Total Pageviews

Blog Archive

Saturday, 30 April 2011

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையும் டெல்லியின் மெளனமும்

 இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் மீறல் ஆகியன பற்றி விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்திய அரசு மெளனம் காத்து வருகிறது.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசப் படைகள் நடத்திய இனப் படுகொலைப் போருக்கு (இரகசியமாக) ஆயுதம், ராடார் வழங்கியதிலிருந்து, போரை ‘வேகமாமுடிக்க’ ஆலோசனையும் தந்தது மட்டுமின்றி, அந்நாட்டு பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச கூறியது போல், ஒவ்வொரு நாளும் இந்தியாவின் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுச் செயலர் சி்வ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோருடன் ஆலோசித்து திட்டமிட்டே போரை நடத்தினோம் என்று கூறும் அளவிற்கு சிறிலங்க அரசிற்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக நின்றது. அந்தப் போர் தொடர்பாக சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதனை அப்படியே இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் கூறி, நியாயப்படுத்திய சோனியா காங்கிரஸ் அரசு, ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இதுவரை ஒரு வார்த்தையும் சொல்லாததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்று டெல்லி கூறலாம். ஆனால், பான் கி மூனிடம் அளிக்கப்பட்ட அந்த அறிக்கை, டெல்லியின் நண்பனான சிறிலங்க அரசிடன்தான் முதலில் அளிக்கப்பட்டது என்பதையும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகளை சிறிலங்க அரசே கசியவிட்டது என்பதை அறிந்த பின்னரும் ‘எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது’ என்று கூற முடியாத நிலை டெல்லிக்கு.

இருந்தாலும் டெல்லி மெளனம் சாதிப்பதற்கு உண்மைக் காரணம், அது தனது இனப் படுகொலை நண்பனை காப்பாற்ற எந்த உண்மைகளையெல்லாம் மறைத்ததோ அந்த உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது ஐ.நா.நிபுணர் குழு. அதனால்தான் பதில் சொல்ல முடியாமல் மெளனம் காக்கிறது.

மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் எண்ணிக்கை 50,000 முதல் 70,000தான் என்று சிறிலங்க அரசு கூறியதை இந்தியாவின் நாடாளுமன்றத்தில் அப்படியே கூறினாரே பிரணாப் முகர்ஜி! அந்த மூன்று வளையங்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை 3,30,000 பேர் என்பதை அன்றைக்கே உலகம் கூறியபோது, “அதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது, சிறிலங்க அரசு கூறியதைக் கூறுகிறேன்” என்றல்லவா பிரணாப் முகர்ஜி கூறினார்!





இன்றைக்கு 3,30,000 பேர் என்பது ஐ.நா.நிபுணர் குழுவால் உறுதி செய்யப்பட்டுள்ளது...

றுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000 பேர் என்ற எண்ணிக்கைக்கு ஆதாரமான தகவல் இது.

கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை பெற்றுத் திரும்பியதாகக் கூறினார் பிரணாப் முகர்ஜி. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது மட்டுமின்றி, எரிகணைகளைக் கொண்டு தொடர்ந்து தாக்கியதில்தான் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா.நிபுணர் குழு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை, ஒருவரைக் கூட கொல்லாமல் (with zero civilian casualty) அவர்கள் அனைவரையும் மீட்கும் நடவடிக்கை என்று ராஜபக்ச அரசு கூறியதை, இந்திய ஊடகங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கூறியது டெல்லி அரசு. ராஜபக்ச அரசு கூறியது அப்பட்டமான பொய் என்றும், சிறிலங்க அரசு என்ன கூறியதோ அதற்கு நேர் எதிராக எதார்த்த நிலை இருந்தது என்றும், பன்னாட்டு மனித பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்திற்கும் எதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்றும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளால்தான் மக்கள் அதிகம் கொல்லப்பட்டார்கள் என்று சிறிலங்க அரசு கூட சொல்லத் துணியாத பொய்யை காங்கிரஸ் தலைவர்கள் பரப்பினார்கள். தமிழ்நாட்டு மக்களிடையே அப்படிப்பட்ட பொய்யைச் சொன்னார்கள். ஆனால், சிறிலங்க படைகளின் தொடர்ச்சியான தாக்குதலே இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்று ஐ.நா.நிபுணர் குழு கூறியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, போர் முடிந்த பிறகு, போர்க் குற்றங்கள் குறித்து சிறிலங்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் சிறப்புக் கூட்டம் 2009ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி கூட்டப்பட்டபோது, அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே, “இந்தக் கூட்டம் அவசியமற்றது, உலகின் மிகப் பெரிய பயங்கரவாத இயக்கத்தை போரில் தோற்கடித்ததற்காக சிறிலங்க அரசை பாராட்டுவதற்கு பதில் அதனை தண்டிக்க முற்படும் செயல் இது” என்று பரபரப்போடு பேசினார். சீனா, பாகிஸ்தான், இரஷ்யா, விவரமறியாத தென் அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளின் துணையுடன், சிறிலங்க அரசிற்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்தார்.

