Total Pageviews

Blog Archive

Wednesday, 6 July 2011

பயங்கரவாத தாக்குதல் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் : அமெரிக்க விமான நிலையங்களில் அல்கொய்தா பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டுகள் மூலம் பயணிகள் விமானங்களை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக பயங்கரவாதிகள் தங்கள் வயிற்றுப்பகுதி, மார்பு மற்றும் தங்கள் உடலின் பின்புறப்பகுதியில் வெடிகுண்டுகளை கொண்டு வரலாம் எனவும், இதன் மூலம் விமான நிலையங்களில் சோதனையிலிருந்துதப்ப திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செங்கடலில் படகு கவிழ்ந்தது: 197 பேர் பலி?

சவுதி அரேபியாவிற்கு சென்ற படகு ஒன்று செங்கடலில் கவிழ்ந்து மூழ்கிய நிலையில், அதிலிருந்த 197 பேர் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை.

சூடான் நாட்டிலிருந்து 200 பேர்களுடன் படகு ஒன்று சவுதி அரேபியாவிற்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது வழியில் திடீரென அப்படகு செங்கடலில் மூழ்கியது.இது குறித்த தகவலறிந்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

இதுவரை 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.மற்ற 197 பேர்களது கதி என்னவானது என்பது குறித்து தெரியவரவில்லை என்பதால், அவர்கள் நீரில் மூழ்கி பலியாகி இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இருப்பினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வேயில் புதிய இ-டிக்கெட் சேவை: இதில் ஏஜன்டுகளுக்கு இடமில்லை

புதுடில்லி : தனிநபர்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில், புதிய இ-டிக்கெட் சேவையை இந்தியன் ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சேவைக்கட்டணமும் குறைகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் டிராவல் ஏஜன்டுகளும், வணிக நிறுவனங்களும் அதிகளவில் ரயில்வே டிக்கெட் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தனர். இதனால், தனிநபர்களுக்கு டிக்கெட் எளிதில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், டிராவல் ஏஜன்டுகள் பதிவு செய்யும் இ-டிக்கெட்டுகளை அதிக விலை வைத்து விற்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதை தவிர்க்கும் பொருட்டு, இந்தியன் ரயில்வே, புதிய இ-டிக்கெட் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, தனிநபர்கள் முதன்முறையாக, தாங்களாகவே பதிவு செய்து கொண்டு, இந்த சேவையை பெறலாம். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

தொடக்கத்தில், ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்திற்கு எட்டு தடவைகள் மட்டும் பரிமாற்றங்கள் செய்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 5 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு 10 ரூபாயும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., யில் தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு 10 ரூபாயும், இதர வகுப்புகளுக்கு, 20 ரூபாயும், சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பகல் 12.30 மணியிலிருந்து, இரவு 11.30 வரையில் இந்த சேவையை பயன்படுத்தலாம். இந்த சேவை தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

வடக்கு,கிழக்கு பகுதிக்கு செல்ல இலங்கை அனுமதி

கொழும்பு: இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை, இலங்கை அரசு விலக்கிக் கொண்டது.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் போர் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, வெளிநாட்டினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2009ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுடன் இலங்கை ராணுவம் நடத்திய போர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு செல்லவிருந்த தடையை இலங்கை அரசு நீக்கிக் கொண்டது. இதுவரை இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், ராணுவ அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது.இதுகுறித்து அந்நாட்டின் ராணுவத்துறை அமைச்சக உயரதிகாரி லக்ஷ்மண் ஹூலுகல்லே கூறுகையில், "பாஸ்போர்ட் வைத்திருக்கும் எந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லலாம். தற்போது, நாட்டில் முழு அமைதி திரும்பி விட்டதால், தடை விதிப்பதற்கான அவசியம் இல்லை' என்று தெரிவித்தார்