளது. அந்த நாட்டில் பெறப்பட்ட தொழில் நுட்பம் நமது நாட்டுக்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? இந்த நாசகார சக்தியை நாமே நமக்காக வாங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி.உலக அளவில் நாடுகள் அணு உலை வேண்டாம்; முடிந்த அளவு காற்றாலை, சூரிய சக்தி, கடல், குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா என நினைக்க ஆரம்பித்துவிட்டன. சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அணு உலைகளைத் தவிர்க்க வேண்டுமென கூறுகின்றன.பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலைத் திட்டத்துக்குத் தாங்கள் கொண்டிருந்த ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன.20 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து, 1000 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலைகளினாலான மின் உற்பத்தி வெறும் 4 சதவீதம் என்பதற்காக ஜெர்மனி 2022-க்குள் அனைத்து அணு உலைகளையும் மூட முடிவு செய்துவிட்டது. அப்படிப்பட்ட ஆபத்தான அணு உலைகளை நாம் மட்டும் அமைக்க வேண்டுமா?

கடந்த 2011 மார்ச்சில் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமியால் யுரேனியம் உருகி, கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் நீரில் அணு உலைகள் மூழ்கிய பின்னும் வெப்பத்தின் தாக்கத்தால் மனித இனம் அழிந்ததை மறக்க முடியுமா? இன்றுவரை கதிர்வீச்சால் புகுஷிமாவில் மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்ற செய்தி வந்தவண்ணம் உள்ளது. விஞ்ஞானத்தில் மேம்பட்ட நாடுகளே பாதிக்கப்படும்பொழுது, நமக்கு அபாயகரமான இந்தச் சூழல் தேவைதானா என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி.கூடங்குளம் அணு உலையில் 3.5 சுற்றளவு கொண்ட உருளைகளில் யுரேனியம் அடைக்கப்பட்டு உலைகளின் மத்தியில் வைக்கப்படுகின்றது. அதிலிருந்து அணு பிளப்பதால் அதிக வெப்பம் வெளிப்படும். இந்த வெப்பத்தை நீரில் செலுத்தி, அதிலிருந்து ஜெனரேட்டரில் உள்ள மின்காந்தக் கம்பிகள் மூலம் மின்சாரம் பெறப்படும். ஓர் அணு பன்மடங்கு பிளந்துகொண்டே இருப்பதால், யுரேனியம் உள்ள உலையிலிருந்து அதிகமாக வெப்பம் உருவாகும். தற்போது இந்த உலைகளைக் குளிர்விப்பதற்காகத் திரவ உலோகம் பயன்படுத்தப்படும்.இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய கழிவுகள் வெளியேறும். யுரேனிய உருளை சுமார் 18 மாதங்களுக்கொருமுறை மாற்றியாக வேண்டும். இவற்றால் கதிரியக்கம் ஏற்படும். அதனால் அந்தக் கழிவுகளை எங்கே விடுவது என்கிற கேள்வி எழுகிறது. அவற்றை ஒன்று மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது கடலின் ஆழத்தில் கொண்டு போய்விட வேண்டும். இருப்பினும்கூட, அதன் தாக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து கொண்டே இருக்கும். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.ஒருபக்கம் அணு ஆலை வெடித்தாலோ, சேதமானாலோ பெரும் ஆபத்து உண்டாகும். அதேபோல இந்த ஆலை செயல்பட ஆரம்பித்தால் வெளியேறும் அணுக் கழிவுகளாலும் பெரும் பிரச்னை ஏற்படும். முதலில் அணுக் கழிவுகள் ரஷியாவுக்குக் கொண்டு செல்லப்படும் எனவும், பின்னாளில் அது இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் எனக் கூறுகின்றனர். இது சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏதோ ஒப்புக்குச் சமாதானம் செய்யக் கூறப்படும் வார்த்தைகளாகத்தான் தெரிகிறது.வெளியேறும் 900 டன் கழிவுகளைப் பாதுகாப்பது பெரும்பாடாகும். 

இதை 24,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். சாதாரண சின்ன அளவு புளூட்டோனியத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களுக்குப் புற்றுநோய் மட்டுமல்லாமல், வேறு ஆபத்துகளும் ஏற்படும் என்கிறார்கள்.இந்தக் கழிவுகளை பலமான கான்கிரீட் தொட்டிகள் அமைத்து பூமிக்குக் கீழே புதைத்தாலும் கதிரியக்கம் தணியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருபக்கம் அணு உலையால் பயங்கர விபத்து ஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள்; மறுபக்கத்தில் அணு உலை செயல்பட்டு அதனால் வரும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள்.இப்படிப் பிரச்னைகளை நாம் வலியப்போய் விலைகொடுத்து வாங்கத்தான் வேண்டுமா என்பதற்குச் சரியான பதில் கிடையாது.நெல்லை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை ஓரத்திலிருந்து சுரண்டைவரை நில அதிர்வுகளும், பூமிக்குக் கீழ் வெப்பப் பாறைக் குழம்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் உள்ளன. அவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூடங்குளத்துக்கும் சேர்ந்துதான் அந்தப் பாதிப்பு வரும். நான்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மனும், மகேந்திரகிரியில் உள்ள அணு மின் சம்பந்தமான கேந்திரமும் அருகில் உள்ளன.இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் அதனால் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல பாதிக்கப்படும் அபாயம் நிறையவே உள்ளது. அதன் தொடர் பாதிப்பு, வடக்கே மதுரை, தெற்கே இலங்கை, மேற்கே திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை என மீள முடியாத சோகத்துக்கு நாம் ஆள்பட நேரிடும். போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த நச்சுவாயுக் கசிவிலிருந்து இன்றுவரை நாம் மீள இயலவில்லை என்பதை நாம் எப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியும்?தொலைவிலிருந்து அணு உலை குறித்து ஆயிரம் சமாதானங்கள் சொல்லலாம். கூடங்குளத்தில் நடைபெற்ற சாதாரண சோதனை ஓட்டத்துக்கே அந்த வட்டார மக்கள் பயந்தனர். குழந்தைகள் கதறி அழுதனர். இப்படி தினமும் சகிக்க முடியாத சத்தம் கேட்டால் எப்படி மக்கள் கூடங்குளம் பகுதியில் வாழ முடியும்?மேற்கு வங்கத்தில் ரஷிய நாட்டின் அணு மின் நிலையம் வருவதை மம்தா பானர்ஜி நிறுத்திவிட்டார். 

