கொழும்பு: இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை, இலங்கை அரசு விலக்கிக் கொண்டது.இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் போர் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, வெளிநாட்டினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2009ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுடன் இலங்கை ராணுவம் நடத்திய போர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு செல்லவிருந்த தடையை இலங்கை அரசு நீக்கிக் கொண்டது. இதுவரை இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், ராணுவ அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது.இதுகுறித்து அந்நாட்டின் ராணுவத்துறை அமைச்சக உயரதிகாரி லக்ஷ்மண் ஹூலுகல்லே கூறுகையில், "பாஸ்போர்ட் வைத்திருக்கும் எந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு செல்லலாம். தற்போது, நாட்டில் முழு அமைதி திரும்பி விட்டதால், தடை விதிப்பதற்கான அவசியம் இல்லை' என்று தெரிவித்தார்