அதன் பிறகு சிறிலங்க அரசு தன்னைத் தானே பாராட்டிக்கொள்ளும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதனை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறச் செய்தார் இந்தியாவின் பிரதிநிதி. சிறிலங்க அரசின் இனப் படுகொலைக்குத் துணை நின்றது மட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அதற்கு ஆதரவான தீர்மானத்தையும் நிறைவேற்றி காப்பாற்றியது இந்தியா.

ஆனால், மிகுந்த இராஜ தந்திரத்துடன் இந்தியா நிறைவேற்றித் தந்த அந்தத் தீர்மானத்தை (தீர்மானம் A/HRC/8-11/L.1Rev.2) தாங்கள் தந்துள்ள இந்த அறிக்கையின் அடிப்படையிலஐ.நா. மனித உரிமைப் பேரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பான் கி மூனிற்கு பரிந்துரைத்துள்ளது நிபுணர் குழு. இதைவிட வெட்கக்கேடு ஒரு ஜனநாயக நாடான இந்தியாவிற்கு இருக்க முடியுமா?

அதனால்தான் டெல்லி மெளனம் காக்கிறது. ஆனால் உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மீது தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியுள்ளன.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்தியா தனது நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் மனித உரிமைக் காப்பகத்தின் தெற்காசிய பிரிவு இயக்குனரான மீனாட்சி கங்கூலி கூறியுள்ளார்.

என்ன பதில் சொல்லப்போகிறது டெல்லி?

Friday, 22 April 2011

திருத்தங்கள் இன்றி விரைவில் அறிக்கை: ஐ.நா.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்ததின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதன் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
நிபுணர் குழுவுக்கு ஐ.நா. குழு என்ற அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்ற நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா வெளியிடக்கூடாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டுவருகிறார்.
இந்த நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை எவ்வித திருத்தங்களும் இன்றி கூடுதல் விரைவில் வெளியி்டவுள்ளதாக ஐ.நா. அறிவித்துவிட்டது.
இலங்கை அரசாங்கத்தின் பதிலையும் பெற்றுக்கொண்டே அறிக்கையை வெளியிடவேண்டும் என்பதே ஐ.நா.வின் எண்ணம் என தலைமைச் செயலர் பான் கீ மூனின் பேச்சாளரன பர்ஹான் ஹக் அறிவித்துள்ளார். 


நிபுணர்குழு அறிக்கையிலிருந்து கசிந்துள்ள தகவல்கள், போரின் இறுதிக்கட்டங்களின்போது, அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பொதுமக்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அவை தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை இலங்கை அரசாங்கத்தின் பதில் கிடைக்கும்வரை ஐ.நா. நீண்டகாலம் காத்திருக்காது என்பது தெரிகிறது.


இந்து கோயில் விவகாரம்: தாய்லாந்து-கம்போடியா படைகள் மோதல்

பாங்காக், ஏப்.22- 
எல்லையோரத்தில் அமைந்துள்ள இந்து கோயில் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த சர்ச்சையில், தாய்லாந்து - கம்போடியா படையினர் இடையே இன்று துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கித் தாக்குதல் நடைபெற்றது.இந்த மோதலில் மொத்தம் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கம்போடிய வீரர்கள்.பிரே விஹார் என்னும் இடத்தில் உள்ள 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்து கோயில் தங்களுக்குச் சொந்தம் என்று இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், டா கிராபே என்னுமிடத்தில் உள்ள மற்றொரு இந்து கோயில் தொடர்பாக இன்று மோதல் ஏற்பட்டதாக, கம்போடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சும் சொச்சீத் தெரிவித்தார். இன்றைய மோதலில் தங்கள் தரப்பில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, சுரின் மாகாணத்தில் சர்ச்சைக்குரிய கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து, சுமார் 5 ஆயிரம் பொதுமக்களை வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பான்: கடலில் அணுக்கதிர்வீச்சு 20 ஆயிரம் மடங்கு அதிகரிப்பு