கேரளத்தில் மக்கள் எழுச்சியால் அணு மின் நிலையம் வருவது தடைப்பட்டது. ஆந்திரத்திலும், மகாராஷ்டிரத்திலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. அவ்வாறு இருக்கும்பொழுது நாம் மட்டும் கூடங்குளத்துக்கு ஆமாம் சாமி போடுவது சரிதானா?அதெல்லாம் போகட்டும். தங்களது மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைந்து அதன் பாதிப்பை எதிர்கொள்ளக் கேரளமோ, கர்நாடகமோ, ஆந்திரமோ தயாராக இல்லை. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கத் தமிழகம் ஏற்றுக்கொண்டு, தென் மாவட்ட மக்களின் நல்வாழ்வை அந்த அணு உலைகளில் ஏற்படும் பாதிப்பு பல தலைமுறைகளைப் பாதிக்கும் ஆபத்தை வலிந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் முழுமையாகத் தமிழகத்துக்கு மட்டுமானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை. தென்னக மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.அதாவது, கூடங்குளத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும். பாதிப்பு தமிழகத்துக்கும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கும் மட்டும். எப்படி இருக்கிறது கதை?

வரலாற்றுப்பதிவின் இன்றைய மறுபார்வை

ஐரோப்பியர்களின் வருகை கடல்மார்க்கமாக இந்தியாவுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமாவில் தொடங்குகிறது.வாஸ்கோடகாமா தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையில்தான் முதன்முதலில் 20-5-1498-ல் கால் பதிக்கிறார். இதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் மற்றைய நாடுகளைச் சார்ந்தவர்களும் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள்.அனைத்து ஐரோப்பியர்களின் வருகையும் ஆரம்ப கட்டத்தில் வணிக நோக்கம்தான். அன்றைய இந்திய பூபாகம் எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஒரே நாடாகவும் இல்லை, ""இந்தியா'' என்றும் வழங்கப்படவில்லை. வடக்கே தில்லி மொகலாய சாம்ராஜ்யம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.தெற்கே விஜயநகர சாம்ராஜ்ய சிதைவுக்குப் பின்னர் ஆங்காங்கே சிதறடிக்கப்பட்ட சிறுசிறு பகுதிகளை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிதைவுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. எனவே 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, 18, 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியப் பகுதியில் பலம்வாய்ந்த சாம்ராஜ்யங்கள் உருவாகவில்லை. மாறாக, சிதறுண்ட 500-க்கும் மேற்பட்ட சிறுசிறு நிலப்பகுதிகளைச் சிற்றரசர்களும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும் ஆட்சிபுரிந்து வந்தனர்.இந்தச் சூழ்நிலையில்தான் திருப்பதிக்கு அருகாமையில் அமைந்துள்ள சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வெங்கடாத்திரியிடம் 22-8-1639-ம் நாள் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி, சாந்தோம் கடற்கரைப் பகுதியை ஒட்டி வணிகம் செய்துகொள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்துதான், ஆங்கிலேயர்கள் வணிகத்தைப் பெருக்கி இங்கு தங்களது ஆட்சியை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார்கள். இந்தியாவின் தென்பகுதிதான் ஆங்கிலேயர்களின் வணிகநோக்கத்துக்கும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் களமாக அமைந்திருந்தது.ஆங்கிலேயர்கள் படிப்படியாகத் தங்களின் வணிக நோக்கத்திலிருந்து விலகி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியை மேற்கொண்டனர்.18-ம் நூற்றாண்டு முழுமையும், ஆங்கிலேயர்கள் இந்தியப் பகுதியில் குறிப்பாகத் தென்னிந்தியப் பகுதியில், தங்களின் நவீன ராணுவ பலத்தாலும், இங்கிருந்த துரோகிகளின் துணையோடும், ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றிக் கொண்டு வந்தனர். இந்த மண்ணையும், மக்களையும் அடிமைப்படுத்த வந்த மாற்றானை எதிர்க்கும் திறன்கொண்டவர்களாக நெஞ்சுரம் கொண்டவர்கள் இருந்தார்கள். ஆம்! அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் களத்தில் நின்றார்கள். ஆயுதம்தாங்கிப் போர் செய்தார்கள், இறுதிவரை மரணத்துக்கு அஞ்சாமல் போர்க்களத்தில் மாண்டனர், தூக்குமேடையிலும் மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.வெள்ளையனின் வெடிமருந்துகளும், இங்கிருந்த துரோகக் கும்பலும் அவர்களின் வெற்றியை இறுதியில் உறுதி செய்தது.தென்பகுதியில் நெல்லைச்சீமையில் பூலித்தேவன், தீரன் திப்புசுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், கேரளவர்மா, விருப்பாச்சி கோபாலநாயக்கர், தூண்டாஜ்வாக், தீரன் சின்னமலை, கிருஷ்ணப்பநாயக்கர் எனப் பட்டியல் தொடரும். பின்னர் இந்தியாவின் வடபகுதியிலும் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற குறுநில மன்னர்களும் உண்டு. ஆனால், இவர்களுடைய வரலாறுகள் சமீபகாலமாகத்தான் வெளிவரத் தொடங்கியுள்ளன.இன்னும் வெளிக்கொண்டு வராத வரலாறுகள் நிரம்ப இருக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்துப் போரிட்டு மாண்டுபோன மான மறவர்களின் முழுமையான வரலாறுகளை, இளம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்.சென்னை, கல்கத்தா, தில்லி, மைசூர் மேலும் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களில் சரித்திர ஆராய்ச்சியாளர்களின் வருகையை நோக்கி வரலாற்றுக் குறிப்புகள் காத்துக் கிடக்கின்றன. அந்த வரலாற்றின் பக்கங்கள் ஒவ்வொன்றும் வருங்காலச் சமுதாயத்துக்காக நாட்டுப்பற்றையும், தன்னலமற்ற தியாகத்தையும், ஆதிக்க எதிர்ப்பு உணர்வையும் எடுத்துக்காட்டும் கலங்கரை விளக்குகளாக அமையும். எதிர்கால இளைஞர்கள் அறிவியல் ஆற்றலைவிட, அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணமும் கொள்கையும் "நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும்தான்! ஆதிக்க எதிர்ப்பு உணர்வும்தான்!!'