Total Pageviews

Blog Archive

Friday, 16 September 2011

அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு

வாஷிங்டன், செப்.14: அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.

"அமெரிக்காவில் வருவாய், வறுமை, மற்றும் சுகாதாரக் காப்பீடு 2010' என்ற தலைப்பில் அமெரிக்க சென்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2010-ம் ஆண்டு அமெரிக்காவில் 4.62 கோடி பேர் (15.1%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இதுவே, அதற்கு முந்தைய 2009-ம் ஆண்டில் 4.36 கோடி பேர் (14.3%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2010-ம் ஆண்டில் சுகாதாரக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக (16.3%) அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களில் 1.6 கோடி (22%) பேரும், 18-லிருந்து 65 வயதுக்குள் உள்ளவர்களில் 2.6 கோடி (13.7%) பேரும் வறுமையில் வாடுகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அமெரிக்க அரசின் வறுமை கணக்கிடும் முறை: 4 பேர் உள்ள குடும்பத்தில் வருவாய் அளவு ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக (22,314 டாலர்) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமை கோட்டில் வரும். இதுவே தனிநபரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் வறுமையால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.