டோக்கியோ, 
ஏப்.22:  ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் அணுக் கதிர் வீச்சு பசிபிக் கடலில் கலந்து வருகிறது. இது ஆபத்தான அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான இந்த அணுமின் நிலையத்திலிருந்து 5,000 டெராபிகியூரெல் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு ஆண்டு கடலில் கலக்க அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 ஆயிரம் மடங்கு அதிகமாகும். கதிர்வீச்சுக் கழிவின் அளவு 520 டன் அளவுக்கு இருக்கும் என தெரியவந்துள்ளது.  அணு மின் நிலையத்திலிருந்து இப்போதுதான் முதல் முறையாக வெளியாகும் கதிர்வீச்சு அளவு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 6-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்தில் இந்த அளவுக்கு கதிர்வீச்சு கடலில் பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ஆனால் கடலில் இப்போது பரவியதாகத் தெரிவிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிக அளவு கதிர்வீச்சு பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கடலில் அணுக் கதிர்வீச்சு பரவி வருகிறது.  மார்ச் 11-ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதைத் தொடர்ந்த சுனாமி பேரலையின் தாக்கத்தால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்ட்டது. இதனால் இந்த ஆலையைச் சுற்றியிருந்த மக்கள் பாதிப்புக்கு உள்ளாயினர். இதனால் ஆலையைச் சுற்றி 2 கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  இருப்பினும் இந்த ஆலையில் அணு உலையைக் குளிர்விக்கும் பணியில் 6 ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமையிலிருந்து அணு உலை 2-ன் ரியாக்டர் டர்பைனிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  இந்தக்கழிவுகளை பாதுகாப்பான இடத்தில் வெளியேற்றுவதற்குப் பதில் கடலில் கலக்க விடுவதால் கதிர்வீச்சு அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஏப்ரல் 1-ம் தேயிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு 4.3 டன் அளவுக்கு கதிர்வீச்சு கடலில் கலப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது

Thursday, 21 April 2011

ஜப்பானில் தாய்ப்பால், கடலிலுள்ள மீன்களுக்கு கதிர்வீச்சு பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் புகுசிமாவில் உள்ள அணு உலை பாதிக்கப்பட்டது. இந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவியது. இதனால் அந்த பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அணு கதிர்வீச்சு கடலிலும் பரவி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.
 
இப்போது கதிர் வீச்சு கடல் மீன்களிடமும் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மீன்களை சாப்பிட்டால் மனிதனுக்கும் கதிர்வீச்சு பாயும் அபாயம் உள்ளது. இதனால் புகுசிமா கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடலில் வாழும் மீன்கள் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. ஒவ்வொரு பருவ நிலைக்கும் தகுந்த மாதிரி மீன்கள் மற்ற கடல் பகுதிகளுக்கும் செல்லு
ம்.

புகுசிமா கடல் பகுதிகளில் வசிக்கும் மீன்கள் மற்ற பகுதி களுக்கு வரும்போது பிடிக்கப்பட்டால் அதனாலும் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். எனவே கடல் உணவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.


ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Monday, 18 April 2011

ஐ.நா. சபை எங்களைப் பாதுகாக்கத் தவறினால் ரஷ்யா, சீனாவின் பக்கம் சாய்ந்து விடுவோம்: மிரட்டுகின்றார் கோத்தாபய






ஐ.நா. சபை எங்களைப் பாதுகாக்கத் தவறினால் ரஷ்யா, சீனாவின் பக்கம் சாய்ந்து விடுவோம்: மிரட்டுகின்றார் கோத்தாபய




தனது உறுப்பு நாடான இலங்கையைப் பாதுகாக்க ஐ.நா. சபை தவறும் பட்சத்தில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளிடம் அடைக்கலம் கோர வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஒரு சில நாடுகளின் மறைமுக நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் தனது அங்கத்துவ நாடொன்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட முனைப்பு காட்டினால், சீனா, ர'ஷ்யா போன்ற நாடுகளிடம் பாதுகாப்பு கோர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை மறைமுக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு சில நாடுகளினால் தமக்குத் தேவையான முறையில் பலாத்காரமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. தனது அங்கத்துவ நாடொன்று என்ற வகையில் இலங்கைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஐக்கிய நாடுகளின் கடமையாகும்.
தவிரவும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு புரிந்துகொள்ளத் தவறியுள்ளது. விமானப்படை, கடற்படை மற்றும் தரைப் படைகளைக் கொண்டமைந்ததாக வலுவான படைக்கட்டமைப்பை  தமிழீழ விடுதலைப் புலிகள; கொண்டிருந்தனர்.
ஆனால் அவையெல்லாம் கவனத்திற்கொள்ளப்படாமல் சில மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தவறான தகவல் மூலங்களைக் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த வலயத்திற்குள் நேரடி அனுபவத்தைக் கொண்டிருந்த உலக உணவுத் திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற முன்னணி தொண்டு நிறுவனங்களின் கருத்துக்களுக்கு நிபுணர் குழு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளது.
இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள், பொதுமக்கள்,  அரசாங்க சொத்துக்களை இல்லாதொழிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏராளம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இராணுவத்தினருடனான இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதுடன்,  பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என களத் தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுவோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் சிறிதளவேனும் உண்மையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் புயலுக்கு 22 பேர் பலி: மீட்பு பணி தீவிரம்