உலக நாடுகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ள சில நாடுகள் முன்னேற்றப் பாதையில் மேலும் விரைந்து செல்கின்றன. இன்னும் சில நாடுகள் முன்னேற்றத்துக்கு வழிதெரியாமலும், வழிகாட்டுதலும் இல்லாமல், பசியால், பட்டினியால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்கின்ற அணுக்கதிர்வீச்சைப்போல், மனித சமுதாயத்தை அழித்துச் சிதைத்திடும் அந்தக் கொள்கைகளைத்தான் இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்தக் கொள்கைகள் நமது நாட்டின் பொருளாதார அடிமைத்தனத்துக்கு வழிவகுத்து மீண்டும் மறுகாலனி ஆதிக்கத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. உலக வல்லரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கி அமல்படுத்திக் கொண்டிருக்கும் சதித்திட்டங்களிலிருந்து, நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டியவர்கள் நாம். இரண்டாம் விடுதலைப்போரை முன்னின்று நடத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ள நம் இளைஞர்களைத் தயார் செய்யும் புனித நோக்கமே இந்தக் கட்டுரையில், முதல் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துக் கடும் விளைவுகளையும், அழிவுகளையும் வியத்தகு நெஞ்சுரத்துடன் விரும்பி ஏற்றுக்கொண்ட மாவீரர்களின் மயிர்க்கூச்செறியும் போராட்ட வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளில் ஓர் அத்தியாயத்தின் மறுபார்வையாகும்.சிவகங்கைச் சீமையின் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 210-வது (27-10-2011) நினைவு நாள். 210 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மாவீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர்கள் திருப்பத்தூர் கோட்டை அருகில் 24-10-1801-ம் நாள் தொடங்கி 27-10-1801-ம் நாள் முடிய தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவர்.இந்தத் துயர நிகழ்ச்சிக்குப் பின்னர் எஞ்சியிருந்த புரட்சியாளர் எழுபத்தி மூன்று பேர் ""பிரின்ஸ் ஆப் வேல்ஸ்'' என்ற பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். நாட்டுப்பற்றை உயிரென மதிக்கும் இந்திய குடிமக்களும், குறிப்பாகத் தமிழர்களும் அந்தப் புரட்சியாளர்களுக்கு இந்த 210-ம் ஆண்டு நினைவுநாளில் நன்றியும் வீரவணக்கமும் செலுத்துவோம்.நாடு கடத்தப்பட்ட அனைவரும் வெள்ளைத்தளபதி ஜேம்ஸ் வெல்ஸ் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டுடன் 1802-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடித் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கிருந்து 11.2.1802-ம் நாள் "அட்ரமில் நெல்சன்' என்ற கப்பலை லெப்டினென்ட் "ராக்ஹெட்' என்பவர் வழிநடத்த தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புரட்சியாளர்களை ஏற்றிக்கொண்டு பயணமானது.76 நாள்கள் கடல் பயணத்துக்குப் பின்னர் கப்பல் பினாங் துறைமுகத்தை அடைந்தது. கப்பலில் புரட்சியாளர்களுக்கு உணவு சமைப்பவர்களைத் தவிர, அனைவருக்கும் கைவிலங்கு மாட்டப்பட்டிருந்தது. கப்பலிலும், கடலிலும் தங்களை மாய்த்துக்கொண்டவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அறியாத பூமியில் தெரியாத மக்கள் மத்தியில் இறக்கிவிடப்பட்டனர்.பினாங்குத் தீவில் இறக்கிவிடப்பட்டவர்களில் எவரும் மருதுபாண்டியர் மகன் துரைச்சாமியைத் தவிர, நம் நாட்டுக்குத் திரும்பி வந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் எதுவும் இங்கு இல்லை. அங்கு அநாதையாக விடப்பட்ட புரட்சியாளர்களின் கதி என்னவாயிற்று, வாரிசுகள் எதுவும் உண்டா என்கிற அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.1818-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் மருதுபாண்டியர் மகன் துரைச்சாமி ஜேம்ஸ் வெல்ஸின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்குத் திரும்பியதாகவும், அவரும் மர்மமான முறையில் மதுரைக்கு அருகில் வண்டியூரில் இறந்துவிட்டதாகவும் பேராசிரியர் ராஜய்யன் வரலாற்றுக் குறிப்பொன்றைத் தருகிறார். நாடு கடத்தப்பட்ட 73 பேரும் பல்வேறு சமுதாய - மதப்பிரிவைச் சார்ந்தவர்கள். தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள்.1800 - 1801-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களால் நடத்தப்பட்ட ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டம், மக்கள் போராட்டமாக - மக்கள் புரட்சியாக உருவெடுக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த ஆங்கிலேயர் ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். நாடு கடத்தப்பட்ட 73 புரட்சியாளர்களும் அவர்களின் சொந்தப்பகுதி மக்களுக்கும், உறவினர்களுக்கும் இதுவரையிலும் தெரியாத செய்தி.இந்த உருக்கமான வரலாற்றுச் செய்திகளை மருதுபாண்டியரின் நினைவு நாளில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழ் மக்கள் காலம் கடந்துவிட்டாலும் அவர்களுக்கு வீரவணக்கம் செய்வதை மறக்கவில்லை என்பதையும் காலமும் கயவர்களும் ஒன்று கூடித் தடுத்தாலும், உண்மைகள் ஒருநாள் பூகம்பம்போல் வெடித்துக் கிளம்பும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.இந்த வரலாற்றுப்பதிவின் இன்றைய மறுபார்வை அந்த வீரத்தியாகிகளின் உணர்வும், உணர்ச்சியும் நம் வாரிசுகளுக்கும் இருந்திட வேண்டும் என்பதே அவர்களின் ஏக்கப்பார்வை. அவர்களின் ஏக்கத்தைப் போக்கிட நம் நாட்டு இளைஞர்கள் ஓர் அணியில் திரண்டிட வேண்டும். நாட்டுப்பற்றையும், தன்னலமற்ற தியாகத்தையும், ஆதிக்க எதிர்ப்பு உணர்வையும் முறையே உயிராய், விழிகளாய் கருதிச் செயல்பட இந்நாள் ஒரு நன்னாளாகும். அந்த வேள்விக்கு இது புனித நாள்.அந்த வீரத்தியாகிகளின் நாட்டுப்பற்றும், தன்னலமற்ற தியாகமும் ஆதிக்க எதிர்ப்பு உணர்வும் மங்காமல், மலுங்காமல் காலமெல்லாம் சுடர்விட அவர்கள் கடைசியாக இந்த மண்ணிலிருந்து கப்பலேறிய தூத்துக்குடித் துறைமுகத்தில் நினைவுச்சின்னம் அமைத்திட மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளும், விருப்பமும் ஆகும்.

