தமிழக முதல்வர்,
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின்
நிலையத்தை நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார். தமிழக அமைச்சரவையும்
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடி அணுமின் நிலையத்துக்கு எதிராகத்
தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமரின் தூதராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி
கூடங்குளத்துக்குச் சென்று அங்கு போராடும் மக்களைச் சந்தித்துப் பேசினார்.
ஐ.நா கூட்டம் முடிந்து பிரதமர் நாடு திரும்பியபின் போராட்டக் குழுவினரைச் சந்திப்பார் என அவர் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக இந்த மாதம் ஏழாம் தேதி பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது.தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில், சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூடங்குளம் போராட்டக் குழுவினரும், தில்லியில் பிரதமரைச் சந்தித்தபொழுது, பராமரிப்புப் பணிகள்தான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது என்று பிரதமர் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இன்னும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்படாமல் இருக்கும்பொழுது, அங்கு பராமரிப்புப் பணிக்கு என்ன தேவை என்று ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை?
இடிந்தகரையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து 12 நாள்கள், 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, தினமும் 10,000-க்கு மேல் மக்கள் திரளாகப் போராடியதைத் தாற்காலிகமாக நிறுத்துவதற்குத்தான் மத்திய, மாநில அரசுகள் இப்படிப் பசப்பு உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனவா?1985-ல் திட்டமிடப்பட்டு, 1988-ல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக இருந்தபொழுது ராஜீவ் காந்தி கோர்பச்சேவ் ஒப்பந்தத்தில் ரஷியத் தொழில் நுட்பம் மூலம் அணுமின் உற்பத்திக்குக் கூடங்குளம் திட்டம் கையெழுத்திடப்பட்டது. அப்பொழுதே போராட்டங்கள் எழுந்தன. அந்தச் சூழலை அறிந்து பிரதமர் ராஜீவ் காந்தி தொடக்க விழாவுக்கு வரமுடியாத நிலையும் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அமைந்த ஆளுநர் ஆட்சியில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணங்களை பலமுறை மேற்கொண்டார். இந்தப் பிரச்னை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸýக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பயந்து சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தது.இந்தப் பிரச்னையில் உள்ள அபாயங்களை அறியக் குழு அமைத்து முடிவுக்கு வரவேண்டும் என 1989-ல் அமைந்த திமுக அரசு குறிப்பிட்டது. இதற்கிடையில் சோவியத் யூனியன் சிதறுண்டு பல்வேறு நாடுகளாகப் பிரிந்தது. இதனால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.கிடப்பில் போடப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை, 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த பிறகு மீண்டும் உயிர் பெற்றது. 1997-ல் தேவெ கௌட பிரதமராக இருந்தபொழுது, இரண்டாவது ஒப்பந்தம் கையொப்பமானது. அதற்குப் பிறகு பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. ரூ.13,500 கோடித் திட்ட மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்பட இருந்தது.கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கும்பொழுது மக்களின் கருத்துகளை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், இதுகுறித்தான முழு விவரங்களை மக்களுக்குப் புரிதலோடு சொல்லவுமில்லை.
கூடங்குளம் வட்டார மக்களுக்கு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் கிடைக்குமென்றும் உறுதிமொழிகள் கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தால், இவ்வட்டார மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், அது எதுவும் நடைபெறவில்லை.உள்ளூரைச் சேர்ந்த வெறும் 35 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள் எல்லாம் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீரும் வரவில்லை. சமீபத்தில் அப்பகுதி மக்களிடம் பேரிடர் வகுப்புகள் நடத்தப்பட்டபொழுது, ஆபத்து வந்தால் மூக்கு, கண், காது ஆகியவற்றை அடைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என சொல்லியபொழுதுதான், அங்குள்ள மக்கள் பீதியுடன் விழித்துக் கொண்டனர்.அதன் பின்தான் முச்சந்தி, டீக்கடை பிரசாரமாக இருந்த நிலை மாறி, போர்க் குணத்தோடு பொதுமக்கள் எழுந்தனர். அதற்குப் பிறகுதான் கூடங்குளம் பகுதி மக்களின் உரிமைக்குரல் சென்னை கோட்டைக்கும், தில்லி செங்கோட்டைக்கும் கேட்கத் தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாவது தலைமுறையின் தொழில்நுட்பத்தால் இத்திட்டம் நிறுவப்படுவதால் ஆபத்து இல்லை என்று இந்த அணுமின் நிலைய இயக்குநர் பாலாஜி கூறினாலும், அது வெறும் ஒப்புக்குச் சொல்கிற வாதமாகத்தான் உள்ளது. வேறு சில அணு விஞ்ஞானிகளும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளைச் சொன்னாலும், இயற்கையை எதுவும் விஞ்ச முடியாது என்பதுதான் நியதி. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் 3,50,000 பேர் அங்கிருந்து வெளியேறினர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர் வீச்சால் லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். புற்றுநோய் வந்து தொடர்ந்து மரண வாயில்வரை சென்றவர்கள் பலர்.
