
டிரிபோலி:லிபிய விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள், தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க வியூகம் வகுத்துள்ளன.லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது லிபிய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். கடாபியை பதவி விலகும் படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின.
இதற்கிடையே ஐ.நா.,வின் ஒப்புதலோடு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு படைகள், லிபியா மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் லிபியாவின் விமானப்படை தாக்குதல் ஒடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பீரங்கி மற்றும் ஏவுகணைகளை தவிடுபொடியாக்க அமெரிக்கா தலைமையிலான படைகள் திட்டமிட்டுள்ளன. ஐந்தாவது நாளாக ஜின்டான், ஜாவியா, மிஸ்ரட்டா, அஜ்தாபியா ஆகிய நகரங்களில் கடாபி ராணுவத்தின் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.