அமெரிக்காவும் பிரிட்டனும் கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள்.

நாட்டு மக்களைச் சித்திரவதை செய்தார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார், பத்திரிகைகளை முடக்கினார் என்றெல்லாம் கடாஃபி மீது குற்றம்சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றஞ்சாட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படிப்பட்டவை தெரியுமா? கடாஃபியை நம்பவைத்து வஞ்சித்த நாடுகள். 10 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானின் விஞ்ஞானி ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை வந்த பிறகு, அணு ஆயுதத் தொழில் நுட்பம் என்பது கத்தரிக்காய் வெண்டைக்காய் போலக் கிடைக்கத் தொடங்கியிருந்தது. லிபியாவும் இந்தத் தொழில்நுட்பத்தை ஒரு விலை கொடுத்து "கள்ளத்தனமாக' வாங்கியது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தோரியம் போன்ற மூலப்பொருள்கள் கிடைத்தன. இரண்டையும் கொண்டு அணுஆயுதத்தை உருவாக்கிவிட கடாஃபி திட்டமிட்டிருந்தார். மூலப்பொருள்களைச் செறிவூட்டும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் ரகசியப் பேச்சு என்கிற பெயரில் பிரிட்டனும் அமெரிக்காவும் கடாஃபிக்கு வலை விரித்தன. 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, கொஞ்சம் மேற்குப்பக்கம் கடாஃபி சாயத் தொடங்கியிருந்த காலம் அது. தனது அல்காய்தா விசுவாசத்தையும் அவர் குறைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து நாட்டுக் கலகக்காரர்களுக்கும் அவர் உதவுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடும் பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் மீதான ஆர்வத்தையும் கைவிட்டிருந்தார். அயர்லாந்து புரட்சிப் படைக்கு உதவி செய்து பிரிட்டனைச் சீண்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.ரெüடி நாடு என்கிற பெயரைப் போக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. அதனால் மேற்கத்திய நாடுகளின் சதியைத் தெரிந்து கொள்ளவில்லை. பிரிட்டனும் அமெரிக்காவும் கேட்டுக் கொண்டபடி அணு ஆயுதத்தைக் கைவிடுவதாக கடாஃபி அறிவித்தார். ரசாயன ஆயுதங்கள், நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றை ஒப்படைத்தார். இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அணு ஆயுதக் கள்ளச்சந்தையை ஏ.க்யூ.கான் உருவாக்கியிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் கொடுத்தார் கடாஃபி. பூரித்துப் போன பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் நேரில் வந்து கடாஃபியைப் பாராட்டினார். அதன்பிறகு பல முக்கிய எண்ணெய் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கடாஃபியின் படைகளுக்கு பிரிட்டன் பயிற்சி அளித்தது. இப்படிப் பல வகையிலும் கடாஃபிக்கும் மேலைநாடுகளுக்குமான நெருக்கம் அதிகரித்தது. ஆனால் இந்த உறவு உண்மையானதல்ல என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது.கடாஃபிக்கு வீசிய அதே வஞ்சக வலையைத்தான் வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகள் வீசின. ஆனால் அந்த நாடுகள் மசியவில்லை. அணுஆயுத, அணுசக்தித் திட்டங்களைக் கைவிடுவதாக இல்லை. அதனால் இன்று வரைக்கும் பொருளாதாரத் தடைகள் போன்ற சாத்வீக வழியிலேயே அந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளை நம்பி, தம்மிடம் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்த கடாஃபிக்கு துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகளை மட்டும் குறைகூறிப் பயனில்லை. வளரும் நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் சீனாவும் ரஷியாவும்கூட ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கின்றன. லிபியாவின் வான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு வந்தபோது, இந்த இரு நாடுகளும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடாஃபிக்கு இந்தக் கதி தேவைதான் என்று நியாயம் கூறப்படுகிறது.