Total Pageviews

Blog Archive

Monday, 20 June 2011

அருணாச்சலம் தகராறுக்குட்பட்ட பகுதியே: சீனா

இந்திய - சீன எல்லைப் பகுதியிலுள்ள அருணாச்சல பிரதேச மாநிலம், இரு நாடுகளும் உரிமை கோரும் தகராறுக்குட்பட்ட பகுதியே என்று சீனா கூறியுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள், சீனத்தின் ஃபிஜியான் மாகாணத்தில் நடைபெறவுள்ள கிராண்ட் பிரீ எடைத் தூக்கும் போட்டியில் கலந்துகொள்ள விசா கேட்டபோது, அவர்களுடைய இந்திய கடவுச் சீட்டில் விசா முத்திரை பதிக்காமல், தனிக் காகிதத்தில் விசா முத்திரையிட்டு, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி அளித்தது சீனா.

இதற்கு வன்மையான கண்டனத்தை இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில் இப்பிரச்சனை குறித்து சீனத் தலைநகரிலுள்ள பிடிஐ செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ள சீன அயலுறவு அமைச்சக பேச்சாளர், “இந்திய - சீன எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் நிலை தொடர்ந்து தெளிவாகவே உள்ளது. கிழக்குப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்குட்பட்ட பகுதிதான் என்பது எல்லை பிரச்சனை பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளோம். அதனை இந்தியா நன்கு அறியும். எங்களது அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இதுவரை 14 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் கிழக்குப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தை தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் தெற்குப்பகுதி என்றே சீனா கூறி வருகிறது.

ஆனால், தங்களது நாடான திபெத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு அருணாச்சல பிரதேசத்தின் மீது சொந்தம் கொண்டாட எந்தத் தகுதியும் இல்லை என்று தலாய் லாமாவும், திபெத் விடுதலைக்காக போராடிவரும் இதர திபெத்திய அமைப்புகளும் கூறி வருகின்றன.