Total Pageviews

Blog Archive

Wednesday, 4 January 2012

குழப்பத்தில் இந்தியப் பொருளாதாரம்

வளரும் பொருளாதார நாடுகள் வரிசையில் சீனா, இந்தியா, பிரேசில் முன்னணியிலும் பின்னர் வளைகுடா நாடுகள் இதர ஆசிய நாடுகள் பின்னணியிலும் உள்ளன. எல்லாமே ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் வளர்ச்சியுற்ற யூரோ நாடுகள் மற்றும் அமெரிக்காவுடனும் பின்னிப் பிணைந்துள்ள சூழ்நிலையில், ஐரோப்பிய - அமெரிக்க வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் நிதிக்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 இப்படிப்பட்ட "குளோபல் குழப்பத்தில்' இந்தியப் பொருளாதாரம், யூரோ - அமெரிக்காவைவிட மோசமாயுள்ளதைப் புரிந்துகொள்வது நன்று. ஏற்றுமதியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் எல்லாமே அவரவர் பணத்தை மதிப்பிழக்கச் செய்கின்றனர். இது பொதுவான நிலை. அமெரிக்காவிலும் யூரோ நாடுகளிலும் வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. வாராத கடன் வரம்பு மீறிவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துள்ளது.
 அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் 2009-ஐ விட 2010-ல் நிகழாண்டு பற்றாக்குறைக் கணக்குக் கூடியுள்ளது. எனினும் 2008 -09 வீழ்ச்சியைவிட சற்றுக் குறைவுதான். சுமார் 30 சதவிகிதம் குறைவுக்குப் பின்னரும் பற்றாக்குறை நீடிக்கிறது. சுமார் 2 ட்ரில்லியன் டாலர் அளவில் பற்றாக்குறை குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
 யூரோ நாடுகளின் நிலை இன்னமும் மோசம். டாலரின் வீழ்ச்சியைக் காட்டிலும் யூரோவின் வீழ்ச்சி ஏறத்தாழ 10 சதவிகிதம் அதிகம். இன்றைய இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி இன்னமும் மோசம். ஆகஸ்டு 2011-ல் ரூ. 44.04 விலைக்கு விற்ற டாலர் டிசம்பர் 13-ம் தேதி ரூ. 53.40 என்ற நிலை. அதாவது 5 மாத வீழ்ச்சி 21 சதம். ரூபாயோடு ஒப்பிடும்போது டாலர் பலமாயுள்ளது. பலவீனமான யூரோவுடன் ஒப்பிட்டால் ரூபாயின் நிலை யூரோவைவிடக் கீழே விழுந்துவிட்டது. சரி ரூபாயின் வீழ்ச்சியால் நிகழக்கூடிய விபரீதங்கள் ஒன்றா, இரண்டா எடுத்துச்சொல்ல.
 முதலாவது பணவீக்கம் தணியாது, விலைவாசி ஏறும் என்பன உள்ளூர்ப்பிரச்னை. ரூபாயின் வீழ்ச்சிக்குரிய காரணம் முதலீட்டாளர்கள் ரூபாயை நம்பாமல் டாலரை நம்பும் நிலையில் ரூபாய் மூலதனம் டாலராக மாறியவண்ணம் உள்ளது.
 இந்தியாவில் ரூபாய்க்கு ரிப்போ வட்டி அதிகம் என்பதால் இந்தியக் கார்ப்பரேட்டுகள் குறைந்த வட்டி அல்லது வட்டியே இல்லாத டாலர் ரொக்கக்கடனில் ஆர்வம் காண்பிக்கின்றனர். ஏற்றுமதிக்குரிய உற்பத்தியில் முதலீடு செய்து கஷ்டப்படுவதைவிடத் தங்கம் வாங்கும் போக்கும் உள்ளது.
 பணவீக்கம், விலைவாசி உயர்வு எல்லாம் பழக்கப்பட்டுவிட்ட நிலையில் எந்த நாடும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவின் போக்கு விசித்திரமாகத் தோன்றலாம். டாலரை வலிமைப்படுத்துவதற்காக ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்துவதற்கு மாறாக மேலும் மேலும் டாலர் ரொக்கப் புழக்கத்தை அள்ளிவிடுவதன் மூலமே பொருளாதாரம் சீராகும் என்று எண்ணுகின்றனர்போலும்! எந்த அளவில் ஒழுங்கற்ற கடன், முதலீட்டுக் கட்டுப்பாடு ஒருங்கிணையாமல் கீன்ஸ் வகுத்த முழு வேலைவாய்ப்பு இலக்கைத் தொட முடியும்?