கடாஃபி பல்வேறு வகையான குற்றங்களைப் புரிந்தவராக இருக்கட்டும். அதற்காக இன்னொரு நாட்டில் புகுந்து நாட்டின் தலைவரைக் கொடூரமாகக் கொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அணு ஆயுதங்களைக் கைவிடுவோருக்கும், வைத்துக் கொள்ளாதவர்களுக்கும் இதுதான் நிலை என்றால், அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மீது உலக நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக மேற்கத்திய எதிர்ப்பு நாடுகளுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிடும். இதுவரை அணுஆயுதம் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாத நாடுகள்கூட அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சிகளைத் தேடக்கூடும். ஏ.க்யூ.கானின் ஆள்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இந்தக் காலத்தில் இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. லிபியாவிலேயே கடாஃபிக்கு கடும் எதிர்ப்பு இருந்தது என்பது உண்மைதான். தமக்கு எதிரான போராட்டங்களை ராணுவத்தின் மூலம் அடக்கினார் என்பதுதான், பாதுகாப்பு சபையில் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் முக்கிய அம்சம். ஆனால், அன்று தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றவர்கள், இன்று சிர்தே நகரையே தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். பல நூறுபேரைக் கொன்றிருக்கிறார்கள். கடாஃபியைப் பிடித்த இடத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் சிதறிக் கிடந்திருக்கின்றன. கடாஃபி எப்படிச் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் என்பதைச் சொற்களால் விவரிக்கவே முடியாது.கடாஃபி கொடூரமான குற்றவாளியாகவே இருந்தாலும், அவரைச் சித்திரவதை செய்ததன் மூலம் மேற்கத்திய நாடுகளும் மாபெரும் போர்க்குற்றம் புரிந்திருக்கின்றன. ஒபாமா கொண்டுவரும் சட்டங்களைச் சொந்தக் கட்சியினரே மதிப்பதில்லை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் பெயர் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் கெட்டுப் போயிருக்கிறது. இப்படி எதிர்கால நம்பிக்கையை இழந்தவர்கள் "நியாயத் தீர்ப்பு' வழங்கும் நிலையில்தான் இன்றைய உலக அரசியல் இருக்கிறது.

Thursday, 20 October 2011

அமெரிக்கா-பாகிஸ்தானின் 'ஹக்கானி நெட்வோர்க்' சண்டை!!



பாகிஸ்தான் உதவியோடு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கர தீவிரவாத அமைப்பான ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை கட்டுப்படுத்தும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீங்கள் நினைத்த நேரத்தில் உள்ளே நுழைய இது இராக் அல்ல. நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு என்பதை அமெரிக்கா மறந்துவிடக் கூடாது. எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒன்றுக்கு 10 முறை அமெரிக்கா யோசிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கயானி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கயானியின் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா மிக சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை பாகிஸ்தான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும், இல்லாவிட்டால் ராணுவ உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆனால், அந்த உதவிகளே தேவையில்லை என ஜெனரல் கயானி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் தங்கள் நாட்டு ராணுவத் தளபதி நேரடி மோதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பிரதமர் கிலானியும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ராணுவத் தளபதிக்கு எதிராகப் பேசினால், இவர்களது பதவிக்கும் உயிருக்குமே கூட உத்தரவாதம் இருக்காது என்பது குறிப்பிடதக்கது.

ஹக்கானி நெட்வோர்க் என்பது வானத்தில் இருந்து திடீரென குதித்த தீவிரவாத அமைப்பு அல்ல. அதை உருவாக்கியதே அமெரிக்காவும், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.

1070களில் சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட பல அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மூலம் உதவி செய்தது அமெரிக்கா. இவ்வாறு உருவாக்கப்பட்டவர்கள் தான் முஜாகிதீன்கள். இவர்களுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் ஐஎஸ்ஐ மூலம் அமெரிக்கா தந்தது.