சிகாகோ: அமெரிக்காவில் வீசும் சூறாவளியில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.


அமெரி்க்காவின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி வீசி வருகிறது. இந்தப் புயலால் மரங்கள் வேரோடு விழுந்தன. மேலும், வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன, மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் புயல் வீசும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன.

அர்கன்சாஸ் பகுதியில் 7பேர் உயிர் இழந்தனர். இதில் மூன்று பேர் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள். வடக்கு கரோலினாவில் 5 பேரும், அலபாமாவில் ஒருவரும், வாஷிங்டன் கவுன்டியில் 6 பேரும், ஒகலாமாவில் 2 பேரும், கிரீன் கவுன்டியில் ஒருவரும் பலியாகினர்.

புயல் மரங்களை எல்லாம் வேரோடு பெயர்த்தெடுத்து காற்றில் பந்தாடும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக உள்ளது. இந்த கடும் புயலால் போக்குவரத்து முடங்கியுள்ளது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, 16 April 2011

'குடுமி' இப்போது பான் கீ மூனின் கையில்



இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் - போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலையே தற்போதுள்ளது. நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியாக முன்னரே, அது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என்று, பலர் கருதுகின்றனர்.




மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் இந்த அறிக்கை இலங்கைக்கு கடுமையானதொன்றாக அமையலாம் என்றே கருதுகின்றனர். அத்துடன் அரசாங்கத் தரப்பும் இது சாதகமற்றதாக அமையும் என்றே கருதுகிறது. சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் வெளிவரப் போகும் இந்த அறிக்கை இலங்கை தொடர்பான ஒரு பெரும் புயலைக் கிளப்பி விட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே, அது சர்வதேச விசாரணைக்கு பரிந்துரை செய்யும் வகையில் அமைந்திருக்கும் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய ஆதாரங்களை அதிகளவில் ஐ.நா நிபுணர்கள் குழு சேகரித்துள்ளதாக கருதப்படுவதால் தான் இந்தக் கருத்து வலுப்பெற்றுள்ளது. அதேவேளை, இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அது அரசுக்கு சாதகமற்ற முறையில் இருந்தால்- இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி உள்ளது.

கடந்த வருடம் இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போது அதை நிராகரித்த அரசாங்கம், நிபுணர்கள் குழு இலங்கைக்கு வந்து விசாரணை நடத்தவும் முடியாது, அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைக்கவும் மாட்டோம் என்றும் கூறியது. பின்னர் , ஏதோ ஒரு மாற்றமாக. வேண்டுமானால் இங்கு வந்து நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்து விட்டுப் போகலாம் என்று கூறியது. அரசாங்கம் இறுக்கமான பிடிவாதங்களைக் கடைப்பிடித்தாலும் கூட, உள்ளுக்குள் ஒருவித உதறல் அதற்கு இருந்து கொண்டு தான் இருந்தது. அதனால் தான் நியுயோர்க்கிற்கு அரசின் பிரதிநிதிகளை அனுப்பி நிபுணர்கள் குழுவை சந்திக்க வைத்தது. இந்தச் சந்திப்பு பற்றி தகவல்கள் ஊடகங்களில் வெளியானபோது அதுபற்றிப் பேசாமல் இருந்தது அரசாங்கம். ஆனால் கடந்தவாரம் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முதல் முறையாக இந்தச் சந்திப்பு நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.இதுவரை மறைத்து வைத்திருந்த உண்மையை அவர் இப்போது தான் போட்டு உடைத்துள்ளார்.

