Total Pageviews

Blog Archive

Friday, 16 September 2011

தெற்கு சீனக் கடலில் எண்ணெய் எடுக்கக் கூடாது: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங், செப். 15: தெற்கு சீனக் கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு சீனக் கடல்பகுதியும் அதில் உள்ள தீவுக் கூட்டங்களும் சீனாவுக்கு மட்டுமே சொந்தமானவை. இதில் சர்ச்சைக்கே இடமில்லை எனவும் அந்த நாடு கூறியுள்ளது.
வியத்நாமுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தெற்கு சீனக் கடலில் இரு இடங்களில் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூவிடம் செய்தியாளர்கள் வியாழக்கிழமை பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றுக்கு அவர் அளித்த பதில்:
தெற்கு சீனக் கடலில் இந்திய நிறுவனங்கள் எண்ணெய் எடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் அந்தக் கடலும், அதில் உள்ள தீவுகளும் சீனாவுக்கே சொந்தமானவை. அங்கு எண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அனைத்து நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்றார்.
இந்தியாவை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், எண்ணெய் எடுப்பது தொடர்பான அவரது எச்சரிக்கை மறைமுகமாக இந்தியாவுக்கு விடுக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
இந்தியா பதிலடி: தெற்கு சீனக் கடலில் எண்ணெய் எடுப்பது தொடர்பாக சீனா தெரிவித்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. சர்வதேசச் சட்டங்களுக்கு உள்பட்டு வியத்நாமுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக இந்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வியத்நாம் தலைநகர் ஹனோயில் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் இந்திய, வியத்நாம் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான கூட்டத்தில் இந்தப் பிரச்னை முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.