அந்த வகையில் மெளல்வி ஜலாலுதீன் ஹக்கானி, அவரது மகன் சிராஜூதீன் ஹக்கானி ஆகியோர் தலைமையிலான இந்தத் தீவிரவாத அமைப்பையும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கின. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் மகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

தலிபான்கள், அல்-கொய்தாவைக் கூட பெருமளவுக்கு ஒடுக்கிவிட்ட அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக விளங்குவது இந்த ஹக்கானி நெட்வோர்க் தான். இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்தி வரும் தாக்குதல்களால், ஏராளமான அமெரிக்க, நேடோ படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் இந்த அமைப்பை ஐஎஸ்ஐ தான் உரம் போட்டு வளர்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், அந்த நாட்டை மறைமுகமாக கட்டுப்படுத்தும் திட்டத்தில் உள்ள பாகிஸ்தான் அதற்காக பெருமளவில் நம்பியுள்ளது ஹக்கானி நெட்வோர்க் அமைப்பைத் தான். முன்பு தலிபான்களை உருவாக்கி ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தான். ஆனால், தலிபான்களை அமெரிக்கா ஒடுக்கிவிட்டதால், இந்த முறை ஹக்கானி நெட்வோர்க்கை பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளது பாகிஸ்தான்.

இதனால், அவர்களை ஒடுக்க மறுத்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி. இதையடுத்து வசீர்ஸ்தான் பகுதிக்குள் தனது படைகளை நேரடியாக அனுப்பி ஹக்கானி நெட்வோர்க் தீவிரவாதிகள், அவர்களது முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதை கடுமையாக எதிர்த்துள்ள கயானி, எங்கள் நாடு ஈராக் அல்ல, அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என அமெரிக்காவை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்க நெருக்குதலால் தங்களால் விரட்டியடிக்கப்பட்ட பல தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் அடைக்கலம் தந்து வருவதாகவும், அவர்களுக்கு அமெரிக்க உதவியுடன் ஆயுதங்களைத் தந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த திருப்பி அனுப்பி வருவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

அதே போல உங்கள் பேச்சைக் கேட்டு ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்தால், அவர்களை நீங்கள் வளைத்துப் போட்டு, எங்கள் மீதே தாக்குதல் நடத்த திருப்பி அனுப்புவீர்கள். இதனால், ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் கை வைக்க மாட்டோம் என்கிறது பாகிஸ்தான்.

ஹக்கானி நெட்வோர்க் தலைவர்களை அமெரிக்க அதிகாரிகள் கத்தாரிலும் துபாயிலும் வைத்து சந்தித்து சமாதானப் பேச்சு நடத்தியதாகவும் கூட பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் ஹக்கானி நெட்வோர்க் என்பது பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் 'Blue eyed boys' என்கிறது அமெரிக்கா.

ஆனால், ஹக்கானி நெட்வோர்க்கை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா.

மொத்தத்தில் இந்த இருவருமே சேர்ந்து Frankenstein மாதிரி ஒரு பிசாசை உருவாக்கியுள்ளன. அதன் மீது இருவருமே நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. அந்த அமைப்பை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்காவும் முயன்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு உடையும் நிலைக்கு வந்துவிட்டதால், நிலைமையை சரி செய்ய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இன்று பாகிஸ்தான் வருகிறார். (அவர் நேற்றே ரகசிய பயணமாக ஆப்கானிஸ்தான் வந்துவிட்டார். பாதுகாப்பு காரணங்களால், அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது)

பாகிஸ்தான் நட்பு நாடு என அவர் பிரஸ்மீட்டில் பேசுவார் என்பது மட்டும் நிச்சயம். ஆனால, பூட்டிய அறைக்குள் ஹக்கானி விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் தரப்பை உருட்டி எடுக்க தன்னுடன் சிஐஏ தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ராசையும், முப்படைகளின் கூட்டுத் தலைவர் ஜெனரல் மார்டின் டெம்பிசியையும் அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானியை சந்தித்துப் பேசுவதோடு, பாகிஸ்தான் ராணுவத் தளவதி அஸ்வாக் பர்வேஸ் கயானியையும் சந்தித்துப் 'பேசவுள்ளனர்' (சண்டை போட உள்ளனர்).

நீலகிரியில் அமையும் 'நியூட்ரினோ' ஆராய்ச்சி மையம்


நீலகிரியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ளது.

இது தொடர்பாக இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு பிளவின்போதோ, சூரியக் கதிர்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது இது உருவாகிறது.

ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினம்.

சூரியனிலிருந்து கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் பூமியில் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நுழைந்து வெளியேறுகின்றன.

இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' மிக மிகக் கடினம். இதற்காக ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும்.

ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.

இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான இந்த நியூட்ரினோவால் பூமிக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து இதுவரை ஏதும் தெரியவில்லை. மேலும் நியூட்ரினோக்களை முழுமையாக ஆராய்ந்தால் அண்டம் எப்படி தோன்றியது என்பதை அறியதும் எளிதாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் நியூட்ரினோ குறித்த ஆர்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.

இதற்கான ஆய்வு மையம் அமைக்க மிகவும் தனிமையான, மாசு இல்லாத இடம் வேண்டும். மேலும் இயற்கையான சுரங்கங்கள் வேண்டும். நாடெங்கும் இந்திய அணு சக்திக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் நீலகிரி மலைப் பகுதியே இதற்கு உகந்தது என்று தெரியவந்துள்ளது.

அங்குள்ள பைகரா மின் நிலையத்துக்கு 2 கி.மீ. தொலைவில் 2,207 மீட்டர் உயரத்தில் மசினகுடி அருகே உள்ள ஒரு குன்றில் 1,300 மீட்டர் ஆழம் கொண்ட மாபெரும் சுரங்கம் உள்ளது.