இதிலிருந்து அரசாங்கம் முன்னர் கூறிய இறுக்கமான நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.தமது அமைச்சின் அதிகாரிகள் ஐ.நா நிபுணர்கள் குழுவை சந்தித்துப் பேசியதாக கூறியுள்ள அமைச்சர் பீரிஸ், அவர்கள் எதற்காக சந்தித்தார்கள், என்ன பேசினார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஆனால் இந்தச் சந்திப்பானது,இலங்கை அரசாங்கத்தின் பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை. ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை அரசுக்குப் பாதகமான முறையில் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்பதை அணுமாணிக்க கூடியதாக உள்ளது. அதேவேளை, ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரை எல்லோருமே இந்த நிபுணர்கள் குழு அரச மற்றும் இராணுவ அதிகாரிகளைக் குற்றம் சுமத்தலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


இதனால் இந்த அறிக்கையை அரசாங்கம் மிகுந்த அச்சத்தோடு தான் எதிர்பார்த்துள்ளது. ஆனால் அதைப் பெரும்பாலும் வெளிக்காட்டிக் கொள்வதையும் தவிர்க்கிறது.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியான பின்னர் அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையலாம். ஏற்கனவே நிபுணர்கள் குழு அமைக்கப்பட்ட போதும் உண்ணாவிரதம், பேரணி என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.  அதைவிடத் தீவிரமான போராட்டங்கள் நடத்தி அரசுக்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஆனால், இத்தகைய போராட்டங்களின் மூலம் ஐ.நாவின் நடவடிக்கைகளைத் தடுத்து விட முடியுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

இலங்கை அரசாங்கம் எத்தனை எதிர்ப்பை வெளிப்படுத்திய போதும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவை அமைத்து விசாரணை நடத்தும் முடிவைக் கைவிட்டுப் பின்வாங்கவில்லை. அவ்வப்போது அவர் மென்போக்குடன் நடந்து கொண்டாலும் கூட, அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  அவரது முடிவை மாற்றுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர் அது இலங்கைக்கு எதிரான பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவிக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதேவேளை, இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதும் அதை பான் கீ மூன் வெளிப்படுத்துவாரா, இல்லையா என்ற கேள்வி இப்போது முதன்மை பெற்றுள்ளது.அவர் அதை வெளிப்படுத்தலாம், அல்லது அறிக்கை ஒன்றின் மூலம் அதன் முக்கிய பரிந்துரைகளை வெளிப்படுத்தலாம் என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு அந்தப் பரிந்துரைகளை நிபுணர்கள் குழுவைக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தலாம் என்கிறது. அதேவேளை, இந்த அறிக்கை மீதான நடவடிக்கை ஆரம்பிக்கும் வரை அவர் வெளிப்படுத்த மாட்டார் என்கிறது வேறொரு தரப்பு. இப்படியாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் இறுதி முடிவு என்பது பான் கீ மூனின் கையில் தான் உள்ளது.

ஆனால், அவர் இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை. ஒன்றில் ஐ.நா. பாதுகாப்புச்சபை ஊடாக எதையாவது செய்ய வேண்டும் அல்லது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஊடாக செய்ய வேண்டும்.இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஜுன் மாத அமர்வில் பான் கீ மூன் சமர்ப்பிக்கலாம் என்றும் அதன் பின்னர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.இதைச் செய்யாமல் பான் கீ மூன் வேறு எதையும் செய்ய முடியாது. அப்படிச் செய்யாது போனால்; இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே மேல் நடவடிக்கை என்பது நிச்சயம் இடம்பெறவே செய்யும்.

மனிதஉரிமைகள் பேரவை மற்றும், பாதுகாப்புச்சபை ஆகியவற்றின் கவனத்துக்கு இந்த அறிக்கை போனால், அடுத்து அதன் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதெல்லாம் இலங்கை அரசுக்கு அதிகளவில் நெருக்கடியைக் கொடுக்கும். சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுப்பதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பவும் இல்லை- விரும்பப் போவதும் இல்லை. இந்தநிலையில் அரசுக்கான சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அண்மையில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையும், ஆதாரமாக முன்வைத்த வீடியோ இணைப்பையும் அரசாங்கமும், படைத்தரப்பும் நிராகரித்திருந்தாலும், சர்வதேச விசாரணைகளின் போது இவற்றையெல்லாம் பொய் என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட முடியாது. அதை நிரூபிக்க வேண்டும். இலங்கை அரசிடம் இது பொய் என்று நிரூபிப்பதற்கு உள்ள தொழில்நுட்பத்தை விட, மிகவும் உயர்வான தொழில்நுட்பங்கள் சர்வதேச விசாரணையாளர்களிடம் இருக்கலாம். இதுபோன்ற பல ஆதாரங்களை நிபுணர்கள் குழு பெற்றிருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே தான் அரசாங்கம் தமக்குச் சாதகமற்ற அறிக்கையை எதிர்பார்க்கிறது போலுள்ளது.

அடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட இலங்கை தொடர்பான மனிதஉரிமை அறிக்கை அரசாங்கத்தை சாடும் வகையில் அமைந்துள்ளது 40 பக்கங்களில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, முற்றிலும் அரசாங்கத்தைக் குற்றம்சாட்டும் வகையிலும், அழுத்தம் கொடுக்கும் வகையிலும் அமைந்த ஒன்று.

முன்னர் இப்படியான அறிக்கைகளில் விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்புகளும் இடம்பெறும். இப்போது புலிகள் இல்லாதுள்ள நிலையில், அரசதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம். இவை மட்டுமன்றி கடந்தவாரம் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கின் பயணத்தையும் அரசாங்கம் பிற்போட்டுள்ளது. அவர் இலங்கை வருவதற்குத் தெரிவு செய்த காலம் மிகவும் முக்கியமானது.அவரது கடந்தவாரப் பயணம் பிற்போடப்பட்டாலும் இந்த வாரமோ அடுத்த வாரமோ அவர் கடுமையானதொரு செய்தியுடன் வரப் போவது உறுதி. இவையெல்லாம் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இறுகி வருவதற்கான அறிகுறிகளாகவே தென்படுகின்றன. வரும் நாட்களில் இந்த அழுத்தங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த அழுத்தங்களில் இருந்து அரசாங்கம் எப்படித் தப்பித்துக் கொள்ளப் போகிறது என்பது தான் இப்போது அதிகமாகியுள்ள எதிர்பார்ப்பு.

Friday, 15 April 2011

சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்

"சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது.

சூரியத் தூண்டல் சூரிய ஆற்றல்-விமானம்.
"தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இவ்விமானம் காலை 0900 (0700 GMT) மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்னில் இருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள பேயேர்ன் விமானநிலையத்தில் தரையிறங்கியது. சராசரியாக 25 மைல்/மணி வேகத்தில் 8,700 மீட்டர் உயரம் இவ்விமானம் இச்சோதனைப் பறப்பில் பறந்துள்ளது. விமானி மூலம் இயக்கப்பட்ட சூரிய ஆற்றலுடன் கூடிய விமானம் ஒன்று இவ்வளவு உயரம் பறந்ததும் இதுவே முதற் தடவையாகும்.

Cquote1.svg தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது. Cquote2.svg
—பேர்ட்ரான்ட் பிக்கார்ட், சூரியத் தூண்டல்
சுவிஸ் விமானப் படையின் முன்னாள் போர் விமானியான அந்திரே போர்சுபேர்க் என்பவரே இவ்விமானத்தை ஓட்டிச் சென்றார். "40 ஆண்டுகளாக நான் விமானியாகப் பணியாற்றுகிறேன். இந்த சோதனைப் பறப்பில் கலந்து கொண்டது எனது பணிக்காலத்தில் நான் பெற்ற அதிஉயர் சாதனையாக நான் கருதுகிறேன். மின்கலங்களில் ஆற்றல் அதிகரிப்பதை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். சுர்ரியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். எரிபொருள் எதுவுமின்றி, சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் 26 மணி நேரம் நான் வானில் பறந்திருக்கிறேன்," என்றார் அந்திரே போர்சுபேர்க்.

இவ்விமானம் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல வல்லது. இதன் இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க 12,000 சூரியக் கலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கரிம இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை ஒரு மோட்டார் வண்டியின் எடையே ஆயினும், இதனுடைய இறக்கைகள் அறுபது மீட்டர்கள் நீளமுடையவை. இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ.

எனினும், இப்பயணத்தின் போது சில பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது. "17 மணி நேரப் பயணத்தின் பின்னர் சில பிரச்சினைகளை அந்திரே எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு முதுகுவலி ஏற்பட்டதாகவும், விமானி அறையில் மிகவும் குளிராக (-20 பாகை செல்சியசு) இருந்ததாகவும் குறைப்பட்டுக் கொண்டார். குடிநீர் இதனால் உறைந்து விட்டதாகவும், அவரது ஐ-பொட் இயங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது."

"தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது," என சூரியத் தூண்டல் (solar impulse) என்ற இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு வளிமக்கூடு மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழம்-இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் 70 ஆயிரம்!

