ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே நேற்று (ஜன.5) ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் கடந்த டிசம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்டு அங்கிருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டன. தலைநகர் பாக்தாத் அருகே நேற்று ஷியா பிரிவினரை குறி வைத்து கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாக்தாத் அருகேயுள்ள காதிமியா என்ற இடத்தில் ஷியா பிரிவினர் அதிக அளவில் வசிக்கின்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 27 பேர் உயிர் இழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் பாக்தாத் அருகேயுள்ள அர்பாசீன் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதி குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினான்.
அதில், 45 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் கர்பாலா நகரில் உள்ள தங்கள் வழிபாட்டு தலத்துக்கு ஊர்வலமாக சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், சன்னி பிரிவை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
கார் குண்டு தாக்குதல்கள் குறித்து ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் குவாசிம் அல் மவுசவி கூறும்போது, மக்களிடையே பீதியையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதற்கிடையே, தாக்குதல்கள் நடந்த இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.