
ஜப்பான் பூகம்பத்தால் செயலிழந்த அணு உலைகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, அது அமைந்துள்ள பகுதியை ஒட்டியுள்ள கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,250 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இந்த அளவு, அணு உலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் பதிவாகியுள்ளது. இதனால் கடற்வாழ் உயரினங்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் பாதிப்பிற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதென ஜப்பான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாய்ச்சா அணு உலைகளைச் சுற்றியுள்ள நீர் நிலைகளிலும் அணுக் கதிர் வீச்சு அதிகரித்துள்ளது என்றும், அதனால் பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீருக்கு பதிலாக நிலத்தடி நீரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடல் நீரை விட அணு உலைகளை வேகமாக குளிர்விக்கும் என்று கூறப்படுகிறது.
அணு உலைகளை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த வாரம் இருந்த அணுக் கதிர் வீச்சு அளவைக் காட்டிலும் இந்த வாரம் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள ஜப்பான் அரசு அதிகாரிகள், இதனால் கடல் வாழ் உயரினங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளனர்.
ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமையின் பேச்சாளர் ஹிடேஹிக்கோ நிஷியாமா, கடல் நீரில் கலக்கும் கதிர் வீச்சு அலைகளி்ன் மூலம் பரவும் என்றும், அவைகளை கடலில் உள்ள பாசிகளும், உயிரினங்களும் செரிமானித்துக்கொள்ளும் என்றும், அது ஐயோடின் கதிர்வீச்சு ஆகையால், 8 நாட்களுக்கு மேல் தாக்கம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்தை மிக வெளிப்படையாகவே பேசிவரும் ஜப்பான் பிரதமர் நவோட்டோ கேன், “இப்போதுள்ள சூழ்நிலை அனுமானிக்க முடியாத நிலை இருக்கிறது. அது மோசமாகிவிடாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அணு உலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு, பகலாக பணியாற்றிவரும் ஊழியர்களை பிரதமர் கேன் மிகவும் பாராட்டியுள்ளார்.
“டாய்ச்சா அணு உலைகள் 1,3 ஆகியவற்றின் மின்சாரக் கூடங்களில் அணுக் கதிர் வீச்சின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இந்த அளவிற்கு அணுக் கதிர் வீச்சு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து வருவகிறோம்” என்று ஜப்பான் அரசு அமைச்சரவைச் செயலர் யூகியோ ஈடேனோ கூறியுள்ளார்.
அணு உலைகளில் ஒன்று முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள ஜப்பான் அணு உலை பாதுகாப்பு முகமை, அதன் எரிபொருள் மையத்தில் விரிசல் ஏற்பட்டிருக்குமா என்பதை உறுதி செய்யவில்லை.
ஜப்பான் உணவு இறக்குமதிக்கு பல நாடுகள் தடை
ஜப்பானில் இருந்து காய்கறிகள், கடல் உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்த நாடுகளான சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளன.
இவைகளைத் தொடர்ந்து ஆஸ்ட்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இரஷ்யா ஆகிய நாடுகளும் ஜப்பானில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், கதிர் வீச்சு உள்ள ஜப்பானின் பல மாகாணங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசே எச்சரிக்கை விடுத்துள்ளது.