வாஷிங்டன் : அமெரிக்க அரசின் இணையதளத்தில் இந்தியா குறித்த வரைபடம் தவறாக குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவற்றை சரி செய்து புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தியாவின் வரைபடமும் இடம் பெற்றுள்ளது. இதில், இந்தியாவின் எல்லைகள் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தன. குறிப்பாக, காஷ்மீர், பாகிஸ்தான் பகுதியில் இருப்பது போன்று, வரைபடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரைபடத்தில் இடம் பெற்றிருந்த தவறுகள் சரி செய்யப்பட்டு, புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலான்ட் கூறுகையில்,"சரி செய்யப்பட்ட புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். காஷ்மீர் குறித்த விவாரத்தில் எங்களுக்கு எதுவும் தொடர்பு இல்லை. வரைபடம் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது' என்றார்.