வாஷிங்டன்:
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்த இறுதிப் போரில் 70 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க கருத்தரங்கில் தகவல் வெளியிட்டுள்ளனர்.



அமெரிக்காவின் மெக்ஸ்வல் கல்லூரியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் ஸ்ரகியூஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில், அமைதிக்கான தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரதிநிதியான கலாநிதி அருள்நாதன் பேசுகையில், "இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது 70 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கு மேலாக இறுதிக்கட்ட போரின் போது 13 ஆயிரத்து நூற்றி முப்பதுக்கும் மேலானோர் காணாமற் போயுள்ளதாகவும் ஆதாரபூர்வமான புள்ளிவிபரங்கள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளாஇந்த கருத்தரங்கில் இலங்கையின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி பாலித கொஹன, மற்றும் அமெரிக்க, இலங்கை அரசுகளின் பிரதிநிதிகளும் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றதாக அந்த செய்தியில் தெரியவந்துள்ளது.

சூரியன் பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம்

கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.




சூரிய நடுக்கத்தினால் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு

வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.


“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.


Cquote1.svg நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும். Cquote2.svg

—முனைவர் ரிச்சார்ட் ஃபிஷர் , நாசா

இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.


அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

Wednesday, 13 April 2011

ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை

ஐ.நா செயலாளர் நாயக்கத்திடம் நிபுணர் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் பிரதி இதுவரை இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பல சர்வதேச ஊடகங்களிலும் இலங்கைக்கு நிபுணர் குழுவின் அறிக்கை பிரதி கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாம் அவரிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த அறிக்கையின் பிரதி இலங்கைக்கு கையளிக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போர்க்குற்றம் பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை: இலங்கை எம்.பி.

கொழும்பு, ஏப்.13-
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பேச அமெரிக்காவுக்கு தகுதி இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நீண்ட     காலமாக அமெரிக்காவின் மீது போர்க் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஈரான், இராக், ஆப்கன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா மனித உரி்மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இலங்கை மீது குற்றம் சுமத்த அமெரி்க்காவுக்கு தகுதி கிடையாது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்." என்று தயாஸ்ரீ ஜயசேகர கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Tuesday, 12 April 2011

ஜப்பானின் கதிர் வீச்சு அபாய அளவை எட்டி உள்ளது

டோக்கியோ, ஏப்.12
ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டது. இதில் சுமார் 28 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் அணு உலைகள் வெடித்தன. அதில் இருந்து அணு கதிர்வீச்சு வெளியேறியது. இதை தொடர்ந்து அப்பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே, வெடித்து சிதறிய அணு உலைகளை குளிர்வித்து கதிர்வீச்சு பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் கதிர் வீச்சு பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.வெடித்த அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கதிர் வீச்சு அபாய அளவை எட்டி உள்ளது. அணு உலைகளில் பாதிப்பு ஏற்படும்போது கதிர் வீச்சின் அளவு 7 என்ற அளவு வரை இருக்கலாம் என உலக நாடுகள் வரையறுத்துள்ளன. தற்போது, வெடித்து சிதறி பிரச்சினைக்குள்ளான ஜப்பானின், புகுஷிமா அணு உலையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவு நேற்று 7 ஆக உயர்ந்தது.

இது அபாயகரமான அளவாக கருதப்படுகிறது. இதனால் புகுஷிமா பகுதியில் வாழும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவை பூட்டியபடி உள்ளேயே தங்கி உள்ளனர்.

கதிர்வீச்சு அபாய கட டத்தை எட்டியுள்ளதால் அங்கிருந்து மக்கள் வெளியேறும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் ஷெர்னோவில் அணு உலையில் விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சில் 29 பேர் பலியானார்கள். அந்த அளவுக்கு புகுஷிமாவில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படவில்லை.

இருந்தாலும் தற்போது அதன் அளவுக்கு புகுஷிமா அணு உலையால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Wednesday, 6 April 2011

ஈரான் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்

தெஹ்ரான்: பிராந்திய நாடுகளில் ஈரான் தலையிடுவதாக குற்றம் சுமத்துமாறு வளைகுடா அரபு நாடுகளுக்கு அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் அழுத்தம் கொடுத்திருந்ததாக தெரிவித்திருக்கும் ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் பஹ்ரெயினிலிருந்து சவூதி அரேபியப் படைகள் வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

குவைத் மற்றும் பஹ்ரெய்ன் விவகாரங்களில் ஈரான் அழையா விருந்தாளியாகத் தலையிடுவதாக வளைகுடா மற்றும் அரபு நாடுகள் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தன. ஆனால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வளைகுடா அரபு நாடுகளினால் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அஹமதி நிஜாத் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் அது சட்டரீதியான பெறுமதியை கொண்டிருக்கவில்லையெனவும் கூறியுள்ளார்.