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைவிட 40 மடங்கு செர்னோபில் கதிர்வீச்சு அதிகமானது. செர்னோபில் கதிர் வீச்சு தாக்கம் இன்றும் உக்ரைனில் உள்ளது. அந்த நாட்டில் பெறப்பட்ட தொழில் நுட்பம் நமது நாட்டுக்கு மட்டும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? இந்த நாசகார சக்தியை நாமே நமக்காக வாங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி.உலக அளவில் நாடுகள் அணு உலை வேண்டாம்; முடிந்த அளவு காற்றாலை, சூரிய சக்தி, கடல், குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியுமா என நினைக்க ஆரம்பித்துவிட்டன. சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அணு உலைகளைத் தவிர்க்க வேண்டுமென கூறுகின்றன.பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலைத் திட்டத்துக்குத் தாங்கள் கொண்டிருந்த ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன.20 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து, 1000 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலைகளினாலான மின் உற்பத்தி வெறும் 4 சதவீதம் என்பதற்காக ஜெர்மனி 2022-க்குள் அனைத்து அணு உலைகளையும் மூட முடிவு செய்துவிட்டது. அப்படிப்பட்ட ஆபத்தான அணு உலைகளை நாம் மட்டும் அமைக்க வேண்டுமா?
கடந்த 2011 மார்ச்சில் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமியால் யுரேனியம் உருகி, கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் நீரில் அணு உலைகள் மூழ்கிய பின்னும் வெப்பத்தின் தாக்கத்தால் மனித இனம் அழிந்ததை மறக்க முடியுமா? இன்றுவரை கதிர்வீச்சால் புகுஷிமாவில் மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்ற செய்தி வந்தவண்ணம் உள்ளது. விஞ்ஞானத்தில் மேம்பட்ட நாடுகளே பாதிக்கப்படும்பொழுது, நமக்கு அபாயகரமான இந்தச் சூழல் தேவைதானா என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி.கூடங்குளம் அணு உலையில் 3.5 சுற்றளவு கொண்ட உருளைகளில் யுரேனியம் அடைக்கப்பட்டு உலைகளின் மத்தியில் வைக்கப்படுகின்றது. அதிலிருந்து அணு பிளப்பதால் அதிக வெப்பம் வெளிப்படும். இந்த வெப்பத்தை நீரில் செலுத்தி, அதிலிருந்து ஜெனரேட்டரில் உள்ள மின்காந்தக் கம்பிகள் மூலம் மின்சாரம் பெறப்படும். ஓர் அணு பன்மடங்கு பிளந்துகொண்டே இருப்பதால், யுரேனியம் உள்ள உலையிலிருந்து அதிகமாக வெப்பம் உருவாகும். தற்போது இந்த உலைகளைக் குளிர்விப்பதற்காகத் திரவ உலோகம் பயன்படுத்தப்படும்.இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய கழிவுகள் வெளியேறும். யுரேனிய உருளை சுமார் 18 மாதங்களுக்கொருமுறை மாற்றியாக வேண்டும். இவற்றால் கதிரியக்கம் ஏற்படும். அதனால் அந்தக் கழிவுகளை எங்கே விடுவது என்கிற கேள்வி எழுகிறது. அவற்றை ஒன்று மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது கடலின் ஆழத்தில் கொண்டு போய்விட வேண்டும். இருப்பினும்கூட, அதன் தாக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து கொண்டே இருக்கும். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.ஒருபக்கம் அணு ஆலை வெடித்தாலோ, சேதமானாலோ பெரும் ஆபத்து உண்டாகும். அதேபோல இந்த ஆலை செயல்பட ஆரம்பித்தால் வெளியேறும் அணுக் கழிவுகளாலும் பெரும் பிரச்னை ஏற்படும். முதலில் அணுக் கழிவுகள் ரஷியாவுக்குக் கொண்டு செல்லப்படும் எனவும், பின்னாளில் அது இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் எனக் கூறுகின்றனர். இது சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏதோ ஒப்புக்குச் சமாதானம் செய்யக் கூறப்படும் வார்த்தைகளாகத்தான் தெரிகிறது.வெளியேறும் 900 டன் கழிவுகளைப் பாதுகாப்பது பெரும்பாடாகும்.
