Total Pageviews

Blog Archive

Monday, 20 June 2011

எல்லை தாண்டும் எகிப்து புரட்சி!

ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக எகிப்து நாட்டு மக்கள் நடத்திய கிளர்ச்சிக்கு கைமேல் கிடைத்த பலனை பார்த்து ஈரான், பஹ்ரைன் மற்றும் ஏமன் ஆகிய அண்டை நாட்டு மக்களின் மனதிலும் புரட்சி விதை தூவப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலால் அந்த நாட்டு தலைவர்கள் அரண்டுபோய் கிடப்பதாக மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தகவல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன.

30 ஆண்டு காலம், எகிப்து அதிபர் பதவியில் அட்டையாய் ஒட்டிக்கொண்டு முபாரக் நடத்திய அராஜக, ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை பார்த்து வெறுத்து போய்தான், இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் கொதித்து எழுந்தனர் எகிப்து மக்கள்.

முபராக் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற முழக்கத்துடன், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தொடர்ந்து 18 நாட்களாக அவர்கள் நடத்திய போராட்டத்தின் தீவிரத்தை பார்த்துதான், இனியும் தமது பாச்சா பலிக்காது என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கடந்த வார இறுதியில்,பதவியிலிருந்து விலகி தமது குடும்பத்தினருடன் ஓட்டம் பிடித்தார் முபாரக்.

அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டாலும்,மக்களின் போராட்டம் தந்த அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் எகிப்தின் ஷாம் எல்-ஷேக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு சில ஊடகங்கள் முபாரக்கிற்கு புற்றுநோய் என்றும்,வேறு சில ஊடகங்கள் பக்கவாதம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் முபாரக் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது மட்டும் உண்மை.