 அமெரிக்கா யோசிக்க வேண்டிய கேள்வியைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆனால், நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் அமெரிக்க ஏற்றுமதி பற்றியது. மலிவான டாலர் முதலீடுகளை அனுப்பி ரூபாயை விழவைத்த தந்திரம் கவலைப்பட வேண்டிய விஷயம் அல்லவா?
 டாலர் முதலீடுகள் வேண்டாம் என்று பிரேசில் மட்டும் குரல் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவோ வரவேற்கிறது. டாலர் முதலீடுகளே நம்மைக் காப்பாற்றும் என்ற அளவில் நிதியமைச்சரும் பிரதமரும் பேசி வருகின்றனர்.
 இந்தியாவுக்கு வரும் டாலர் முதலீடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும். பரிவர்த்தனை விலை மதிப்பு காரணமாக நமது நாணயச் செலாவணி பற்றாக்குறை இப்போதே கூடுதலாகியுள்ளது. மேலும் மேலும் இது அதிகமாகும்போது ஏற்றுமதி லாபமாயிருக்காது. மற்றொரு சிக்கலை அதாவது, பொருளாதாரச் சீரழிவைக் கவனிக்கலாம்.
 தொழிலில் பணம் முதலீடு ஆகாமல் ரியல் எஸ்டேட், கட்டடக் கட்டுமானம், ஷேர் - ஸ்டாக் மார்க்கெட், தனிப்பட்ட நுகர்வு போன்றவை வேலைவாய்ப்புகளைத் தோற்றுவிக்காமல் பணவீக்கத்தையும், வாராத கடனால் ஏற்படும் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.
 அமெரிக்காவில் செய்வதையெல்லாம் நாம் செய்ய வேண்டும். அமெரிக்காவையே இங்கு கொண்டுவந்து வால்மார்ட் அழகை ரசிக்க நினைத்தால் அமெரிக்கா இந்தியாவை விழுங்கி விடாதா?
 ரூபாய் மதிப்பு விழுந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏற்றுமதியாளர்களும், டாலர் பணம் வைத்துள்ளவர்களும் ரூபாயாக மாற்றிக்கொள்வதில் ஆர்வம் காண்பிக்க மாட்டார்கள்.
 இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள். ரூபாயைக் காப்பாற்றும் முயற்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் செயல்பாடுகளை நிதியமைச்சர் ஆதரிப்பதாகத் தெரியவில்லை.
 இந்தியாவின் நிதிக் கொள்கையை அதாவது, பணம் - வட்டிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வகுக்கும். பைனான்சியல் பாலிசி என்ற நிதிக்கொள்கையை நிதியமைச்சர் வகுத்தளித்தார்.
 ரூபாயைப் பலப்படுத்த ரிசர்வ் வங்கி கவர்னர் விரும்புகிறார். ரூபாயைப் பலவீனப்படுத்த பிரணாப் முகர்ஜி விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒத்துப்போனால்தான் இந்தியா உருப்படும் என்று தோன்றுகிறது.
 ஏற்றுமதியை நம்பி உயர்ந்துவரும் முன்னேற்றப் பொருளாதாரம் என்று பீற்றிக்கொள்ளும் சீனா, இந்தியா, பிரேசில், ரஷிய நாடுகளுக்கு அமெரிக்கா எப்படிப் பொறி வைத்துள்ளது என்பதை அனைத்துலகப் பொருளியலில் அரிச்சுவடி படித்தவர்களுக்குப் புலனாகும். சீனாவின் வளர்ச்சி யூரோ - அமெரிக்க ஏற்றுமதியை நம்பியுள்ளது. சமையலறைக்குரிய மின்சாதனப் பொருள், கருவிகள் - ஃபிரிட்ஜ் உள்பட சாதனங்களின் உதிரிகளை வியட்நாம், கொரியா போன்ற பல சிறிய நாடுகளிடம் சீனா இறக்குமதி செய்து, அமெரிக்க ஏற்றுமதி நிகழ்கிறது.
 இந்தியாவிலிருந்து சர்வீஸ் எக்ஸ்போர்ட் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் போன்ற பல்வேறு கணினிப் பணிகள் ஏற்றுமதி. ரஷியாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி. பிரேசிலிலிருந்து வேளாண் விளைபொருள்கள், இன்று நிலவியுள்ள "குளோபல் குழப்பம்' - வால்ஸ்டீரிட் போராட்டம் ஆகிய காரணங்களால் பொருளாதாரத்தில் விரைந்து வளரும் நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும்போது வளர்ச்சியின் தேக்கமும் உலகளாவியிருக்கும். சீன ஏற்றுமதியை அமெரிக்கா தடை செய்தால் நஷ்டம் சீனாவுக்கு மட்டுமல்ல, சீன ஏற்றுமதியை நம்பி வாழும் கிழக்காசிய நாடுகளின் வளர்ச்சியும் தடையுறும்.