இதை 24,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். சாதாரண சின்ன அளவு புளூட்டோனியத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களுக்குப் புற்றுநோய் மட்டுமல்லாமல், வேறு ஆபத்துகளும் ஏற்படும் என்கிறார்கள்.இந்தக் கழிவுகளை பலமான கான்கிரீட் தொட்டிகள் அமைத்து பூமிக்குக் கீழே புதைத்தாலும் கதிரியக்கம் தணியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருபக்கம் அணு உலையால் பயங்கர விபத்து ஏற்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள்; மறுபக்கத்தில் அணு உலை செயல்பட்டு அதனால் வரும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள்.இப்படிப் பிரச்னைகளை நாம் வலியப்போய் விலைகொடுத்து வாங்கத்தான் வேண்டுமா என்பதற்குச் சரியான பதில் கிடையாது.நெல்லை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை ஓரத்திலிருந்து சுரண்டைவரை நில அதிர்வுகளும், பூமிக்குக் கீழ் வெப்பப் பாறைக் குழம்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் உள்ளன. அவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூடங்குளத்துக்கும் சேர்ந்துதான் அந்தப் பாதிப்பு வரும். நான்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மனும், மகேந்திரகிரியில் உள்ள அணு மின் சம்பந்தமான கேந்திரமும் அருகில் உள்ளன.இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் அதனால் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல பாதிக்கப்படும் அபாயம் நிறையவே உள்ளது. அதன் தொடர் பாதிப்பு, வடக்கே மதுரை, தெற்கே இலங்கை, மேற்கே திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை என மீள முடியாத சோகத்துக்கு நாம் ஆள்பட நேரிடும். போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த நச்சுவாயுக் கசிவிலிருந்து இன்றுவரை நாம் மீள இயலவில்லை என்பதை நாம் எப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியும்?தொலைவிலிருந்து அணு உலை குறித்து ஆயிரம் சமாதானங்கள் சொல்லலாம். கூடங்குளத்தில் நடைபெற்ற சாதாரண சோதனை ஓட்டத்துக்கே அந்த வட்டார மக்கள் பயந்தனர். குழந்தைகள் கதறி அழுதனர். இப்படி தினமும் சகிக்க முடியாத சத்தம் கேட்டால் எப்படி மக்கள் கூடங்குளம் பகுதியில் வாழ முடியும்?மேற்கு வங்கத்தில் ரஷிய நாட்டின் அணு மின் நிலையம் வருவதை மம்தா பானர்ஜி நிறுத்திவிட்டார்.
கேரளத்தில் மக்கள் எழுச்சியால் அணு மின் நிலையம் வருவது தடைப்பட்டது. ஆந்திரத்திலும், மகாராஷ்டிரத்திலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன. அவ்வாறு இருக்கும்பொழுது நாம் மட்டும் கூடங்குளத்துக்கு ஆமாம் சாமி போடுவது சரிதானா?அதெல்லாம் போகட்டும். தங்களது மாநிலத்தில் அணுமின் நிலையம் அமைந்து அதன் பாதிப்பை எதிர்கொள்ளக் கேரளமோ, கர்நாடகமோ, ஆந்திரமோ தயாராக இல்லை. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கத் தமிழகம் ஏற்றுக்கொண்டு, தென் மாவட்ட மக்களின் நல்வாழ்வை அந்த அணு உலைகளில் ஏற்படும் பாதிப்பு பல தலைமுறைகளைப் பாதிக்கும் ஆபத்தை வலிந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் முழுமையாகத் தமிழகத்துக்கு மட்டுமானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை. தென்னக மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.அதாவது, கூடங்குளத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும். பாதிப்பு தமிழகத்துக்கும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கும் மட்டும். எப்படி இருக்கிறது கதை?