ஷியா பெரும்பான்மையின மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சவூதி அரேபியப் படைகள் பஹ்ரெயினுக்குள் கொண்டுவரப்பட்டனர்.அவ்வாறு அவர்கள் கொண்டுவரப்பட்டமை மிகவும் கொடூரமான நிகழ்வு.அவர்களை வெளியேற்றுங்கள்.மக்கள் அதனையே வலியுறுத்துகின்றனர்.அவர்களின் கோரிக்கைகளை செவிமடுங்கள் எனவும் அஹமதி நிஜாத் வலியுறுத்தியுள்ளார்.

வளைகுடா அரபு நாடுகளின் இராச்சியங்கள் அமெரிக்காவின் பிடிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது.அந்நாடுகள் ஈரானுடனான உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் அஹமதி நிஜாத் கூறியுள்ளார். நட்புறவைப் பேணுவதற்கான எமது கரங்களை நாம் நீட்டியுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஷியோனிஷ்ட் ஆட்சி அற்ற புதிய மத்திய கிழக்கு விரைவில் உருவாகும் எனவும் அதில் அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளினதும் பிரதிநிதித்துவம் இருக்காதென்றும் அஹமதி நிஜாத் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இவ்விடயத்தில் இஸ்ரேலைச் சுட்டிக்காட்டியுள்ள அஹமதி நிஜாத் மேற்குலகின் தலையீடானது மத்திய கிழக்கு நாடுகளை ஷியோனிஷ்ட் பிராந்தியமாக்குவதை நோக்காகக் கொண்டதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடுகளின் உள்ளக விடயங்களில் ஈரான் தலையிடப் போவதில்லையெனவும் அஹமதி நிஜாத் குறிப்பிட்டுள்ளார். ரைம்ஸ் ஒப் இந்தியா

கொங்கோவில் ஐ.நா.வின் விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலி

கின்சாசா: ஐ.நா.வுக்கு சொந்தமான விமானமொன்று கொங்கோ ஜனநாயகக் குடியரசில் விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகியுள்ளனர். ஐ.நா.வுக்கு சொந்தமான சீ.ஆர்.ஜே100 என்ற ஜெற் ரகத்தைச் சேர்ந்த பயணிகள் விமானமே கொங்கோ தலைநகர் கின்சாசாவிலுள்ள விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் இவ் விமானம் கோமா பகுதியிலிருந்து வடகிழக்குப் பகுதியிலுள்ள கிசாங்கனி ஊடாக கின்சாசாவுக்கு வந்தபோது அங்கு கடும் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் தரையிறங்க முயற்சித்த போதே ஏற்பட்ட தீயினால் அது இரண்டாகப் பிளவுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவ் விமானத்தில் 33 பேர் பயணித்துள்ளதுடன் அவர்களில் உயிர்பிழைத்தவர் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை.அத்துடன் இதில் பயணித்த ஐ.நா.பணியாளர்கள் 20 பேரின் பெயர் விபரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பி.பி.சி.

பிரிட்டிஷ் பயணிகள் விமானமானது அவசரமாக ஏதென்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

லண்டன்: எகிப்தை நோக்கிப் பயணித்த பிரிட்டிஷ் பயணிகள் விமானமானது குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அவசரமாக ஏதென்ஸ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கு சொந்தமான தொம்ஸன் எயர்வேய்ஸ் டோயிங் 757200 என்ற பயணிகள் விமானமானது பிரிஸ்ரல் நகரிலிருந்து எகிப்தின் ஷாம்எல்ஷெய்க் நகரை நோக்கி 213 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் விடப்பட்டதைத் தொடர்ந்து ஏதென்ஸ் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டுத்தாக்குதல் தொடர்பாக குறித்த விமானத்தில் பணியாற்றும் பணியாளர் மற்றும் எகிப்திய செய்திச்சேவை ஆகியன வழங்கிய செய்தியைத் தொடர்ந்தே அது தரையிறக்கப்பட்டதாக ஏதென்ஸிலுள்ள பி.பி.சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார். தரையிறக்கப்பட்ட விமானத்தில் குண்டுகளை தேடும் பணியை நிபுணர்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.