 நஷ்டம் என்றாலும் டாலர் யூரோ நாடுகளுக்கு ஏற்றுமதி வழங்கலைத் தொடர்வதைத் தவிர, வேறு வழியில்லை. அதேசமயம் அமெரிக்கா மதிப்பிழந்த டாலரை பொருளாதாரத்தில் விரைந்து வளரும் நாடுகளுக்கு முதலீடுகளாக அனுப்பித் தன் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதற்கு ஏற்ப, அந்த நாடுகளை வீழ்த்தி டாலர் பரிவர்த்தனை விலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் போக்கையும் கவனிக்க வேண்டும். எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அமெரிக்க - இந்திய உறவு என்றாலும் அமெரிக்க - சீன உறவு என்றாலும் ""நாயர் பிடித்த புலிவால்'' - கதைபோல் உள்ளது.
 இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருவது "குளோபல் குழப்பம்' மட்டுமே அல்ல. உள்ளூர்க்காரணிகள் நிறைய உண்டு. குளோபல் குழப்பத்தில் தத்தளிக்கும் நாட்டுப் பொருளாதாரத்தில் வந்தவரை லாபம் என்று கொள்ளையடிக்கும் திருட்டுக்கூட்டம் திருடிக்கொண்டே வாழ்கிறது. ஊழல் கூட்டம் ஊழல் செய்த வண்ணம் உள்ளது.
 அண்மையில் ஆடிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல் துணுக்குறச் செய்கிறது. தேச வருமானத்துக்கு வரவு வைக்க வேண்டிய வருமான வரிப்பணத்தில் வரி கட்டாமல் ஏமாற்றும் 12 பெரிய நிறுவனங்களின் பங்கு 90 சதவிகிதமாம்.
 இப்படிப்பட்ட சூழ்நிலையில் உற்பத்தித் தன்மையுள்ள தொழில் - வேளாண்மையில் முதலீடு செய்யவேண்டிய அன்னிய டாலர் வணிகத்திலும், சர்வீஸ் துறையிலும் செலவாகும்போது பற்றாக்குறை பாரமாகி பணவீக்கம் தொடரும். விலைவாசி மேலும் மேலும் உயரும்.
 தொழில் உற்பத்தி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு இவற்றில் கவனம் செலுத்தாமல் கடைவிரித்து எலைட் அங்காடிகளைப் பெருக்குவதால் இந்தியப் பொருளாதாரம் சீரடையாது.
 உலகமயமாக்கல் குழப்பத்தால் இந்தியாவில் வரியை ஏமாற்றும் பணக்காரத் தொழிலதிபர்கள் கறுப்புப்பணத்தைப் பெருக்கியவண்ணம் உள்ளனர். நியாயமாகத் தொழில் செய்ய நினைக்கும் நல்லவர்கள் நசிந்து வருகின்றனர்.
 இந்தியத் தொழிலில் ஏகபோகமாக வளர்ந்துள்ள ஒரே தொழில் கந்துவட்டி. 2 வட்டி, 3 வட்டிக்கு நல்ல தொழில் செய்ய விரும்புவோருக்குக் கடன் கிடைக்கும். எவ்வளவு பாடுபட்டும் வட்டி கட்டியே வாழ்நாளைக் கடத்தும் நல்லவர்களுக்கு மலிவான கடன் கிட்டுவதில்லை.
 சீப் லிக்விடிட்டி, மொபைல் கேபிட்டல் என்று சொல்லப்படும் டாலர் பணம் உழைக்கும் தொழில் முனைவோருக்கும் விவசாயிகளுக்கும் எட்டாக் கனி. கந்து வட்டிக்கும், ரியல் எஸ்டேட்டுக்கும் டாலர் கிட்டலாம்.
 பாவம் இந்த குளோபல் குழப்பத்தில் லட்சம் லட்சமாகப் பணம் செலவழித்துப் பொறியியல் பட்டம், மென்பொருள் பயிற்சி பெற்றுள்ள இந்திய மாணவர்களின் காத்திருப்போர் பட்டியல் விரிவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் விசில் சப்தம் வராத பிரஷர் குக்கர் கொதிப்பதுபோல் உள்ளது.