Total Pageviews

Blog Archive

Saturday, 7 January 2012

இந்திய ராணுவ அதிகாரிக்கு சீனா விசா மறுப்பு

புதுதில்லி, ஜன.6: இந்திய-சீன பாதுகாப்பு பரிவர்த்தனை திட்டத்தின்படி சீனாவுக்கு செல்லவிருந்த இந்திய ராணுவ அதிகாரிக்கு விசா அளிக்க அந்நாடு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய ராணுவ அதிகாரிகள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்திய ராணுவ அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழு, பாதுகாப்பு பரிவர்த்தனை தொடர்பாக ஜனவரி 10-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. குழுவில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பாங்கிங் என்ற ராணுவ அதிகாரியும் இடம்பெற்றிருந்தார். அவருக்கு சீனா வருவதற்கான விசா தருவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டது.
 அருணாசலப்பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நீண்ட நாள்களாக சீனா உரிமை கொண்டாடி வருவதே இதற்குக் காரணமாகும். சீனாவின் முடிவையடுத்து, இந்திய ராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010-ம் வருடத்திலும் இதே போன்று ஜம்மு-காஷ்மீரில் வடக்கு மண்டலத் தளபதியாக பணிபுரிந்த லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வாலுக்கு விசா தர சீனா அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.