Total Pageviews

Blog Archive

Friday, 6 January 2012

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 70 பேர் பலி

பாக்தாத் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகு நடந்த தாக்குதல்களில் மிக பயங்கர தாக்குதல் நேற்று நடந்தது. ஒரே நேரத்தில் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 70 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  ஈராக் அதிபர் சதாம் உசேன், அணுஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார், ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தார் என்ற குற்றச்சாட்டுகளை கூறி கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் ஈராக்கில் ஊடுருவின. 

அதன்பின், சதாம் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின் அவர் தூக்கிலிடப்பட்டார். எனினும், அமெரிக்க படைகள் அங்கேயே தங்கி, தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டது. இந்நிலையில், அமெரிக்கா தனது படையை கடந்த மாதத்துடன் முற்றிலும் வாபஸ் பெற்றது. அது முதல் ஈராக்கில் அரசுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன. இரு பிரிவினரிடையே அதிகார போட்டி நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகுபா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். இந்த நிலையில், நாசிரியா நகரில் மத யாத்ரீகர்கள் மீது குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 44 பேர் உடல் சிதறி பலியாகினர்.

 அடுத்த சில மணி நேரத்தில் தலைநகர் பாக்தாத் உட்பட சில இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் சிக்கி 26 பேர் இறந்தனர். மாநில அரசு இணைய தளத்தில், ‘கர்பாலா புனித நகரை நோக்கி யாத்ரீகர்கள் நடந்து சென்றபோது சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க படை வெளியேறிய பிறகு உள்நாட்டு குழப்பம், அரசியல் நிலையற்றதன்மை, தொடர் தீவிரவாத தாக்குதல் என ஈராக் முழுவதும் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.