இந்த இடத்தில் ஆய்வு மையத்தை அமைக்க அணு சக்திக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துவிட்ட நிலையில் முதல்வர் கருணாநிதியை ககாட்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் சந்தித்து நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து விளக்கி மையத்தை அமைக்க இடம் கோரினர்.

இதற்கு முதல்வர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அதற்கு முன் அப் பகுதியில் வசிக்கும் மக்களிடமும் இத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சந்தேகங்களையும் போக்க நடவடிக்கை எடுக்குமாறு அணு சக்தி விஞ்ஞானிகளிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த திட்டத்திற்காக மத்திய அணுசக்தித் துறை ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது.




அமெரிக்காவின் ஒரு நீர்மூழ்கியில் 150 அணு ஆயுதங்கள்!


ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா 'லிட்டிஸ் பாய்' என்ற அணுகுண்டை வீசி தாக்கியது. அதில் சுமார் 1.4 லட்சம் பேர் பலியாயினர். இதன் நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இது நடந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஹிரோசிமா-நாகசாகியின் வலி இன்னும் மறையவில்லை.

அதே நேரத்தில் உலக நாடுகளின் 'அணு ஆயுத தாகமும்' இன்னும் குறையவில்லை.

ஒரு பக்கம் பனிப் போர் காலத்தில் தயாரித்து குவித்து வைத்த அணு ஆயுதங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் அழித்து வந்தாலும், இன்னொரு பக்கம் இரு நாடுகளுமே போட்டி போட்டிக் கொண்டு நவீன ரக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

'Global nuclear weapons inventories, 1945-2010' என்ற ஆய்வறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

ராபர்ட் நோரிஸ், ஹேன்ஸ் கிரிஸ்டென்சன் ஆகிய சர்வதே அணு ஆயுத நிபுணர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் விவரம்:

இந்தியா மற்றும் பாகி்ஸ்தானிடம் தலா 150 அணு ஆயுதங்கள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அமெரிக்காவின் ஒரு டிரைடன்ட் ரக நீ்ர்மூழ்கியிலேயே 150 அணு ஆயுதங்களுடன் கூடிய ஏவுகணைகள் உள்ளன.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இஸ்ரேல், வட கொரியா போன்ற நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

இன்றைய நிலையில் உலகின் 9 அணு ஆயுத நாடுகளிடம் சுமார் 22,400 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதில் 95 சதவீதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் உள்ளன.

இதில் அமெரிக்காவிடம் 9,400 அணு ஆயுதங்கள் உள்ளன. இவற்றில் 5,100 அணு ஆயுதங்கள் பென்டகன் வசமும் மற்றவை அமெரிக்க அணு சக்தித் துறையிடமும் உள்ளன.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்சிடம் தான் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. பிரான்சிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன.

அடுத்த நிலையில் சீனா உள்ளது. அந்த நாட்டிடம் சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் மேலும் 100 அணு ஆயுதங்களைத் தயாரிக்க சீனா திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரிட்டனும் பிரான்சும் தங்களது அணு ஆயுதங்களை பெருமளவு குறைத்துவிட்டன. பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், தனது ஏவுகணைகளின் எண்ணிக்கையை பிரிட்டன் வெறும் 50 ஆக சுருக்கிவிட்டது. இவற்றால் மொத்தமே 150 அணு ஆயுதங்களையே ஏந்திச் செல்ல முடியும். மேலும் தன்னிடம் உள்ள 3 அணு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிகளில் ஒன்றை மட்டுமே பிரிட்டன் இயக்கி வருகிறது.

பிரான்ஸ் தனது அணு ஆயுத எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்து வருகிறது. 1964ம் ஆண்டில் 1,260 அணு ஆயுதங்கள் வைத்திருந்த பிரான்ஸ் அதை 1992ல் 540 ஆகக் குறைத்தது. இப்போது 300 ஆக்கிவிட்டது. தொடர்ந்து இவை குறைக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி கூறியுள்ளார்.

இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவுகள் மதிப்பிட்டுள்ளன.

1945ம் ஆண்டு முதல் உலகில் சுமார் 1.28 லட்சம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 55 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலும் 43 சதவீத ஆயுதங்கள் சோவியத் யூனியன்/ரஷ்யாவிலும் தயாரிக்கப்பட்டன. 1986ம் ஆண்டில் தான் உலகில் மிக மிக அணு ஆயுதங்கள் இருந்தன.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு அமெரிக்காவும் ரஷ்யாவும் 'Strategic Arms Reduction Treaty (New START)' ஒப்பந்தம் செய்து கொண்டு இந்த ஆயுத ஸ்டாக்குகளை குறைத்து வருகின்றன. அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்ய ரஷ்யாவுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் நிதியுதவியும் அளித்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு சுமார் 1,000 அணு ஆயுதங்களை ரஷ்யா அழித்து வருகிறது.

அமெரிக்கா இதுவரை 60,000 அணு ஆயுதங்களை அழித்துவிட்டது. ஆனால், இதிலிருந்த 14,000 புளுட்டோனியம் கருக்களை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. இதைக் கொண்டு எந்த நேரமும் புதிய அணு ஆயுதங்களைத் தயாரித்து விடலாம். இந்த புளுட்டோனியம் பேன்டெக்ஸ் பிளாண்ட் மற்றும் டென்னசி மாகாணத்தி்ல் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனிடம் 1970ம் ஆண்டில் தான் மிக அதிகபட்சமாக 350 அணு ஆயுதங்கள் இருந்தன. இதில் மூன்றில் ஒரு பகுதி ஆயுதங்களை அந்த நாடு அழித்துவிட்டது.

