Total Pageviews

Blog Archive

Friday, 6 January 2012

'பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது'

பாகிஸ்தானில் இராணுவ புரட்சி ஏற்படாது என்று அந்நாட்டு இராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் தற்போதைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, இராணுவம் ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டியதாகவும், இதற்கு பதிலடியாக அவ்வாறு இராணுவம் ஆட்சியை கைப்பற்றினால் அமெரிக்க இராணுவத்தை அனுப்பி அதனை முறியடிக்க வேண்டும் என்று அதிபர் சர்தாரி, அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் செய்தி வெளியானது. 

இது குறித்த தகவல் வெளியானதிலிருந்தே பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. 

இந்நிலையில்,பாகிஸ்தானில் இராணுவ புரட்சியோ அல்லது முன்கூட்டியோ தேர்தல் வராது என கயானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க இராணுவ தலைமை தளபதி பர்வேஷ் கயானியும், இதர உயர் இராணுவ அதிகாரிகளும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

தற்போது பதவி வகிக்கும் அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) வரை உள்ளது. எனவே இந்த ஆட்சி தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்க இராணுவ அதிகாரிகள் விரும்புவதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.