ஆனால் அதே நேரத்தில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆயுதத் தயாரிப்பை தீவிரமாக்கியுள்ளன. அதே போல அமெரிக்காவும் ரஷ்யாவும் ரகசியமாக நவீன ரக அணு ஆயுதத் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் 500 ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் சுமார் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்றும் மேலும் 105 அணு ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான புளுட்டோனியமும் இருக்கலாம் என்று தெரிகிறது.

பாகிஸ்தானிடம் 90 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 90 ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான அணு கதிர்வீச்சு பொருட்கள் பாகிஸ்தான் வசம் உள்ளன.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, 16 October 2011

சவூதி பெண்களுக்கு முதல் வெற்றி

சவூதி அரேபியாவில் முஸ்லிம் பெண்கள் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கி மன்னர் அப்துல்லா அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதக் கோட்பாடுகளையும், கடுமையான சட்டங்களையும் பின்பற்றி வரும் சவூதியில், முதன்முறையாக இப்படி ஓர் அறிவிப்பு வெளியானது முஸ்லிம் பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றி எனலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டாலும், 2015-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில்தான் இது நடைமுறைக்கு வரும்.
சவூதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வந்தாலும் அங்கு இஸ்லாமிய சட்டங்கள்தான் அமலில் உள்ளன. மன்னர் அதிகாரம் மிகுந்தவர் என்று சொன்னாலும், மதத் தலைவர்கள்தான் அங்கு செல்வாக்கு பெற்றவர்கள். அவர்களை மீறி எதுவும் நடந்துவிடாது. இன்னும் சொல்லப்போனால் மறைமுகமாக ஆட்சியை நடத்தி வருபவர்கள் மதத் தலைவர்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது.
மதத் தலைவர்களைக் கலந்து ஆலோசித்து, அதன் பின் ஷுரா கவுன்சில் எனப்படும் முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய குழுவின் கூட்டத்தில் விவாதித்த பின்னரே தேர்தலில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவது குறித்து முடிவு எடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பெண்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படுவதில்லை; அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பலரும் எங்களைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதை நான் மறுக்கிறேன். ஷரியத் சட்டத்தின்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்கிறார் அவர்.
வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய மாற்றமாக கருதுவதாகவே அந்த நாட்டைச் சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
1995-ல் அப்போதைய மன்னர் பாத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அப்துல்லாதான் மறைமுக ஆட்சி நடத்தி வந்தார். பின்னர் 2005-ல் மன்னர் பாத் மறைவை அடுத்து அப்துல்லா ஆட்சிக்கு வந்தார். மன்னர் அப்துல்லா ஒரு சீர்திருத்தவாதி. படிப்படியாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்பது சிலரின் கருத்து.
பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்கள் சவூதி நகரங்களில் கார் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சவூதி பெண்கள் ஓர் இயக்கமாகத் தொடங்கி, தங்களுக்குக் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று மாபெரும் பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு இருந்தது. ஆனால், பெண்கள் கார் ஓட்டுவதற்கு விதித்திருந்த தடையை நீக்க மன்னர் அப்துல்லா மறுத்துவிட்டார்.
சவூதியில் பெண்களுக்கான சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தபோதிலும், அங்கு சீர்திருத்தங்கள் வராமல் இல்லை. அண்மையில் மன்னர் அப்துல்லா, பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், பெண்கள் சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலும் ரியாத் நகரில் மகளிர்க்கு என மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளார். இதற்கான செலவு 5.3 பில்லியன் டாலர்.
நாட்டில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் கல்வி வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், புதிதாக ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்புகள் இங்குள்ள மக்களுக்குத் தரப்படாமல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்தால் அதில் என்ன லாபம்?
மேலும் கல்விக்கூடங்களில் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இளைஞர்களைத் தயார்படுத்தாமல், மதத்தின் அடிப்படையிலேயே கல்வி அமைந்திருந்தால் அதனால் எதிர்கால இளைஞர்களுக்கு என்ன பயன் என்று கேட்கிறார் சவூதி மக்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் உள்ள ஒருவர்.
சவூதி அரேபியா எண்ணெய் வளம் கொழிக்கும் பணக்கார நாடுகளில் ஒன்று. மற்ற அரபு நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து எழுந்துள்ளதைப் பார்க்கும்போது, சவூதி அரேபியாவிலும் மக்கள் ஒன்றுதிரண்டு கிளர்ச்சியில் இறங்கிவிடக்கூடாது என்ற கவலை மன்னர் அப்துல்லாவுக்கு உள்ளது. இதற்காகவே கோடிக்கணக்கான தொகையை அவர் செலவழித்து வருகிறார்.
இதன் எதிரொலியாகவே முஸ்லிம் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்படுவதாக மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆண்களைப்போலவே தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று கோரி, தனி இயக்கத்தைத் தொடங்கிவிட்டனர் பெண்கள்.
2015-தேர்தலில் பெண்கள் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் பெண்களுக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் மேலும் சில மாற்றங்கள் வரக்கூடும்.
கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடைக்காவிட்டாலும், வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளதை ஒரு சலுகையாகப் பெண்கள் நினைக்கிறார்கள். தேர்தலுக்கு வாக்குரிமை அளிக்கும் உரிமை என்பது அவர்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம் எனலாம்.
தேர்தலில் வாக்களித்தும், போட்டியிட்டும் வெற்றிகாணும் பெண்கள், நாளை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.